Published:Updated:

‘மின்சாரம் இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன பிரதமரே!’

‘மின்சாரம் இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன பிரதமரே!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘மின்சாரம் இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன பிரதமரே!’

துயரத்தில் தமிழக மலைக் கிராமங்கள்

ணிப்பூர் மாநிலத்தில் உள்ள மலைக் கிராமமான லெய்சாங் மின் வசதி பெற்றதையடுத்து, ‘இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி செய்யப்பட்டுவிட்டது’ என்று பெருமையுடன் அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், ‘இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இது வரலாற்றுச் சாதனை நாள்’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மலைக்கிராமத்துக்கு மின்வசதி கிடைத்தது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், ‘இந்தியாவிலேயே மின்வசதி இல்லாமல் இருந்த கடைசிக் கிராமம் இதுதான். இந்தக் கிராமத்துக்கு மின்வசதி அளித்துவிட்டதால், இந்தியாவில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்வசதி வழங்கப்பட்டுவிட்டது’ என்று பிரதமர் சொல்வது உண்மையல்ல.

தமிழகத்திலேயே தர்மபுரி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் மின்வசதி இல்லாத மலைக்கிராமங்கள் இன்னும் உள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் துயரங்கள் குறித்த நேரடி ரிப்போர்ட் இது...

ஊரைவிட்டே வெளியேறிய மக்கள்!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் மறுகரையில் உள்ள மாறுகொட்டாய், ஆலம்பாடி ஆகிய கிராமங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே மின்வசதி கிடைக்கப் பெறாதவை. ‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி’ என்ற காரணத்தைச் சொல்லி, இங்கு வாழும் மக்களுக்கு மின்சார வசதியை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் சின்னாறு அணையை அடுத்த பெரிய கள்ளிப்பட்டி மலைக்கிராமத்திலும், இன்றுவரை மின்சாரம் இல்லை. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இந்தக் கிராமத்தில் இனி வாழ முடியாது என்ற விரக்தியில், பல குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறிவிட்டன. இப்போது 20 குடும்பங்களைச் சேர்ந்த வயதானவர்கள் மட்டுமே இங்கு உள்ளனர். இரவில் சிம்னி மற்றும் லாந்தர் விளக்குகளைப் பயன்படுத்தும் இவர்கள், காட்டு விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, கிராமத்துக்கு நடுவே தீ மூட்டிக் காவல் காப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

‘மின்சாரம் இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன பிரதமரே!’

15 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்ட கலெக்டராக இருந்த சந்திரசேகர், இவர்களின் துயரங்களைப் பார்த்துவிட்டு, 35 லட்ச ரூபாய் செலவில் ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். அது, முறையாகப் பராமரிக்காத காரணத்தால் இப்போது பழுதடைந்து கிடக்கிறது. பல முயற்சிகளுக்குப் பின், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் வழங்குவதாகச் சொல்லி மின்கம்பங்களைக் கொண்டுவந்து நட்டனர். ஆனாலும், இன்றுவரை மின் இணைப்புக் கொடுக்கப்படவில்லை.

இதுகுறித்து தர்மபுரி தொகுதி எம்.பி அன்புமணியிடம் பேசினோம். ‘‘தமிழகத்தில் உள்ள மாறுகொட்டாய், ஆலம்பாடி, பெரிய கள்ளிப்பட்டி உள்பட இந்தியா முழுவதும் எத்தனையோ கிராமங்கள் இன்னும் மின்சார வசதி கிடைக்காமல் உள்ளன. பலமுறை எங்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தியும், இன்றுவரை இந்தக் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கவில்லை. யதார்த்தம் இப்படியிருக்கும்போது, பிரதமர் மோடி எதை வைத்து இப்படி அறிவித்தார் என்று புரியவில்லை” என்றார் வருத்தத்துடன்.

‘மின்சாரம் இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன பிரதமரே!’

மின் பாதை அருகில் இருந்தும்...

‘‘கோவை மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில், 60 சதவிகித கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளடைந்து கிடக்கின்றன’’ என்கிறார், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பரமசிவம். ‘‘பொள்ளாச்சி, வால்பாறை, மானாம் பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் கூமாட்டி, நாகரூத்து, கோழிக்கமுத்தி, சின்னார்பதி, சர்க்கார்பதி, நவமலை உள்ளிட்ட 17 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், 300-க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவற்றில் 14 கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை. மலைக்கிராமங்களைச் சுற்றி மூன்று மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதில், பரம்பிக்குளம் மின்உற்பத்தி நிலையத்துக்கான மின் பாதை, பழங்குடி கிராமங்களின் வழியாகத்தான் செல்கிறது. மின்உற்பத்தி நிலையங்களில் எழுப்பப்படும் ஒலி, அந்த மக்களின் இரவுத் தூக்கத்துக்கு இடையூறாக உள்ளது. ஆனால், அந்த மின்சாரம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை’’ என்று வேதனையுடன் சொன்னார் பரமசிவம்.

இந்த மலைக்கிராமங்களில் உள்ள பழங்குடி குழந்தைகள், மண்ணெண்ணெய் விளக்கில்தான் படிக்கின்றனர். பெரும்பாலான வீடுகளில் கதவுகள் இல்லை. இதனால், வன விலங்குகள் தாக்கும் அபாயத்தில் வாழ்கின்றனர். அதே பகுதிகளில் உள்ள வனத்துறை அலுவலகங்கள் மற்றும் வனத்துறையால் நடத்தப்படும் விடுதிகளுக்கு மட்டும் தடையற்ற மின்சாரம் செல்கிறது. வேட்டைத்தடுப்புக் காவலர்களாகவும், தீத் தடுப்புக் காவலர்களாகவும் இருந்து பழங்குடி மக்கள்தான் வனத்தைப் பாதுகாக்கின்றனர். ஆனால், அவர்களுக்கான எந்த அடிப்படை வசதிகளையும் அரசு செய்து தரவில்லை.

‘மின்சாரம் இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன பிரதமரே!’

வீணாகும் கணினிகள்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கத்திரிமலை, மல்லியம்மன் துர்க்கம், ராமர் அணை ஆகிய மூன்று மலைக்கிராமங்கள் மின்வசதி இல்லாமல், காலம் காலமாக இருளில்தான் கிடக்கின்றன. பர்கூர் ஊராட்சியில் உள்ள கத்திரிமலை கிராமம், மலை உச்சியில் உள்ளது. இந்தக் கிராமத்துக்குச் சாலை வசதியும் இல்லை. காட்டுப்பகுதியில் செங்குத்தாக 8 கி.மீ நடந்துதான் செல்ல முடியும். பொருள்களை எடுத்துச் செல்வதற்கு, கழுதையைத்தான் இப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த 85 குடும்பத்தினர் இங்கு வசிக்கின்றனர். பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படும் நடுநிலைப் பள்ளியில் 50 குழந்தைகள் படிக்கின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இந்தப் பள்ளிக்கு ஐந்து கணினிகள், ஒரு எல்.சி.டி புரொஜக்டர் வழங்கியுள்ளனர். மின்வசதி இல்லாத காரணத்தால், இவை ஐந்து வருடங்களாக வீணாகக் கிடக்கின்றன.

சத்தியமங்கலம் வட்டம் கடம்பூர் மலையில் குத்தியாளத்தூர் ஊராட்சி எல்லையில் உள்ளது மல்லியம்மன் துர்க்கம். மலை உச்சியில் இருக்கும் இந்தக் கிராமத்துக்கும் மின்வெளிச்சம் போய்ச் சேரவில்லை. இங்கு பழங்குடி இனத்தைச் சேர்ந்த 120 குடும்பத்தினர் வசித்து வரும் இந்தக் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 30 மாணவர்கள் படிக்கிறார்கள். தாளவாடி வட்டம் தலைமலை ஊராட்சியில் இருக்கும் ராமர் அணை கிராமத்தில், 14 பழங்குடிக் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கும் மின்வசதி இல்லை.

சுடர் அமைப்பின் இயக்குநர் எஸ்.சி.நட்ராஜிடம் பேசினோம். “இந்தக் கிராமங்கள் மலை உச்சியில் உள்ளன. எனவே, மின் இணைப்பு தர நிறைய செலவாகும் என அரசுத் தரப்பில் சொல்கிறார்கள். சூரிய மின்சார வசதியையாவது செய்துகொடுத்திருக்கலாம். பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய பகுதி என்பதால், இந்தக் கிராமங்களை அரசு புறக்கணிக்கிறதா? குறைந்த வாக்குகள் உள்ள பகுதிகள்தானே என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களா? சக மனிதர்களாகப் பார்த்து, மற்றவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வசதிகளும் இவர் களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்” என்றார்.

‘மின்சாரம் இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன பிரதமரே!’

பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன், “வனப்பகுதிகளுக்குள் மின்சாரம் செல்வதை அரசே பல இடங்களில் தடை செய்துள்ளது. வனவிலங்குகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களுக்காக அங்குள்ள அரசு அலுவலகங்கள்கூட மின்சாரம் இல்லாமல் உள்ளன. இதுபோன்ற பகுதிகளுக்கு சூரிய மின்சாரம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்திலும், வனக் கட்டுப்பாடுகள் இல்லாத கிராமங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப் படும். சில மலைக் கிராமங்களுக்கு மின் வசதி அளிக்கப்படவில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்தத் திட்டம் முழுமையடையவில்லை என்று சொல்வதை ஏற்க முடியாது. இதுவரை ஆட்சி செய்தவர்கள், இத்தனைக் காலம் மின்சாரம் கொடுக்காத பல கிராமங்களுக்கு, இந்த நான்கு ஆண்டுகளில் பி.ஜே.பி அரசு மின்சாரம் கொடுத்துள்ளது. விட்டுப்போன கிராமங்களின் பட்டியலை எங்களிடம் தாருங்கள். மத்திய மின்துறை அமைச்சரைச் சந்தித்து, தமிழக    பி.ஜே.பி சார்பில் வலியுறுத்துகிறோம்” என்றார்.

இந்தப் பட்டியல் முன்பே போயிருந்தால், ‘வரலாற்றுச் சாதனை’ என்றெல்லாம் அவசரப்பட்டுப் பேசியிருக்க மாட்டார் பிரதமர்.

- இரா.குருபிரசாத், எம்.வடிவேல், நவீன் இளங்கோவன்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி