Published:Updated:

அரை நூற்றாண்டுக்குப் பின் எப்படி இருக்கிறது கீழ்வெண்மணி...

அரை நூற்றாண்டுக்குப் பின் எப்படி இருக்கிறது கீழ்வெண்மணி...
அரை நூற்றாண்டுக்குப் பின் எப்படி இருக்கிறது கீழ்வெண்மணி...

நாகப்பட்டினத்திலிருந்து மேகனூர் செல்லும் வழியில், 28-வது கிலோ மீட்டரில் உள்ள வெண்மணி படுகொலையின் 25-ம் ஆண்டு நினைவு வளைவுதான், கீழவெண்மணியை வந்தடைந்ததன் அடையாளம். ``பாலியல் வன்முறை, ஊழல் ஆகிய இரண்டும் உழைப்புக்கு எதிரானது” என்று சுவரில் எழுதிய வாசகங்களின் வாயிலாக வரவேற்கிறது கீழ்வெண்மணி. 

அரை நூற்றாண்டுக்குப் பின் எப்படி இருக்கிறது கீழ்வெண்மணி...

பல ஆயிரம் ஆண்டுகளாக உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட நிலமற்ற மக்களின் பூமி கீழ்வெண்மணி. சாதியம், கைவிட்ட காவிரி, வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் புயல்கள், நிலப்பிரபுக்களின் ஏகாதிபத்தியம் என்ற பல சோகக் கதைகளுக்கிடையே வாழ்வை நகர்த்தி வரும் அந்த மக்களின், இன்றைய நம்பிக்கையும் `உழைப்பாக’ மட்டுமே உள்ளது.

கீழ்வெண்மணி நினைவு வளைவிலிருந்து இரிஞ்சூர் செல்லும் வழியில் நடந்தால், சாலையின் இரு புறங்களிலும் பசுமையான வயல்கள் கூடவே சூழ்ந்து வருகின்றன. ஊரின் தொடக்கத்தில் சில மாடி வீடுகள் தென்பட்டாலும் ராமய்யாவின் குடிசையை நெருங்குகையில் அதைச் சுற்றி உள்ள வீடுகள் எல்லாம் பெரும்பாலும் குடிசைகளாகவே காணப்படுகின்றன. முதலாளித்துவத்தின் தீயில் 44 உயிர்கள் எரிந்த அன்றைய ராமய்யாவின் குடிசை இருந்த இடத்தில் இன்று, 1969 ஜூன் 28-ம் தேதி, முன்னாள் மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசுவால் அடிக்கல் நாட்டப்பட்டு அமைக்கப்பட்ட சிறிய அளவிலான ஸ்தூபி நினைவுச் சின்னமாக உள்ளது. அந்தப்  படுகொலைக்குக் காரணமான கோபால்கிருஷ்ண நாயுடுவின் இடத்தை விலைக்கு வாங்கி, அதில் பிரமாண்ட புதிய நினைவு மண்டபத்தை அமைக்கும் பணியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

அரை நூற்றாண்டுக்குப் பின் எப்படி இருக்கிறது கீழ்வெண்மணி...

புதிய நினைவு மண்டபப் பணிகளில் ஈடுபட்டிருந்த, கீழ்வெண்மணி சம்பவத்தை நேரில் பார்த்த ராமலிங்கத்திடம் பேசினோம். ``அப்போது எனக்கு 22 வயசு” எனக் கண்கலங்கியபடியே பேச ஆரம்பித்தார். அவர், ``1967 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவி, அண்ணாதுரை அன்றைய சென்னை மாகாண முதல்வராகப் பதவி ஏற்றிருந்த நேரம். மிராசுதார்கள் எல்லாம் தங்களுடைய செல்வாக்கை வலிமைபெறச் செய்ய, `நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்‘ என்ற புதிய அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். கீழ்வெண்மணியைச் சேர்ந்த எங்கள் யாருக்கும் சொந்தமாக நிலங்கள் கிடையாது. அருகில் இருக்கும் பண்ணையார்களிடம்தான் நாங்கள் கூலிகளாக வேலை செய்து வந்தோம்.

அரை நூற்றாண்டுக்குப் பின் எப்படி இருக்கிறது கீழ்வெண்மணி...

அந்தப் பண்ணையார்களில் ஒருவர்தான் இரிஞ்சூர் கோபால்கிருஷ்ண நாயுடு. அவர் அப்போதுதான் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தென் தஞ்சைப் பகுதியின் பொறுப்பாளராகப் பதவி ஏற்றார். எங்கள் அனைவரையும் அவருடைய சங்கத்தில் சேரக் கட்டாயப்படுத்தினார். நாங்கள் அப்போது விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் இருந்தோம். வேலைக்கும், கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் சாகும்வரை செங்கொடிக்குக் கீழ்தான் நிற்போம். செய்யுற வேலைக்கு மட்டும் அரைப்படி கூலி அதிகமாகக் கொடுக்கச் சொன்னோம். `நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேரலனா, உங்களுக்கு வேலை கிடையாது' எனச் சொல்லி, வெளியூரிலிருந்து வேலைக்கு ஆளுங்களை வரவச்சாரு கோபால்கிருஷ்ண நாயுடு. 

வேலைக்கு வந்த வெளியூர் ஆட்களிடம் நாங்கள் நடந்ததைச் சொல்ல, அவர்களும் வேலை செய்யாமல் பாதியில் கிளம்பி விட்டார்கள். அந்தக் கோபம் எங்கள் மேல் திரும்பிடுச்சி. இருங்கடா, உங்களை உயிரோடு கொளுத்தறேன்னு சொல்லிட்டுப் போனவர், எங்கள் பிள்ளை குட்டிங்களை...” என உடைந்து அழ ஆரம்பித்தார்.

தன் தங்கையைச் சாதியத் தீயில் இழந்த கணேசன், ``டிசம்பர் 25 அன்று இரவு 10 மணிக்கு வெளி ஊர்களிலிருந்து அடி ஆட்கள் வந்து இறங்கினார்கள். சில போலீஸாரும் துப்பாக்கியோடு துணைக்கு வந்தார்கள். ஊர் முழுக்க குடிசைகளைக் கொளுத்திக் கொண்டே வந்தார்கள். இந்த நிகழ்வுகளை நேரில் பார்த்த பெண்களும், குழந்தைகளும் பயந்து ஒதுக்குப்புறமாக இருந்த ராமய்யாவின் குடிசைக்குப் போய் மறைந்தார்கள். இதைத் தூரத்திலிருந்து பார்த்த ஒருவன் வீட்டின் கதவுகளை வெளியே தாழ்ப்பாள் போட்டுக் கொளுத்தி விட்டான். இது எங்கள் யாருக்கும் தெரியாது. அடுத்தநாள் காலையில் போலீஸ் வந்து எரிந்த வீட்டின் கதவுகளை திறந்து பார்த்த போதுதான் தெரிந்தது. 44 பேர் குடிசைக்குள்ளேயே  இறந்துபோனார்கள் என்று” எனத் தழுதழுத்த குரலில் சொன்னார். 

ஓர் அரை நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த இந்தச் சம்பவம்தான், தமிழகத்தின் தொழிலாளர்களின் போராட்டங்கள் வலுப்பெறுவதற்கான காரணியாய் அமைந்தன. இந்திய அளவில் பாட்டாளி மக்களின் உரிமைகளைப் பேசும் அரசியலில் முக்கியமான ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கீழ்வெண்மணி போராட்டம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் எந்த அளவில் வளர்ந்துள்ளது என்பதுதான் கேள்விக்குறி.

அரை நூற்றாண்டுக்குப் பின் எப்படி இருக்கிறது கீழ்வெண்மணி...

``இலவசங்களைக் கொடுத்து மக்களைச் சோம்பேறிகளாக்கி விட்டார்கள், இந்தியா வளர்ச்சியடையாமல் போகக் காரணமே இடஒதுக்கீடுதான். யாருங்க இப்போதெல்லாம் சாதி பாக்குறாங்க" இவை போன்ற தவறான வசனங்கள், அரசியல் மேடைகளிலும், சினிமாவின் வாயிலாகவும்  பெருவாரியான மக்களைச் சென்றடைந்திருக்கின்றன. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கீழ்வெண்மணியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை ஒப்பிட வேண்டியதன் அவசியத்தை யாரும் முன்னெடுப்பது இல்லை. 

இந்திய அளவில் பெரிய அரசியல் கவனத்தை கீழ்வெண்மணி பெற்றிருந்தாலும், இங்கு சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் ஏதும் பெரிய அளவில் ஏற்பட்டுவிடவில்லை. குடிசைகள் எரிந்த நிலையில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, கட்டித்தந்த சிறிய அளவிலான காங்கிரீட் வீடுகளும் இப்போது சிதைந்த நிலையில் உள்ளன. அந்த வீடுகளில்தான் இன்னும் பலர் வசிக்கின்றனர். இன்னும் அவர்களில் பெருவாரியான மக்களின் தொழில் விவசாயக் கூலிதான். கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் சர்வோதய இயக்கத்தின் முயற்சியால் பலருக்கு ஒரு ஏக்கர் அளவிலான நிலங்கள் கிடைத்தாலும், அந்த நிலங்களின் மூலமாக தங்களின் வாழ்வாதாரங்களை நிறைவேற்றுவதே கடினமானதாக உள்ளது.

இங்கு பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள், அவர்களில் ஒற்றை இலக்க சதவிதத்தினர்கூட  இடஒதுக்கீட்டை பயன்படுத்தவில்லை. இந்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ஒரு சிலரே அரசு வேலைக்குச் சென்றுள்ளனர். பெருவாரியான மாணவர்கள், எட்டாவது அல்லது பத்தாவதுக்குப் பிறகு, ஈரோடு, திருப்பூர் போன்ற ஊர்களில் உள்ள பனியன் கம்பெனிகளுக்குத்தான் வாழ்வாதாரத்தைத் தேடிச் செல்லும் நிலை உள்ளது. 

வளர்ச்சியின் முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகின்ற கல்வியிலும் எந்தவொரு பெரிய அளவிலான முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. சரியான பராமரிப்புகளற்று, ஒரு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. ஏற்கெனவே படித்து கொஞ்சம் வளர்ந்துள்ள  ஒரு சில குடும்பங்களின் குழந்தைகள்தான் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். இளைஞர்கள் வாழ்வைத் தேடி வெளியூரில் பஞ்சம் பிழைக்கும் சூழல்தான் நீடிக்கிறது. `எங்களின் சிந்தனைகளை செழுமை செய்கின்ற நூலகங்கள் கூட ஊரில் இல்லை' என்பதுதான் அந்த மக்களின் குற்றச்சாட்டுகளாக உள்ளன.

``எங்கள் மக்களின் வாழ்வின் முன்னேற்றத்துக்கு ஒரு நல்ல கட்டமைப்புடன் கூடிய படிப்பகம் வேண்டும். அதைத் தந்தால் நாங்கள் கல்வியைக் கொண்டு முன்னேறி விடுவோம். விவசாயம் என்பது தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதியில் ஆறு மாதத் தொழிலாக மாறிப்போய் விட்டது. இன்னும் இதை நம்பி எங்கள் ஜீவாதாரத்தை அமைத்துக் கொள்ள முடியாது. எங்களுக்குத் தொழில் தொடங்கக் கடன் எல்லாம் வேண்டாம்.

கீழ்வெண்மணி அருகில் சிறிய அளவிலான தொழிற்சாலையை அரசே தொடங்கி நடத்த வேண்டும். கருணாநிதி முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்றபோது கட்டிக் கொடுக்கப்பட்ட காங்கிரீட் வீடுகள், இப்போது சிதிலமடைந்துள்ளன. இன்னும் மொத்தமுள்ள 200 குடும்பங்களில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை வீட்டில்தான் வசிக்கின்றனர். எனவே  புதிய மாடி வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும்" என்பவைதான், அந்தப் பகுதி மக்களின் தேவைகளாக அரசாங்கத்திடம் முன்வைக்கப்படுகின்றன.​​​​​​​

அரை நூற்றாண்டுக்குப் பின் எப்படி இருக்கிறது கீழ்வெண்மணி...

இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் ஆணிவேரான சாதியம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்றால், அதற்குப் பதிலும் ஏமாற்றமே. ``சாதி இன்னும் அப்படியேதான் இருக்கு. இந்தக் காலனிக்குள்ள இருக்கிற எங்களுக்கு இடையே சாதி அழிந்து விட்டது. ஆனால், மற்றவர்கள் இன்னும் எங்களைச் சாதிய கண்ணோட்டத்தோடுதான் அணுகுகிறார்கள். கட்சி எங்களுக்கு `சோஷியலிசமா’ மற்றவர்களிடம் சரி சமமா உட்கார்ந்து பேசுற அளவுக்கான அதிகாரத்தைப் பெற்று தந்திருக்கிறதே தவிர சாதிய மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என்றார் எழுபது வயது முதியவர் ஒருவர்.

இன்று சட்டம் படிக்கும் பல மாணவர்களுக்கே `சோஷியலிசம்’ என்ற வார்த்தைக்குச் சரியான அர்த்தம் தெரியாத நிலையில் ஒரு குக்கிராமத்தில் எழுபது வயதுடைய முதியவர் சோஷியலிசம் என்ற வார்த்தையை மிகச் சரியான இடத்தில் கையாண்டார். இது மாதிரியான வியப்புக்குரிய மக்களும். பலமான அரசியல் சித்தாந்தங்களும் அந்த மண்ணைச் சென்றடைந்த போதிலும், கீழ்வெண்மணி இன்றுவரை அதே நிலையில்தான் இருந்து வருகிறது. அன்று முதலாளித்துவத் தீயில் எரிந்தது போல, இப்போது வறுமைத் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

சமூக, அரசியல், பொருளாதார நிலையில் ஒரு முன்னுதாரணமாகக் கட்டமைக்கப்பட வேண்டிய இந்தக் கிராமத்துக்கு, அவற்றைச் செய்யாமல் வெறும் நினைவு தினங்களை மட்டும் அனுசரித்து, அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே கீழ்வெண்மணியைப் பயன்படுத்திக் கொள்வது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்...?