Published:Updated:

சர்ச்சையான மீ டு ஓவியமும் தமிழிசை, பாலபாரதியின் கருத்தும்!

"பாரத மாதாங்குறது இந்து மதத்துக்கு மட்டுமே பொதுவானதில்லையே. அது நம்மளுடைய அடையாளம். பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. இதெல்லாம் பாரதமாதாவை இழிவு படுத்தும் செயல் அப்படிங்குற முறையில் குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படணுங்குற எண்ணத்துலதான் அப்படிச் சொல்லப்பட்டிருக்கு!" - பாலபாரதி

சர்ச்சையான மீ டு ஓவியமும் தமிழிசை, பாலபாரதியின் கருத்தும்!
சர்ச்சையான மீ டு ஓவியமும் தமிழிசை, பாலபாரதியின் கருத்தும்!

`லயோலா' கல்லூரிதான் இன்றைய ஹாட் டாபிக். லயோலா கல்லூரியில் கடந்த 19, 20-ம் தேதிகளில் கருத்துரிமை காக்க கலைஞர்கள் ஆர்ப்பரிக்கும் ஆறாம் ஆண்டு `வீதி விருது விழா' நடைபெற்றது. இதில், சர்ச்சைக்குரிய ஓவியங்கள் வைக்கப்பட்டதாகக் கல்லூரி முதல்வர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக, இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் புகார் மனு கொடுத்தது. அந்த ஓவியங்கள் இந்து மதத்தினை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. ஹெச்.ராஜா, தமிழிசை செளந்தர்ராஜன் போன்றோர் லயோலா கல்லூரியின் மீது குற்றச்சாட்டு விடுத்திருந்தனர். இந்நிலையில், இன்று லயோலா கல்லூரி நிர்வாகம் இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்களிடமும், மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியிடமும் பேசினோம்.

 பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் :

``லயோலா கல்லூரியில் இருந்த அந்த ஓவியங்கள் சரியானதுன்னு எந்தப் பொண்ணுங்களும் ஏத்துக்க மாட்டாங்க. பாதிரியார் ஃப்ரான்கோ பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறிய கன்னியாஸ்திரீகளை அவங்களுடைய இடத்திலிருந்தே வெளியே அனுப்பச் சொல்லியிருக்காங்க. பெண்ணுரிமை அங்கே எங்கே போச்சு! முத்தலாக்னா என்ன? பெண்களுடைய உணர்வுகளைக் கொஞ்சம் கூட மதிக்காமல் அவங்களை எப்போ வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்புவேங்குறதுதான் முத்தலாக்! அப்படியான அட்ராசிட்டீஸ் எல்லா மதங்களிலும்தான் நடக்கின்றன. நான் நடக்கணும்னு சொல்லலை. எந்த மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் பிஜேபி போராடுங்குறதுக்காகத் தான் முத்தலாக்கையும் வேண்டாம்னு சொல்றோம். கன்னியாஸ்திரீகள் மீது நடவடிக்கை எடுக்காமல் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்னு சொல்றோம். அதே மாதிரி மதம் சார்ந்து இழிவாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தை எப்படிச் சொல்ல முடியும்? ஆர்எஸ்எஸ் பற்றி இவங்களுக்கு என்ன தெரியும்! நான் மறுபடி, மறுபடி சொல்லியிருக்கேன். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த எனக்கு ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் பண்ற சேவையைப் பார்த்துதான் பிஜேபி மீது ஈர்ப்பு வந்தது! ஆக, நீங்க எதிர்மறை எண்ணத்தைத்தான் பரப்புவீங்கன்னா அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

1400 கோடி ரூபாயில் `ஆயுஷ்மான் பாரத்'ன்னு சாமானியர்களுக்கும் நல்ல சிகிச்சை கிடைக்கப் போகுதே இது உங்க கண்ணுக்குத் தெரியலையா! எந்த அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனைக்குப் போறீங்க..! எல்லோரும் அப்பலோவில் போய் படுத்துக்குறீங்க! அதே மருத்துவ வசதி சாமானியருக்கும் கிடைக்கணும்னு நினைக்கிற மோடி உங்களுக்குக் கேவலமாப் போயிட்டாரா? சூலம்ங்குறது எல்லோரும் கும்பிடுகிற ஒன்று. அதை எங்கேனாலும் போடுவீங்களா.. அப்போ நீங்க சூலத்தையும் மதிக்கலை, பெண்ணையும் மதிக்கலை. உங்களுக்கு இஷ்டம்னா எங்க வேண்டுமானாலும் போடுவீங்களா? என்ன மதச்சார்பற்ற தன்மை இது! வேறு எந்த மதத்தையாவது இப்படிச் சீண்டிப் பார்ப்பீங்களா? இது பெண்கள் ரொம்பவே சிந்திக்க வேண்டிய காலகட்டம். நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் பெண்களை இழுத்துட்டுப் போக முடியாது. சபரிமலைக்கும் கஷ்டப்படணும் போக வேண்டாம்னுதான் சொன்னோம். நீங்க கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்னு சொல்றதுக்கு அவங்க யாரு? இது ரொம்பவே சீரியஸான விஷயம். எந்தப் பெண்களும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டாங்க. வேற மதத்தைச் சேர்ந்த பெண்கள் கூட இதைச் சரின்னு சொல்ல மாட்டாங்க. இது மன்னிக்கவே முடியாத குற்றம். இந்தப் படத்தை வரைந்தவர்களுடைய தாய், சகோதரிகள், மனைவிகூட இதை ஒத்துக்க மாட்டாங்க!'' என்றார்.

மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, 

``கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நாட்டுப்புற நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்றதுக்காக இந்த விழாக்களை ஏற்பாடு செய்து நடத்துறாங்க. லயோலா கல்லூரிங்குறது உலக அளவில் புகழ்பெற்ற கல்லூரி. ஏராளமான சான்றோர்களை உருவாக்கிய கல்லூரி. தேச ஒற்றுமைக்கோ அல்லது பாரத மாதாவுக்குக் களங்கம் விளைவிக்கிற அளவுக்குக் கருத்துகள் கொண்ட கல்லூரி அல்ல. எல்லா மதங்களையும் சார்ந்த மாணவர்கள்தான் இந்தக் கல்லூரியில் படிக்கிறார்கள். குறிப்பாக அடித்தட்டுப் பகுதியிலிருக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் படிக்க வைக்கிறார்கள். யாருடைய சிபாரிசும் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. சமூகப் பார்வை மிக்க கல்லூரிதான் அது! இதுவரைக்கும் அந்தக் கல்லூரியின் மீது இது போன்ற எந்தக் குற்றச்சாட்டும் வரவில்லை. ஒவ்வோர் ஆண்டும் லயோலா கல்லூரி மாணவர்கள் தேர்தலின் போது கருத்துக் கணிப்பு நடத்துவாங்க. இவங்கதான் ஜெயிப்பாங்க, இவங்க தோல்வியடைஞ்சிடுவாங்கன்னு எல்லாவற்றையும் தைரியமாகச் சொல்லக்கூடிய கல்லூரி! அவங்களுடைய கருத்துக் கணிப்பும் பல நேரங்களில் சரியாகத்தான் இருந்திருக்கின்றது. தமிழகத்தில் எப்படியாவது மதவெறி அரசியலைப் புகுத்தணுங்குற நோக்கத்தில் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவங்கதான் அதைப் பிரச்னைக்குரியதாக மாற்றிக் கொண்டிருக்காங்க. 

பாரத மாதாங்குறது இந்து மதத்துக்கு மட்டுமே பொதுவானதில்லையே. அது நம்மளுடைய அடையாளம். பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. இதெல்லாம் பாரதமாதாவை இழிவு படுத்தும் செயல் அப்படிங்குற முறையில் குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படணுங்குற எண்ணத்துலதான் அப்படிச் சொல்லப்பட்டிருக்கு. இதுவே, ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு இந்துக் கோயிலில் வைத்துத்தானே ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். நடைமுறைச் சம்பவங்கள் அப்படியிருக்கும் போது அதை சுட்டிக் காட்டுகிறதுக்காகத்தான் அப்படிச் சித்திரிச்சிருக்காங்களே தவிர பாரத மாதாவை அவமதிப்பதற்காக அல்ல! இது பா.ஜ.கவுடைய சிந்தனை! அது மதவெறி சிந்தனையிலிருந்துதான் வந்துள்ளது. பாரத மாதாவை இந்து மதத்தைச் சேர்ந்தவங்க மட்டுமே உயர்த்திப் பிடிக்கிற மாதிரியும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இழிவுப்படுத்துவது போன்ற சித்திரிப்பை அவர்கள் கொண்டு வருகிறார்கள். இது ஒரு அடையாள அரசியல்! எல்லா மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் படிக்கக்கூடிய இந்த லயோலா கல்லூரியின் மீது பா.ஜ.க இப்படியொரு குற்றம் சாட்டுவது சரியான நடவடிக்கை அல்ல! பாரத மாதாவை இழிவுபடுத்துறதுங்குறது அவங்களுடைய நோக்கம் அல்ல. சமூகக் கருத்துகளைத் தயக்கமில்லாமல் சொல்லக்கூடிய கல்லூரியைத் தடுத்து நிறுத்துவதற்காக அவங்க மேல் இப்படியான விமர்சனங்களை வைப்பது தவறு. தமிழ்நாட்டில் பா.ஜ.க மீண்டும், மீண்டும் மக்களுடைய ஒற்றுமையைச் சீர்குலைப்பது கண்டிக்கத்தக்கது'' என்றார்.