சமூகம்
Published:Updated:

‘கட்சியை வளர்க்க கலவரம் நடத்து!’

‘கட்சியை வளர்க்க கலவரம் நடத்து!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘கட்சியை வளர்க்க கலவரம் நடத்து!’

ப.திருமாவேலன்

மீண்டும் மீண்டும் பெரியார் மையப்புள்ளி ஆகிக் கொண்டிருக்கிறார். இல்லை, அவரை மையப்புள்ளி  ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை அருகே பெரியாரின் சிலையில் தலை உடைக்கப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால், ‘திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல, தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா சிலை உடைக்கப்படும்’ என்று பி.ஜே.பி தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா தூண்டி விட்டார். பின்னர், அந்த ‘மாவீரர்’ மன்னிப்புக் கேட்டார். ‘‘நான் அதைச் செய்யவில்லை, என் அட்மின் செய்துவிட்டார்’’ என்றார் அவர். பிராக்ஸி வாழ்க்கை எவ்வளவு மோசடித்தனமான அரசியலுக்கு வழிவகுத்தது என்பதையும் பார்த்தோம்.

பெரியாரை விமர்சிக்கலாம். தவறில்லை. அவரே விமர்சனங்களை ஏற்றுக்கொண்டவர்தான். தன்னை விமர்சித்து தனது மேடையில் மற்றவர்கள்  பேசியபோது,  காது கொடுத்துக் கேட்டுவிட்டு, அந்த விமர்சனங்களுக்குப் பொறுமையாகப் பதில் சொன்னவர் அவர். ‘‘இது என்னுடைய கருத்து. உங்கள் புத்திக்கு சரி என்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னவர் அவர். இன்னும் சொன்னால், தன்னைத் தானே விமர்சித்துக்கொண்ட தலைவர் அவர். ‘‘நான் எப்போது என்ன முடிவெடுப்பேன் என்று எனக்குத் தெரியாது. எனவே, கண்ணை மூடிக்கொண்டு என்னைப் பின்பற்றாதீர்கள்’’ என்றவர் அவர். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல பெரியார். அதற்காக, ‘அவரது சிலையை உடைப்போம்’ என்று கிளம்புவதன் நோக்கம், கலவரங்களின் மூலமாக கட்சியை வளர்க்கப் பார்ப்பது. கட்சியை வளர்க்க வேறு எதுவும் கிடைக்காததால், கலவரத்தை மூலதனமாக மாற்றுவது.

‘கட்சியை வளர்க்க கலவரம் நடத்து!’

வாயைத் திறந்தால் ‘வளர்ச்சி’ என்று பேசுபவர்களுக்கு எதிரான வார்த்தை ‘கலவரம்’ என்பது. கலவர பூமியில், அமைதியற்ற இடத்தில், எவரும் பணம் போட்டுத் தொழில் தொடங்க மாட்டார்கள். பிஜே.பி-யை ஆதரிக்கும் தொழிலதிபர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதைத்தான் காந்தியின் பேரனும் ராஜாஜியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி சொன்னார். ‘‘இது ஓங்கித் தள்ளு இயக்கம்’’ என்று பெயர் சூட்டினார். ‘‘தாங்கள் நினைத்தால் எதை வேண்டு மானாலும் செய்யலாம் என்ற ஆணவம்  பி.ஜே.பி ஆதரவாளர்களுக்கு ஏன் வருகிறது? எதைச் செய்தாலும் நம்மை யாரும் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற துணிச்சல் எப்படி வருகிறது? அப்படியே அரசு வழக்குத் தொடுத்தாலும், ‘செய்ய நினைத்த வேலையைச் செய்து முடித்துவிட்டோம்’ என அவர்களுக்கு ஏற்படும் திருப்திதான் இவற்றுக்கெல்லாம் காரணமா?” என்று அவர் கேட்டார்.

திரிபுராவில் லெனின் சிலை, தமிழ்நாட்டில் பெரியார் சிலை, உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை, கேரளாவில் காந்தி சிலை என்று உடைக்கப்பட்ட சிலைகளெல்லாம் பி.ஜே.பி-யின் அரசியலுக்கு எதிரான மனிதர்களின் முகங்களாக இருப்பதைப் பார்க்கும்போது, இந்தச் சதியின் உள்ளடக்கத்தையும் உச்சகட்டத்தையும் உணர முடிகிறது. ‘எதையும் புதிதாக உருவாக்குவதை விட, உடைப்பது மேல்’ என்று நினைப்பவர்களின் கையில் அதிகாரம் போய்விட்டதுதான் ஆபத்தானது.

இவற்றுக்கு எதிர்வினையாக பூணூலை அறுப்பது, காரைக் கொளுத்துவது, மடத்தின்மீது கல் வீசுவது போன்றவை இந்தப் பக்கத்திலிருந்து செய்யப்படுகின்றன.  ஹெச்.ராஜாக்கள் மீதான கோபத்தை சாமான்யர்களிடம் காட்டுவதா வீரம்? ‘அது நடந்தால் இது நடக்கும்’ என்பது தெரியும். தெரிந்தே ஏன் செய்கிறார்கள் என்றால், இதுவும் அதுவும் நடக்கட்டும் என்பதால்தான். எதைச் செய்தாவது இந்துத்துவ விவாதங்களை அணையாமல் வைத்துக்கொள்வதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதும்தான் ஒரே நோக்கம். அது, எதிர்மறை விளைவுகளைத் தருவதுதான் மதவாதத்தின் வருத்தம்.

சிலையை உடைப்பதன் மூலமாக பெரியார் மேலும் மேலும் உரம் பெறுகிறார் என்ற யதார்த்தத்தைக்கூட இவர்களால் உணர முடிய வில்லை. ‘‘கூலிகளும் காலிகளும் கல்லெறிவதோ, காலித்தனம் செய்வதோ எனது பொதுவாழ்வில் புதிதல்ல. இதனால், எனது பொதுவாழ்வு பெருமையோ மதிப்போ இழந்து போய்விடவில்லை. பொதுத்தொண்டில் ஈடுபடுகிறவர்கள், அதில் மான அவமானம் ஏற்பட்டால் அதுபற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. பொது வாழ்வில் மானம் பார்த்தால், அதனால் விளையக் கூடிய பலன், பயனற்றதாக ஆகிவிடும்’’ என்று பெரியாரே பேசியிருக்கிறார்.

‘‘தமிழ் பழைமையான மொழி என்பதற்காக, அந்த இலக்கியங்களில் சொல்லப்பட்ட கருத்து களை அப்படியே பின்பற்றாதே’’ என்பதுதான் பெரியாரின் கருத்து. ‘வள்ளுவத்தில் அறநெறிக் கருத்துகள் இருந்தாலும் பெண்ணடிமைக் கருத்துகள் இருக்கின்றன’ என்றுதான் பெரியார் சொல்ல வந்தார். ‘‘இந்தியை உன் தலையில் கட்டிவிட்டு, உயர் சாதிக்காரர்கள் ஆங்கிலம் படித்து முன்னேறி விடுகிறார்கள். இந்தச் சதியில் சிக்கிக் கொள்ளாதே. தாய்மொழியுடன் சேர்த்து ஆங்கிலம் படி. அதுதான் முன்னேற்றத்துக்கான வழி’’ என்று பெரியார் சொன்னார். ஆனால், ‘தமிழை விமர்சித்தார்’, ‘வள்ளுவரை விமர்சித்தார்’ என்று பி.ஜே.பி-க்கு உள்ளிருந்தே பெரியாரிய ஆய்வாளர்கள் கிளம்பிவிட்டார்கள். ‘இப்படிப் பட்ட பெரியாருக்குச் சிலை வைக்கலாமா?’ என்று கேட்கப்படுகிறது. இவையெல்லாம் தமிழ்ப்பற்றின் காரணமாகக் கேட்கப்படுபவை அல்ல; பெரியார் மீதான வெறுப்பால் கேட்கப்படுபவை. இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பெரியார், தான் வாழ்ந்த காலத்திலேயே பதில் சொல்லிவிட்டார். தான் சொன்னது எதையும் அவர் அழிக்கவில்லை. அவரே புத்தகமாகப் போட்டு அழியாமல் பாதுகாத்து வைத்திருந்தார். அட்மின்கள் வைத்துக் கொள்ளவில்லை. தனது பத்திரிகையில் எவர் எழுதினாலும் தனது கருத்துதான் என்றார்.

பெரியார் விதைத்துச் சென்ற உரத்தால் பக்குவம் பெற்ற மண்ணில், வகுப்புவாத விதை முளைக்கவில்லை என்ற கசப்பால், காந்தாரியைப் போய் அடிவயிற்றில் சிலர் அம்மிக் குழவியைக் கொண்டு இடிக்கிறார்கள். அந்த உடைந்த கல்லிலிருந்து சிலைகள் உருவாகும். என்ன செய்வது, அந்தச் சிலைக்குச் சக்தி இருக்கிறதே!

படம்: ஆ.மணிகண்டன்