Published:Updated:

‘எடப்பாடிக்கும் தங்கமணிக்கும் பினாமி வேண்டும்!’

‘எடப்பாடிக்கும் தங்கமணிக்கும் பினாமி வேண்டும்!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘எடப்பாடிக்கும் தங்கமணிக்கும் பினாமி வேண்டும்!’

பதிவு போட்டவரை பதறித் தூக்கிய போலீஸ்

‘எங்களின் வளர்ச்சிக்காக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எஸ்.இறையமங்கலம் கிராமத்தில் சுமார் 116 ஏக்கர் நிலத்தை சுமார் 86 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளோம். கிரையம் செய்துகொள்ள பினாமி ஆள் இல்லை. யாராச்சும் இருந்தால் சொல்லுங்க’ என்று எழுதி, இதற்குக் கீழே முதல்வர் எடப்பாடி பழனிசாமி படத்தையும், மின் துறை அமைச்சர் தங்கமணி படத்தையும் போட்டு தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டார் மொளசி தேவம்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ். இதற்காக பள்ளிப்பாளையம் போலீஸார் அவரை மே 13-ம் தேதி இரவோடு இரவாகக் கைதுசெய்து திருச்செங்கோடு சப் ஜெயிலில் அடைத்துள்ளனர்.

இதுபற்றி தினேஷின் உறவினரும், கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலச் சங்கத்தின் மாநிலப் பொருளாளருமான வேலுச்சாமி, ‘‘இது ஊரறிந்த உண்மை. விட்டம்பாளையம் ஜமீனுக்கு 116 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதை அவர்களிடம் வேலை பார்த்தவர்கள் பல தலைமுறைகளாக பயிரிட்டு வருகிறார்கள். அவர்களை வெளியேற்ற முடியாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்தது. ஜமீன் வாரிசுதாரர்களிடம் ‘நிலத்தை எங்களுக்கு விற்பதாக இருந்தால் வழக்கை முடித்துக்கொடுக்கிறோம்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் தங்கமணி தரப்பிலிருந்து ஆட்கள் தலையிட்டனர். இப்போது வழக்கு ஜமீன் வாரிசு தாரர்கள் பக்கம் தீர்ப்பாகியுள்ளது. இதையடுத்து முதல்வர் தரப்பும் அமைச்சர் தரப்பும் நிலத்தை ரூ.86 கோடிக்கு வாங்கியதாக ஊரே பேசுகிறது. இதை தினேஷ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதினார்.

‘எடப்பாடிக்கும் தங்கமணிக்கும் பினாமி வேண்டும்!’

ஆனால், யாரும் புகார் கொடுக்காத நிலையில், பள்ளிப்பாளையம் போலீஸார் தினேஷைக் கைது செய்திருக்கிறார்கள். ‘யார் புகார் கொடுத்தது’ என்று நாங்கள் கேட்டபிறகு, குமரேசன் என்பவரி டம் புகார் வாங்கினார்கள். குமரேசனை நாங்கள் கேட்டால், ‘இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்கிறார். போலீஸ் அதிகாரிகளிடம் பேசியதற்கு, அமைச்சர் தங்கமணியிடம் பேசச் சொன்னார்கள். ‘அவரிடம் பேசவேண்டிய அவசியமில்லை’ என்ற பிறகு தினேஷை சிறையில் அடைத்து விட்டார்கள்’’ என்றார்.

விட்டம்பாளையம் ஜமீன் நிலத்தை பராமரித்து வருபவர்களில் ஒருவரான பெரியசாமி, ‘‘விட்டம் பாளையம் ஜமீன் பங்களாவில் எங்கள் மூதாதையர்கள் வேலை செய்துவந்தார்கள். அதனால் எங்கள் குடும்பங்களுக்கு 3 ஏக்கர், 4 ஏக்கர் என நிலம் கொடுத்தார்கள். மூன்று தலைமுறைகளாக எங்களைப் போல 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விவசாயம் செய்கிறோம். இப்போது நிலத்திலிருந்து வெளியேறச் சொல்லி மிரட்டிவருகிறார்கள்’’ என்றார்.

தினேஷின் மனைவி சியாமளா, ‘‘13-ம் தேதி வீட்டுக்குவந்து சாப்பிட்டுவிட்டு காட்டில் படுப்பதற்காகப் போய்விட்டார். காலையில் பார்த்தால் ஆளைக் காணவில்லை. பதற்றத்தோடு ஊர்முழுக்கத் தேடிவிட்டு, போலீஸில் விசாரித்தோம். அப்போதுதான் அவரை பள்ளிப்பாளையம் போலீஸார் பிடிச்சுட்டுப் போனதாகத் தகவல் தெரிந்தது. தப்பே செய்தாலும், குடும்பத்தில் சொல்லிட்டுத்தானே கூட்டிப் போகணும். கொலைகாரர்களைப் போல எப்படிக் கூட்டிட்டுப் போகலாம்?’’ என்றார். 

‘எடப்பாடிக்கும் தங்கமணிக்கும் பினாமி வேண்டும்!’

இதுபற்றி தினேஷ்மீது புகார் கொடுத்த குமரேசனி டம் கேட்டதற்கு, ‘‘இதுபற்றி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனில் பேசிக்கொள்ளுங்கள்’’ என்றார்.

நாமக்கல் மாவட்ட எஸ்.பி அருள்அரசுவிடம் பேசினோம். ‘‘முதல்வர் மற்றும் அமைச்சர் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதையடுத்து பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் தினேஷ் குடும்பத்தார் மற்றும் அவர் சார்ந்த கட்சி நிர்வாகிகளிடம் கூறிவிட்டு விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு கூட்டி வந்தார்கள். தினேஷ் தான் பதிவிட்டதை ஒப்புக்கொண்டர். அதையடுத்து அவர்மீது வழக்கு போட்டோம். நீதிமன்றம் கொடுத்த தண்டனையால்தான் அவர் சிறைக்குச் சென்றிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்காரர்களும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் பிறகு சட்டம் ஒழுங்கு பாதிக்கும். புகாரின் அடிப்படையில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே தினேஷைக் கைது செய்திருக்கிறோம்’’ என்றார்.

‘எடப்பாடிக்கும் தங்கமணிக்கும் பினாமி வேண்டும்!’

இதுபற்றி மின் துறை அமைச்சர் தங்கமணியிடம் பேசினோம். ‘‘அந்த தினேஷ் என்பவர் பதிவிட்டது உண்மைக்குப் புறம்பான தகவல். எனக்கு அந்த நிலங்கள் பற்றியோ, வழக்கு பற்றியோ எதுவும் தெரியாது. நான் சாதாரண மனிதன். ஆனால், முதல்வரைப் பற்றி இப்படி அவதூறாகப் பதிவிட்டால் காவல்துறை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்கும்? காவல்துறை எப்படி அவரைக் கைதுசெய்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. கைது செய்துவிட்டு என்னிடம் சொன்னார்கள்’’ என்றார்.

‘தினேஷைக் கைதுசெய்த விஷயத்தை அமைச்சரிடம் ஏன் போலீஸ் சொன்னது’ என்ற கேள்விக்குத்தான் யாரிடமும் பதில் இல்லை.

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்