Published:Updated:

சென்னையில் பட்டுப்புடவை எடுப்பார்... டிரம்பைப் பிரித்து மேய்வார்... யார் இந்த கமலா ஹாரீஸ்?!

சென்னையில் பட்டுப்புடவை எடுப்பார்... டிரம்பைப் பிரித்து மேய்வார்... யார் இந்த கமலா ஹாரீஸ்?!
சென்னையில் பட்டுப்புடவை எடுப்பார்... டிரம்பைப் பிரித்து மேய்வார்... யார் இந்த கமலா ஹாரீஸ்?!

சென்னையைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் கமலா ஹாரிஸ். இவர் கலிபோர்னியாவிலிருந்து செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வழக்கறிஞர் தொழிலில் கோலோச்சி பின்னர் அரசியலுக்குள் நுழைந்தவர். சென்னையைச் சேர்ந்த ஷியாமலா கோபாலன் என்பவரின் மகள்தான் இந்த கமலா. ஷியாமலா 19 - வயது வரை சென்னையில்தான் படித்தார். மருத்துவம் படித்த அவர் அமெரிக்காவில் புற்று நோய் நிபுணராகப் பணி புரிந்தார். தந்தை பெயர் டொனால்டு ஹாரீஸ். இவர் ஜமைக்காவைச் சேர்ந்தவர். கமலாவுக்கு மாயா என்ற, இளைய சகோதரியும் உண்டு. 

கமலாவின்  தாத்தா பி.வி. கோபாலன் சுதந்திரப் போராட்டத் தியாகி. பாட்டி ராஜம் பெண்கள் உரிமைக்காகப் போராடியவர். இதனால் இயல்பாகவே கமலாவின் ரத்தத்தில் போராட்டக்குணம் ஊறியிருந்தது. 1964-ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஓக்லேன்டில் பிறந்த கமலா, ஹார்வேர்டு பல்கலையில் பயின்றவர். அமெரிக்காவின் பெரிய மாகாணமான கலிபோர்னியாவிலிருந்து செனட்டராகத் தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது பெண் இவர். முதல் இந்திய மற்றும் ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் என்கிற பெருமையையும் பெற்றவர். அமெரிக்காவிலேயே பிறந்து படித்து அங்கேயே செட்டில் ஆகி விட்டாலும் சென்னை மீது கமலா ஹாரிஸ் மிகுந்த பாசம் கொண்டவர். அவ்வப்போது சென்னை வரும் கமலா, தியாகராய நகரிலுள்ள பிரபல பட்டுப்புடவை கடையின் ரெகுலர் கஸ்டமர். சென்னையிலிருந்து அமெரிக்கா திரும்பும் போது அவரின் பெட்டி நிறைய பட்டுப் புடவைகள் நிரம்பி வழியுமாம். அந்தளவுக்குப் பட்டுப்புடவை பிரியை. 

photo credit:  Kamala Harris 

தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்குக் கமலாவுக்கும் ஏக பொருத்தம். அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டு மக்களிடம் ட்ரம்ப் காட்டும் விரோதப் போக்கை கமலா கடுமையாக எதிர்த்தார். 2016-ம் ஆண்டு ட்ரம்ப்புக்கு எதிராக கலிபோர்னியாவில் பெரும் போராட்டத்தை நடத்திக் காட்டினார். ட்ரம்ப்பின் ஒவ்வொரு செயலுக்கும் எதிராகக் கமலாவிடமிருந்து பதிலடி கிடைக்கும். ஜனநாயகக் கட்சியில் ஒபாமாவுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். ஒபாமா கமலாவை நல்ல `வழிகாட்டி' என்று குறிப்பிட்டுப் பேசுவார். கமலாவுக்கு ஒபாமாவின் ஆதரவும் நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த துள்சி கோப்பார்ட் என்ற மற்றொரு செனட்டரும் அதிபர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார். ஆனால், ஜனநாயகக் கட்சியில் 70 சதவிகித செனட்டர்களின் ஆதரவு கமலாவுக்கு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

ஒபாமா போலவே இவரும் கவர்ச்சிகரமான தலைவராக இருப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசம். கடந்த தேர்தலில் அமெரிக்க ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஹிலரி கிளின்டன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஹிலரி வெற்றி பெற்றிருந்தால் அமெரிக்க அதிபரான முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றிருப்பார். அத்தகைய பெருமை கமலா ஹாரிஸுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

photo credit:  Kamala Harris 

தற்போது 49 வயதான கமலா 2014- ம் ஆண்டுதான் டக்ளஸ் எம்காஃப் என்ற வழக்கறிஞரைத் திருமணம் செய்தார். கமலா ஹாரிசுக்கு அவரின் தாயார் ஷியமாளாதான் `சூப்பர் ஹீரோ' . ``என்னையும் மாயாவையும் வளர்த்து ஆளாக்கியதோடு, என்னால் எதையும் செய்ய முடியுமென்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்தவர் என் தாயார்'' என்று கமலா சொல்வது வழக்கம். ``சென்னையில் எங்கள் அம்மாவின் சகோதரர் பாலு, சித்திகள் சரளா, சின்னி ஆகியோர் வசிக்கின்றர். பல ஆயிரம் மைல்கள் தொலைவில் வசித்தாலும் அடிக்கடி பார்த்துக் கொள்ள முடியாவிட்டாலும் நான் இப்போதும் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்'' என்று ஒரு பேட்டியில் கமலா சொல்லியிருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு முதன்முறையாகக் கமலா செனட்டராகப் பதவியேற்ற போது, அவரின் சித்தி சரளாவும் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது, அமெரிக்கத் துணை அதிபர் ஜோசம் பைடனிடம் தன் சித்தியை அறிமுகம் செய்து வைத்தார் கமலா.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதிபர் தேர்தலில் நிற்க வேண்டுமென்றால் பிரசாரத்துக்குக் கோடிக்கணக்கில் பணம் செலவாகும். அதற்கு அதிபர் வேட்பாளர்கள் பொது மக்களிடமிருந்து நிதி திரட்டிக் கொள்ளலாம். அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாளே நிதி திரட்டத் தொடங்கினார் கமலா. `குட்மார்னிங் அமெரிக்கா' என்ற பெயரில் நிதி திரட்டத் தொடங்கிய 24 மணி நேரத்தில் 38,000 பேர் கமலா ஹாரீசுக்கு நிதி வழங்கினர். இதுவரைக்கு 1.5 மில்லியன் யு.எஸ். டாலர்கள் நிதி திரண்டுள்ளது. நன்கொடை வழங்கியவர்கள் சராசரியாக 37 அமெரிக்க டாலர்கள் வழங்கியுள்ளனர். மக்களுக்காக கமலாஹாரீஸ் என்ற ஸ்லோகனுடன் டீசர்ட், தொப்பி விற்பனை வழியாக மேலும் 1,10,000 மில்லியன் டாலர்கள் நிதி திரளும் என்றும் நம்பப்படுகிறது.

முதன்முறையாக செனட்டராகி டொனால்டு ட்ரம்ப்பை எதிர்த்துக் களமிறங்க தனி `தில்' வேண்டும். சம்ஸ்கிருதத்தில் `கமலா' என்றால் தாமரை என்று அர்த்தம். தமிழகத்தில் தாமரை மலர்கிறதோ இல்லையோ அமெரிக்காவில் மலர்ந்து விடுமோ?

அடுத்த கட்டுரைக்கு