Published:Updated:

அம்பேத்கரோடு முடிந்துவிட்டது! - `பாரத ரத்னா’ விருது சர்ச்சை குறித்து திருமா

அம்பேத்கரோடு முடிந்துவிட்டது! - `பாரத ரத்னா’ விருது சர்ச்சை குறித்து திருமா
அம்பேத்கரோடு முடிந்துவிட்டது! - `பாரத ரத்னா’ விருது சர்ச்சை குறித்து திருமா

`பாரத ரத்னா தேர்வுக்குழுவில்கூட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு அம்பேத்கரையும் தலித் சமூகத்தினரையும் புறக்கணிக்கிறது மோடி அரசு' எனக் கடுமையாகப் பா.ஜ.க-வை விமர்சனம் செய்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.


                                                    

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், ``அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசின் நிர்வாகம் மற்றும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்போராட்டத்தை முடிவுக்கு வர வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் முன்வர வேண்டும். நிதிச்சுமை ஏற்படும் என அமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

அரசின் ஊதாரித்தனமான செலவுகளைக் குறைத்துக்கொண்டால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றலாம். 
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, கறுப்புப் பணத்துக்கு எதிராக என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். மாற்றம் மற்றும் வளர்ச்சி என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதி கொடுத்த மோடியின் வார்த்தைக்கு மக்கள் மயங்கினார்கள். ஆனால், இந்தத் தேர்தலில் மக்கள் மயங்க மாட்டார்கள். ஏனென்றால், இந்த ஐந்து ஆண்டுகளில் யார் வளர்ச்சி அடைந்தார்கள் என்று மக்களுக்குத் தெரியும். நாடும் மக்களும் வளர்ச்சி அடையவில்லை. அதானியும் அம்பானியும்தான் வளர்ச்சி அடைந்தார்கள். மீண்டும் ஊழலற்ற ஆட்சியைத் தருவோம் என்பது மக்களை ஏமாற்றும் மோசடி முயற்சி. 

பாரத ரத்னா விருது இந்திய அரசின் மிக உயரிய விருதாகும். சாதி, இனம், மதம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு பார்க்காமல் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்காகவும் ஒற்றுமைக்காகவும் பாடுபடக்கூடியவர்களுக்கு வழங்கப்படும் விருது. ஆனால், எல்லாத் துறைகளிலும் சனாதன சக்திகள் மேலோங்கியுள்ளது. பாரத ரத்னா தேர்வுக்குழுவில்கூட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளதால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பாரத ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. இதுவரை வழங்கப்பட்டுள்ள 68 பாரத ரத்னா விருதுகளில் அம்பேத்கரைத் தவிர, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்குக்கூட வழங்கப்படவில்லை என்பது திட்டமிட்ட புறக்கணிப்பாகவே தெரிகிறது. கே.ஆர்.நாராயணன் போன்றவர்கள் இந்திய அளவில் சாதிய பாகுபாடுகளை எதிர்த்துப் போராடிய தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையிலும், அவர்களை அரசு புறக்கணித்திருப்பது வியப்பாக உள்ளது.

அதே நிலையில், தமிழகத்தில் மதுரை சின்னப்பிள்ளை உள்ளிட்ட ஐந்து பேர்களுக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் அப்பகுதியில் ஏறத்தாழ 34 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமங்களை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு புதிய சுரங்கம் நிறுவுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் அச்சப்பட்டு மக்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாற்று இடம் இழப்பீடு போன்றவற்றை வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது’ எனத் தெரிவித்தார்.