Published:Updated:

கோடிக்கணக்கில் செலவு செய்து சிலைகள் நிறுவப்படுவது இப்போதைக்குத் தேவையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோடிக்கணக்கில் செலவு செய்து சிலைகள் நிறுவப்படுவது இப்போதைக்குத் தேவையா?
கோடிக்கணக்கில் செலவு செய்து சிலைகள் நிறுவப்படுவது இப்போதைக்குத் தேவையா?

வறுமையும், உணவுப் பற்றாக்குறையும், இயற்கைப் பேரிடர்களால் சேதங்களும் அடிக்கணக்கில் உயர்ந்துகிடக்கும்போது, கோடிக்கணக்கில் செலவு செய்து வானுயர்ந்த சிலைகள் அமைக்கப்படுவது இப்போது தேவையா? சிலைகளுக்குச் செய்யும் பணத்தை இயற்கைப் பேரிடர்களுக்குக் கொடுக்கலாம் அல்லவா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``இந்தியாவில் வறுமையும், உணவுப் பற்றாக்குறையும், இயற்கைப் பேரிடர்களால் சேதங்களும் அடிக்கணக்கில் உயர்ந்துகிடக்க, கோடிக்கணக்கில் செலவு செய்து வானுயர்ந்த சிலைகள் அமைக்கப்படுவது இப்போது தேவையா?" என்று கேட்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.

தமிழகத்தில் தொலைந்த சிலைகளைத் தேடி, அதற்குக் குழு அமைத்து அதை மீட்கும் பணிகள் எல்லாம் ஒருபுறம் போய்க்கொண்டிருக்க, இன்னொரு புறம் இந்தியாவில் அடி கணக்குப் பார்த்துப் போட்டிபோட்டுக்கொண்டு சிலைகள் நிர்மாணிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பண மதிப்பிழப்பு விவகாரம், இன்றைய மத்திய ஆட்சியின்மேல் பல விமர்சனங்களை வைக்கச் செய்தது. நாட்டின் பொருளாதாரம் வளரும்; கறுப்புப் பணம் ஒழியும் என்றெல்லாம் பேசிய மத்திய அரசை எதிர்த்து, இன்று எதிர்க் கட்சியினரும், மக்களும் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கின்றனர். அதை, சமாளிக்கத்தான் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்து நல்ல பெயர் எடுக்கச் சுற்றுலாத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்கின்றனர், சமூக ஆர்வலர்கள். கடந்த மூன்று மாதங்களாகவே அதுகுறித்த செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அதில் லாபமா, நஷ்டமா என்பதுதான் பதிலறியா கேள்வி.

கடந்த மார்ச் மாத பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை என்று சொன்ன மத்திய அரசு, அக்டோபர் மாதம் நர்மதை நதிக் கரையில் உலகின் மிகப்பெரிய வல்லபபாய் படேல் சிலையைத் திறந்துவைத்தது. மேலும் கடந்த 23-ம் தேதி, அதே குஜராத்தில் சங்ககாயா பௌத்த இயக்க வேண்டுகோளின்படி  80 அடி  உயரப் புத்தர் சிலையை நிர்மாணிக்க நிதி ஒதுக்குவதாக அறிவிக்கிறது. இதுதவிர,  உத்தர பிரதேச அரசு வல்லபபாய் படேலின் சிலையைவிட மிக உயரமான ராமர் சிலை ஒன்றைச் சரயு நதிக்கரையில் நிறுவப்போவதாக அறிக்கை விடுகிறது. அதை நிறுவ, அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்குக் கோரிக்கையும் வைக்கிறது.

இதற்கு என்ன காரணம், சமூக ஆர்வலர்களிடம் பேசினோம். ``இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பி.ஜே.பி. ஆட்சியில் இருக்கிறது. இனி, வரப்போகும் தேர்தல்களிலும் பி.ஜே.பி. வெற்றிபெற முயல்கிறது. இது ஒருபுறமிருக்க... மறுபுறம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.-யை வீழ்த்த எதிர்க் கட்சிகளால் பலமான திட்டமும் தீட்டப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில்தான் மத்திய அரசின் சிலை திறப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதன்மூலம், `இந்துத்துவா ஆதிக்கம் அதிகரித்து வருகிறது’ என்று சர்ச்சையையும் அந்தக் கட்சியில் எழுந்துகொண்டிருக்கிறது. அலகாபாத் நகரை `ப்ரயாக் ராஜ்’ என்று மாற்றுவது தொடங்கி, 221 மீட்டர் உயர வெண்கல ராமர் சிலையை சரயு நதிக்கரையில் நிறுவுவதுவரை என பி.ஜே.பி-யின் இந்தச் செயல்கள் யாவும் அதை உறுதி செய்துகொண்டே வருகின்றன.

ராமர் சிலை என்பது இன்றைய கதை இல்லை. 2017-லேயே உத்தர பிரதேச சுற்றுலாத் துறை `நவ்யா அயோத்தியா’ திட்டத்தின்கீழ் ராமர் சிலை நிறுவுவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இதுபோக நிஷாத் இனமக்கள் வாழும் ஸ்ரீங்காவெர்பூர் பகுதியில் ஒரு ராமர் சிலையும், ராமாயணத்தில் ராமனையும் சீதையையும் கங்கையைக் கடக்க உதவிய நிஷாத் ராஜுக்கு ஒரு சிலையும் வைக்கப்போவதாகக் கூறியிருக்கிறது. அதற்காக 34 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

221 மீட்டர் ராமர் சிலையானது 151 மீட்டர் உருவமும், 20 மீட்டர் தலைக்குமேல் உள்ள சத்ரா எனப்படும் குடையையும் 50 மீட்டர் உயரப் பீடத்தையும் கொண்டது. சிலையின் பீடத்தில் அயோத்தியின் வரலாறு, மன்னன் மனுவின்  வரலாறு ஆகியனவும் இடம்பெற இருக்கின்றன. அதனுடன் ஒரு விடுதி, திடல், அருங்காட்சியகம், குருகுலம் ஆகியனவும் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு வட்டத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான இடம், நிதி குறித்த செய்திகள் இன்னும் வெளியிடப்படவில்லை. படேல் சிலையின்போதே, `தட்வி’ இனப் பழங்குடி மக்களின் பாரம்பர்ய நிலம் அபகரிக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இப்போது நிஷத்துகள் பகுதியில் சிலை என்றால் அவர்கள் வாழிடமும் பாதிக்கப்படும்.

படேல் சிலை என்பது 5 ஆண்டு பணி. அரசும் தனியாரும் சேர்ந்து செய்ததுதான் என்றாலும்கூட 2,989 கோடி ரூபாய் என்பது எளிதான பணம் இல்லையே? அது மட்டுமன்றி, அந்த 182 மீட்டர் உயர உலகின் மிக உயரமான சிலை திறக்க எடுத்த ஆடம்பர விழா ஏற்பாட்டுச் செலவுகளை எல்லாம் எங்கே கொண்டுபோய்ச் சேர்ப்பது? இவற்றையெல்லாம் கணக்கிட்டாலே பெருந்தொகை சேரும். இதைப் பார்க்க வரும் நபருக்கு நுழைவுக் கட்டணம் பல வகைகளில் வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் எந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துவிடும் என்பது தெரியவில்லை. வறுமையும், உணவுப் பற்றாக்குறையும், இயற்கைப் பேரிடர்களால் சேதங்களும் அடிக்கணக்கில் உயர்ந்துகிடக்கும்போது, கோடிக்கணக்கில் செலவு செய்து வானுயர்ந்த சிலைகள் அமைக்கப்படுவது இப்போது தேவையா? சிலைகளுக்குச் செய்யும் பணத்தை இயற்கைப் பேரிடர்களுக்குக் கொடுக்கலாம் அல்லவா" என்கின்றனர், அவர்கள் சற்றே வேதனையுடன்.

சிலைக்குச் செலவு செய்யும் பணத்தை, சிரமப்படும் மக்களுக்குக் கொடுத்து உதவலாமே?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு