Published:Updated:

''சபரிமலை விவகாரத்தில், பா.ஜ.க-வினர் அரசியல் செய்கிறார்கள்!'' - சொல்கிறார் தோழர் முத்தரசன்

''சபரிமலை விவகாரத்தில், பா.ஜ.க-வினர் அரசியல் செய்கிறார்கள்!'' - சொல்கிறார் தோழர் முத்தரசன்
''சபரிமலை விவகாரத்தில், பா.ஜ.க-வினர் அரசியல் செய்கிறார்கள்!'' - சொல்கிறார் தோழர் முத்தரசன்

பரிமலை விவகாரத்தில், கேரள அரசின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பரபரப்பை பற்றவைத்திருக்கிறது கேரள பா.ஜ.க.!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கேரளாவில் மத அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தன. கடந்த வாரம் உச்சக்கட்டத்தை அடைந்த இந்தப் போராட்டம், ஆங்காங்கே கலவரத்தையும் உண்டு பண்ணியது. கோயிலுக்குச் செல்லும் பெண் பக்தர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறின. இதையடுத்து கேரள அரசு, கலவரக்காரர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. இதுவரை 1400 பேர்களுக்கும் மேல் கைதாகியுள்ளனர். மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநில பா.ஜ.க., ''கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களால் நடத்தப்படும் இந்த அரசு, ஐயப்பன் கோயிலின் புனிதத்தைக் கெடுக்கிறது. அரசின் கைது நடவடிக்கையும் ஒருதலைப்பட்சமானது'' என்பதாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மேலும், கேரள அரசின் கைது நடவடிக்கையைக் கண்டித்து இன்றைய தினம் பேரணியும் நடத்துகிறது.

இதுகுறித்து, தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினரும் மாநில கலை - கலாச்சாரப் பிரிவின் செயலாளருமான அழகன் தமிழ்மணியிடம் பேசினோம்... ''தேசியமும் தெய்விகமும்தான் இனி இந்தியாவின் பாதை. ஆன்மிக நம்பிக்கை கொண்ட பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, மக்களின் உணர்வை மதிக்கும் வகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று கூறி நாங்கள் போராட்டம் நடத்திவருகிறோம். ஆனால், கேரள கம்யூனிஸ்ட் அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில், எண்ணற்ற இந்து மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறது. 

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி எங்கள் கட்சியினரோடு காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்தேதான் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இப்போது கேரள கம்யூனிஸ்ட் அரசு, பா.ஜ.க-வினரை மட்டும் குறிவைத்துக் கைது செய்துவருகிறது. காங்கிரஸ்காரர்களை வேண்டுமென்றே விட்டுவிட்டார்கள். இது திட்டமிட்ட சதி. வரவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க மிகப்பெரிய செல்வாக்கைப் பிடிக்கும் என்ற பயத்திலேயே கேரள கம்யூனிஸ்ட் அரசு, இதுபோன்ற திட்டமிட்ட சதிச் செயல்களை அரங்கேற்றிவருகிறது. கேரள பா.ஜ.க-மீது திட்டமிட்டு நடத்தப்படும் இந்தக் கைது நடவடிக்கை, அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலிலும் கம்யூனிஸ்டுகளுக்கு தோல்வியைத்தான் தரும்!'' என்றார் கொதிப்புடன்.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் கருத்து கேட்டோம்.... ''உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை பொறுப்புள்ள ஒரு மாநில அரசு, நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த வகையில், கேரள அரசு தீர்ப்பினை அமுல்படுத்துகிது. 'ஆண் பெண் என்ற பேதமின்றி, கடவுளை வழிபட நினைக்கும் பக்தர்கள் அனைவரும் சபரிமலை கோயிலுக்குச் செல்ல உரிமை உள்ளது' என்றுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறியுள்ளது. அந்த வகையில், கோயிலுக்குச் செல்ல விழையும் பெண் பக்தைகளை 'போகக்கூடாது' என்று சொல்லி தடுத்து நிறுத்த இவர்கள் யார்? 

எல்லாப் பெண்களுமே கோயிலுக்குப் போகவேண்டும் என்று தீர்ப்பு சொல்லவில்லை. கோயிலுக்குப் போகவிரும்பும் பக்தைகளைத் தடுக்கக்கூடாது என்றுதான் சொல்கிறது. எனவே, இதில் கடவுள் நம்பிக்கை பற்றிய எந்தப் பிரச்னையும் எழவில்லை. ஆனால், கேரளாவில் உள்ள மதவாத அமைப்புகள்தான், வேண்டுமென்றே இதனை மதப் பிரச்னையாகத் திரித்து, மக்களிடையே விஷக் கருத்துகளைப் பரப்பிவருகிறார்கள். குறிப்பாக அங்குள்ள பா.ஜ.க-வினர் தேவையற்றப் போராட்டங்களையும் கலகங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

பொறுப்புள்ள ஒரு மாநில அரசாக, கேரள கம்யூனிஸ்ட் அரசும் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருதி கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதையும்கூட அரசியலாக்கி லாபம் தேடப் பார்க்கிறார்கள் பா.ஜ.க-வினர். ஆனாலும்கூட கேரள பா.ஜ.க-வின் இந்தப் பொய் பிரசாரம் மக்களிடையே எடுபடாது!'' என்றார் உறுதியாக.

எல்லாம் வல்ல ஐயப்பன்தான் பாதிக்கப்படுவோருக்கு நல்வழி காட்ட வேண்டும்!