Published:Updated:

வேலை கிடைக்காத விரக்தி: ராஜஸ்தானில் இளைஞர்கள் ரயில்முன் பாய்ந்து பலியான சோகம்!

வேலை கிடைக்காத விரக்தி: ராஜஸ்தானில் இளைஞர்கள் ரயில்முன் பாய்ந்து பலியான சோகம்!
வேலை கிடைக்காத விரக்தி: ராஜஸ்தானில் இளைஞர்கள் ரயில்முன் பாய்ந்து பலியான சோகம்!

வேலை கிடைக்காத விரக்தியில் ரயில்முன் பாய்ந்து மூன்று இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில், சாந்திகுஞ்ச் எனும் இடத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மனோஜ் மீனா, சத்யநாராயண், ரித்துராஜ், அபிசேக் மீனா. கடந்த செவ்வாயன்று இவர்களுடன் இன்னும் இரண்டு நண்பர்களும் சேர்ந்துகொண்டு, ரயில்முன் பாய்ந்து தற்கொலைசெய்யும் முடிவில் அங்கு சென்றுள்ளனர். அதில் இரண்டு பேர் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டனர். 

மாலை 6.30 மணியளவில் சத்யநாராயண், தன் நண்பர் ராகுல்மீனாவைத் தொலைபேசியில் அழைத்து, சாந்திகுஞ்ச் எனும் இடத்தில் உள்ள ரயில்வே டிராக் அருகில் வருமாறு கூறியுள்ளார். அதன்படி ராகுல் அங்கு போனபோது, நான்கு பேருடன் சந்தோஷ் எனும் நண்பரும் இருந்துள்ளார். 

அப்போது, சத்யநாராயண், `பல முறை முயற்சிசெய்தும் போட்டித்தேர்வுகளை எழுதியும் வேலை கிடைக்கவில்லை. ஊருக்குப் போய் பண்ணைகளில் கடுமையான வேலைகளைப் பார்க்க விருப்பமில்லை. எனவே, தற்கொலைசெய்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருக்கிறோம்” என்று கூறியதாக ராகுல் தெரிவித்துள்ளார். 

``பேசிக்கொண்டிருந்தோம். ரயிலின் சத்தம் கேட்டது. அப்போது எல்லாரும் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் ரயில் வந்ததும் நான்கு பேரும் திடீரென முன்னால் பாய்ந்துவிட்டார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார். 

நால்வரில் அபிசேக் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்; மற்ற மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். ஜெய்ப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அபிசேக், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். 

இந்த நால்வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆல்வாரில் தங்கி அவர்கள் போட்டித் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தார்கள் என்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக ஒன்றும் சொல்ல முடியாது என்றும் ஆல்வார் மாவட்ட எஸ்.பி ராஜேந்திரசிங் தெரிவித்துள்ளார். இறந்துபோனவர்களில் மனோஜ், சத்யநாராயண் இருவரும் பட்டதாரிகள். 

ஆல்வாரில் உள்ள பச்புரியைச் சேர்ந்த சத்யநாராயண், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஏ முடித்தார். போலீஸ் வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்காகப் படித்துக்கொண்டிருந்தார். இவருடைய தந்தை கடந்த செவ்வாயன்றுதான், தன் மகனின் படிப்பு மற்றும் தங்ககும் செலவுக்காகப் பணம் அனுப்பியுள்ளார். 

இவரைப் போலவே, இதே மாவட்டத்தைச் சேர்ந்த ரேணி கிராமத்தின் மனோஜ், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஏ முடித்தவர். ரயில்வே, ராஜஸ்தான் போலீஸ், டெல்லி போலீஸ், எஸ்.எஸ்.சி உட்பட  ஏழு போட்டித் தேர்வுகளை எழுதியவருக்கு, முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. ரித்து என்பவருக்கு 17 வயதுதான் ஆகிறது. பி.ஏ முதலாண்டு படித்துக்கொண்டிருக்கிறார். தற்கொலை செய்துகொள்வதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னர் தன் தாயிடம் பேசியுள்ளார். 

நண்பர்கள் ஆறு பேருமே கூட்டாகத் தற்கொலைசெய்துகொள்வது என முடிவுசெய்திருந்தனர்; ஆனால், கடைசி நேரத்தில் ராகுலும் சந்தோஷும் மட்டும் பின்வாங்கிவிட்டார்கள். போட்டித்தேர்வுகளைத் தொடர்ந்து எழுதியும் வேலை கிடைக்கவில்லையே என விரக்தியில் இருந்தனர்; மன அழுத்தமாக இருப்பதாகக் கடைசி நேரத்தில் சத்யநாராயண் கூறியதாக, போலீஸிடம் ராகுல் தெரிவித்திருக்கிறார். 

அதேசமயம், அப்படி அவர்கள் பேசியதாகத் தெரியவில்லை என சந்தோஷ் மாறுபட்டு வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். அடுத்த மாதம் 7-ம் தேதியன்று ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சம்பவமானது அங்கே பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

மத்திய பி.ஜே.பி அரசு, தான் கொடுத்த வாக்குறுதிபடி நடந்துகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வப் பேச்சாளர்களில் ஒருவரான மணிஷ் திவாரி, ``ஐந்து ஆண்டுகளில் 10 கோடி வேலைகளை உருவாக்குவதாக பி.ஜே.பி உறுதியளித்திருந்தது. ஆனால், இதுவரை வெறும் 8.5 லட்சம் வேலைகளை மட்டுமே உருவாக்க முடிந்துள்ளது. நாடு முழுவதும் இதே போன்ற நிலையைத்தான் மத்திய ஆட்சி உருவாக்கியுள்ளது” என்று சாடியுள்ளார்.