Published:Updated:

``கருத்துச் சுதந்திரத்துக்கில்லை...சிறுபான்மையினர் உயர்கல்விக்கு எதிரானது!” - அ.மார்க்ஸ்

பெரியார் பிறந்த மண், திராவிடச் சித்தாந்தத்தின் பிறப்பிடம் இந்த மண்தான் என்று சொல்லிக்கொண்டு இங்கிருக்கும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் திராவிடக் கட்சியினரும் கை நிற்பதில் இனியும் நின்று கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. களத்தில் இறங்கி சிறுபான்மையினருக்கும் அவர்கள் கல்வி கற்பதற்கும் எதிராக இருக்கும் இந்துத்துவச் சிந்தனையை எதிர்க்க வேண்டும்.

``கருத்துச் சுதந்திரத்துக்கில்லை...சிறுபான்மையினர் உயர்கல்விக்கு எதிரானது!” - அ.மார்க்ஸ்
``கருத்துச் சுதந்திரத்துக்கில்லை...சிறுபான்மையினர் உயர்கல்விக்கு எதிரானது!” - அ.மார்க்ஸ்

``கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், இந்துமத உணர்வுகளையும் பாரதப் பிரதமரின் மரியாதையையும் குறைக்கும்விதமான கருத்துகள் பகிரப்படுகின்றன'' எனத் தமிழக பா.ஜ.க-வினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த வாரம் 19-20-ம் தேதிகளில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற வீதி விருது விழாவில், ஓவியர் முகிலனால் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களின் கருத்துகளைத் தொடர்ந்துதான் பா.ஜ.க-வினர் இந்தக் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளாக லயோலா கல்லூரி ஆண்டுதோறும் வீதிக் கலைஞர்களைத் திரட்டி நிகழ்ச்சிகள் நடத்தி, அவர்களுக்கு விருதுகள் வழங்கிவருகிறது. பேராசிரியரும் கலைஞருமான காளீஸ்வரன், அதற்குப் பொறுப்பாளராக இருந்துவருகிறார்; அந்தக் கல்லூரியின் `மாணவர் அரவணைப்பு மையத்தில்' (Students Support Centre) இருந்தும் செயல்பட்டுவருகிறார். இந்த ஆண்டு நடந்த `வீதி விருது விழா' நிகழ்ச்சியில் தங்களுக்கு ஆட்சேபகரமான கருத்துகள் பேசப்பட்டதாகவும், ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வினர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். காவல்துறை சார்பில் விளக்கம் கேட்டபோது, `நிர்வாகம் அதற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளது' எனக் கல்லூரி நிர்வாகம் பதிலளித்தது. ஆனாலும், தொடர்ந்து லயோலா கல்லூரியை இழுத்து மூட வேண்டும் என்றும், பேராசிரியர் காளீஸ்வரனைக் கைது செய்ய வேண்டும் என்றும் பேசிவருகின்றனர். 

இந்த ஓவியங்கள் மற்றும் நிகழ்ச்சியை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பிரச்னை குறித்து

பேராசிரியர் அ.மார்க்ஸிடம் பேசினேன்.

``இது, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. சிறுபான்மை நிறுவனங்களுக்கு எதிரான, சிறுபான்மையினர்களுக்கான உயர்கல்விக்கு எதிரான, உயர்கல்வி நிறுவனங்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்த மரபின் தொடர்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். 

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, புதுச்சேரியின் ஆளுநராக கே.ஆர்.மல்கானி நியமிக்கப்பட்டார். `இந்துக்களுக்கு, உயர்கல்வி தேவையில்லை!' என்று கூறிய அவர், அதற்கான காரணமாக `உயர்கல்வி என்பதைப் பரப்பியதே கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்தான். ஏனென்றால், அவர்களின் வேதங்களை இங்கே பரப்ப வேண்டும் என்ற தேவையிருந்தது. அதைப் படிக்க வேண்டும் என்றால், எல்லோரும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். எனவேதான் அனைவருக்கும் அவர்கள் கல்வி கற்றுக்கொடுத்தனர். ஆனால், இந்துக்களில் வேதம் படிக்கவென்றே தனியாக ஓர் இனம் இருக்கிறது. அவர்கள் மட்டும் படித்தால் போதும். அதுவும் வேதத்தை மட்டும் படித்தால் போதும்' என்றார். இப்படி உயர்கல்வி வேண்டாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் அடிப்படைக் கொள்கை.

அதை வைத்துத்தான் மத்திய பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்தார்கள். அப்படித்தான் இந்தியாவின் மிக முக்கியப் பல்கலைக்கழகமான ஜே.என்.யு சிதைக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், ஆண்டுக்கு 4,000 ஆய்வு மாணவர்களைச் சேர்த்துக்கொண்டிருந்த ஜே.என்.யு-வில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆய்வில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 400 மட்டுமே. 

இரண்டு மாதங்களுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தத் துறையின் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீதும் இதேபோல தாக்குதல் நிகழ்த்தினர். இப்போது லயோலா கல்லூரியில் புகுந்துள்ளனர். இது, ஒரு மிக நீண்ட பாரம்பர்யம்கொண்ட கல்லூரி; சாமானிய மக்கள் பலருக்கும் கல்வி கொடுக்கும் கல்லூரி. பொதுவெளியில் பேச அனுமதி மறுக்கப்பட்ட பல விஷங்களைப் பேசுவதற்கு, களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு கல்லூரியாக இருக்கிறது. தமிழகத்தில் தங்கள் சித்தாந்தத்தைப் பல வழிகளில் பரப்ப முயன்ற ஆர்.எஸ்.எஸ்., சிறுபான்மையினர் நிறுவனமான லயோலா மீது தாக்குதல் நடத்துவதன்மூலம் தங்கள் சித்தாந்தத்தை தமிழகத்தில் நுழைத்துவிடலாம் என நினைக்கிறது. இதன் தொடர்ச்சியே, தற்போது லயோலா கல்லூரி மீதும் காளீஸ்வரன் மீதும் நிகழ்த்திவரும் இந்தத் தாக்குதல். 

இதற்கு எதிராக பொதுமக்கள், கல்வியில் அக்கறைகொண்டோர் எல்லோரும் களத்தில் இறங்க வேண்டும். பெரியார் பிறந்த மண், திராவிட சித்தாந்தத்தின் பிறப்பிடம் இந்த மண்தான் எனச் சொல்லிக்கொண்டு, இங்கு இருக்கும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் திராவிடக் கட்சியினரும்  இனியும்  கைகட்டி நின்றுகொண்டிருப்பதில் அர்த்தமில்லை. களத்தில் இறங்கி சிறுபான்மையினருக்கும் அவர்கள் கல்வி கற்பதற்கும் எதிராக இருக்கும் இந்துத்துவச் சிந்தனையை எதிர்க்க வேண்டும்” என்று சொன்னவரிடம், ``லயோலா கல்லூரி சார்பில் வருத்தம் தெரிவித்து, கடிதம் கொடுக்கப்பட்டதே..!'' என்று கேட்டதற்கு...

``அது நிர்ப்பந்திக்கப்பட்டு எழுதிக்கொடுக்கப்பட்டது. சிறுபான்மை நிறுவனம், ஆட்சி அதிகாரத்துக்கு எதிர்த்துப் போராட முடியாமல் அப்படி எழுதிக் கொடுத்திருக்கிறது. இதை அப்படித்தான் பார்க்கவேண்டும். அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். சிறுபான்மை நிறுவனங்களின் நிலை இங்கு அப்படித்தான் இருக்கிறது. அந்தக் கடிதம் எழுதிக்கொடுத்த பிறகும் காளீஸ்வரன் கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கியுள்ளார். கல்லூரி நிர்வாகத்திலிருந்தே அவரைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஹெச்.ராஜாவே போன் செய்து மிரட்டியதாக, பேராசிரியர் காளீஸ்வரன் கூறினார்” என்றார்.