Published:Updated:

பெண்கள் சபரிமலை நுழைவு தவறானதா? - பெரியார் நினைவு தினத்தில் ஒரு விவாதம்!

பெண்கள் சபரிமலை நுழைவு தவறானதா? - பெரியார் நினைவு தினத்தில் ஒரு விவாதம்!
பெண்கள் சபரிமலை நுழைவு தவறானதா? - பெரியார் நினைவு தினத்தில் ஒரு விவாதம்!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், சபரிமலை கோயிலில் நுழைய அனுமதி கேட்டுப் போராடிக்கொண்டிருப்பது பெரியார் பேசிய பெண்ணுரிமை மீது விழும் அடியே. வைக்கத்தில் சாதியால் தாழ்த்தப்பட்டவர்கள் போராடினார்கள். சபரிமலையில் பாலினத்தின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

திருச்சியில்  பெரியாரியக் கொள்கையாளர்களின் கருஞ்சட்டைப் பேரணி நிகழ்ந்த அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் குழு சபரிமலைக்குள் நுழைய முற்பட்டு பம்பையிலேயே கேரளக் காவல்துறையால் துரத்திப் பிடித்து வைக்கப்பட்டது, கவனிக்கப்பட வேண்டிய, விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயற்சி செய்ததற்கு ஆதரவாகவும், எதிராகவும் நிறைய கருத்துகள் முன்வைக்கப்பட்டன. போராடிய பெண்கள் போலீஸாரால் துரத்தப்படும் வீடியோ ஒன்று, `வேண்டுமென்றே வம்பிழுக்க வந்த பெண்கள் விரட்டியடிப்பு!' என்று எழுதப்பட்டு உலாவிக்கொண்டிருந்ததும் அதைச் சில பெண்களைக் கொண்டே பகிர்ந்து, `பெண்களின் நாகரிகமற்ற செயல்’ என்று கருத்துக் கூறியிருப்பது அச்சமூட்டுவதாகவும், பெண்களுக்குச் சக பெண்களின் குரல் இவ்வளவுதானா எனக் கேள்வி எழுப்புவதாகவும் இருந்தது. `சாதிக்கும், பெண்ணடிமைத்தனத்துக்கும் எதெல்லாம் ஆதரவாக இருக்கிறதோ அவை அத்தனையையும் எதிர்த்துக் கேள்வி எழுப்புவோம்' என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 45-வது நினைவுதினத்தில் இப்படியொரு கோயில் நுழைவுப் போராட்டமானது, ஆதரிக்கப்படாமல் விமர்சிக்கப்படுவது ஏன்? 

அவர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பின்வருமாறு...

1. `சபரிமலை கோயிலில் நுழையலாம்' என்று உச்ச நீதிமன்றம் சொன்னவுடன் இடதுசாரிக் கொள்கை சார் அமைப்புகளைச் சேர்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாத பெண்கள்கூட, கோயிலுக்குள் நுழைய முற்படுகிறார்கள். அவர்களுக்கு ஏன் கடவுளைப் பற்றிய திடீர் அக்கறை? அவர்கள் இப்படிச் செய்வது வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டும் விதமாக இருக்காதா? மதத்தை இழிவுப்படுத்துவதாக இருக்காதா?

2. `பிறருடைய நம்பிக்கைகளுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள்' என்று சொல்லிக் கொள்பவர்கள்தாம் இன்று எங்களின் நம்பிக்கையைச் சிறிதும் பொருட்படுத்தாமல் சபரிமலைக்குள் நுழைய முற்படுகிறார்கள். கருத்துச் சுதந்திரம் பேசுபவர்கள், எங்களுடைய கருத்துக்கும் உணர்வுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டாமா? எதற்குத் தேவையில்லாமல் இப்போ பெண்கள் கோயிலுக்குள் நுழைய வேண்டும், பிரச்னையை உண்டாக்க வேண்டும்? அது பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டுமே? பெரும்பாலும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளிகளிலும் அதிகம் முன்வைக்கப்படும் கேள்விகள் இவைதாம்.

இதுமட்டுமல்ல, `சபரிமலைக்கு 11 வயது தொடங்கி 50 வயதுவரை உள்ள பெண்கள் செல்லலாம்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு வலதுசாரி மற்றும் இந்துத்துவ அமைப்புகள் சபரிமலைக் கோயிலைச் சுற்றி எழுப்பிய மனிதச் சுவரில் அதிகம் இடம்பெற்றிருந்தது பெண்கள்தான். `கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்யும் பெண்களை விரட்ட ஆண்களை அனுப்பினால் பிரச்னையாகி விடும்' என்று பெண்களை முன்னிறுத்துவது வலதுசாரி வாக்கு அரசியல் கட்சிகளின் நரித் தந்திரமாகவே இருக்கிறது. இவர்களின் அழுத்தத்தால், கேரளாவில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி அரசும் கோயிலில் பெண்களை அனுமதிப்பதை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியாத சூழலில் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கும் சூழலில், அதனை மீறுவது கிட்டத்தட்ட தேசத்துரோகச் செயலாகும். ஆனால், இதுநாள்வரை அதனை மீறுபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கோயிலில் நுழைய முயற்சி செய்யும் அத்தனை பெண்கள் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.   

`கேரளாவின் வைக்கத்தில் சோமநாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடமாடக் கூடாது, கோயிலுக்குள் அவர்கள் நுழையக் கூடாது' என்று உயர்சாதி இந்துக்கள் விதித்த வரையறைகளை எதிர்த்து டிகே.மாதவன், அய்யங்காளி, காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் பெரியாரும் போராடி, கோயிலுக்குள் நுழைவதில் வெற்றி பெற்றதன் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். பெரியாரின் போராட்டத்தின் பின்னணியில் அவரது மனைவி நாகம்மை மற்றும் சகோதரி கண்ணம்மா உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர் என்பதை இங்கே குறிப்பிடவேண்டும். அந்தப் போராட்டத்தின் நூற்றாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் போதிலும் இன்னும் கோயிலில் நுழைய அனுமதி கேட்டுப் போராடிக்கொண்டிருப்பது பெரும் வலியே. அப்போது சாதியால் தாழ்த்தப்பட்டவர்கள் போராடினார்கள். தற்போது பாலினத்தின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் போராட்டத்துக்கான தீர்வுக்கு அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியதாக இருக்கிறது. 

முதல் விமர்சனத்துக்கான பதில், 

``சாதி வித்தியாசத்துக்கு ஆதாரமாக உள்ள சாலை, கிணறு, பள்ளிக்கூடம், சாவடி முதலியவை எல்லாம் ஒருவிதமாக மாற்றப்பட்டு வந்து கொண்டிருப்பதனாலும் இந்தக் கோயில்கள்தாம் சிறிதும் மாற்றுவதற்கு இடம் தராமல் சாதி வித்தியாசத்தை நிலைநிறுத்த உபயோகப்பட்டு வருகின்றன. ஆதலால்தான், நான் தீண்டாத மக்கள் என்போர் கண்டிப்பாய் கோயிலுக்குள் போய்த்தீர வேண்டும் என்று கூறுகிறேனே ஒழிய, பக்திக்காகவோ மோட்சத்துக்காகவோ அல்லவே அல்ல. கோயிலில் சமத்துவம் அடைந்துவிட்டால் மற்ற காரியங்களில் வித்தியாசம் இருக்க முடியவே முடியாது. கோயிலில் நாம் பிரவேசிக்கச் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் சாதி வித்தியாசத்தை ஒழிக்கச் செய்யும் முயற்சியே ஒழிய வேறில்லை”

- பெரியார்

மேலே குறிப்பிட்டதில் சாதிக்குப் பதிலாய் `பெண்-ஆண்’ என்பதை நிரப்பிக்கொள்ளுங்கள். 

இரண்டாம் விமர்சனத்துக்கான பதில்: 

``உன்னுடைய சித்தாந்தங்களோடு நான் ஒத்துப்போகாதவனாக இருக்கலாம். ஆனால், அதன் மீது எழுப்பப்பட்ட உனது உரிமைகளுக்காக நான் உயிரைக் கொடுத்தும் போராடுவேன்” 

- வால்டேர் 

மற்றவரின் உரிமையைப் பறிக்காதவரையில் மட்டுமே எதுவும் நம்பிக்கையாக இருக்கக்கூடும். 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் மட்டும் கோயிலில் நுழைவதால் தூய்மை கெட்டுவிடும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதனால் அவர்களும் நுழையக் கூடாது என்று போராடுவது அந்த நம்பிக்கையின் பெயரால் செலுத்தப்படும் அதிகாரம். `அதிகாரம் ஏன்? உரிமைப் பறிப்பு ஏன்?' என்று குரல் கொடுப்பது நிச்சயம் வன்முறையில்லை. வால்டேர் சொன்னதுபோல `நான் நாத்திகவாதியானாலும் ஆத்திகவாதியானாலும் சக பெண்களுக்காக உயிரைக் கொடுத்தேனும் போராடிப் பெறவேண்டிய உரிமை'. 

இங்கு எத்தனையோ போராட்டங்களுக்கு அடித்தளமாக. ஒரு பெண்ணாக நாம் செய்ய வேண்டிய முக்கியப் பணி ஒன்று இருக்கிறது. அது நம் அருகிலிருக்கும் மற்றொரு பெண்ணை வலிமையாக்குவது. துரோகங்கள், சண்டைகள், சிக்கல்கள், சச்சரவுகள், புறங்கூறுதல் என சில்லறை விஷயங்களைக் கடந்து எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பெண்ணாக வலிமையுடன் மற்றொரு பெண்ணுக்காக நாம் அறத்துடன் நிற்பது. அது நீங்கள் அறியாத பல வகைகளில் பூமியை உய்யச் செய்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு