அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

‘அய்யா வழி’... தனி வழியா? - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...

‘அய்யா வழி’... தனி வழியா? - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...
பிரீமியம் ஸ்டோரி
News
‘அய்யா வழி’... தனி வழியா? - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...

‘அய்யா வழி’... தனி வழியா? - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...

ர்நாடகாவில் லிங்காயத்து சமூகத்தைத் தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று மாநில அரசு சார்பாக மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் வாழும் அய்யா வழி வழிபாட்டைப் பின்பற்றுபவர்களையும் தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது. தமிழக சட்டமன்றத்தில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ராதாபுரம் அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பத்துரை பேசியதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் கலி  என்னும் மாய அரக்கனை அழித்து, அவர்களை தர்மயுக வாழ்வுக்கு அழைத்துச்செல்ல நாராயணன் எடுத்த அவதாரமே, வைகுண்ட அவதாரம் என்பது அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்திய அய்யா வைகுண்டரை, விஷ்ணு அவதாரம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர்களை, தனி மதத்தினராக அறிவிக்க வேண்டும் என்று பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோர் கோரிக்கை விடுக் கின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தெஷணமாற நாடார் சங்கத்தின் முன்னாள் தலைவரான சபாபதி நாடார் சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, “அய்யா வைகுண்டர் வழிபாட்டை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும்’’ என்று மனு அளித்தார். 

‘அய்யா வழி’... தனி வழியா? - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...

இதுதொடர்பாக பாலபிரஜாபதி அடிகளாரி டம் பேசினோம். ‘‘சாதி, மத, இனப் பாகுபாடு கூடாது என்பதை வலியுறுத்தி அய்யா வைகுண்டர் வழிபாடு தோன்றியது. சாதிரீதியாக மக்கள் அடிமையாக்கப்படுவதை எதிர்த்து அய்யா வைகுண்டர் அமைத்த வழிபாட்டு முறை இது. உருவ வழிபாடு கிடையாது. இப்போது ஒரு கூட்டம் எங்கள் வழிபாட்டு நடைமுறைகளை அபகரிக்க முயற்சி செய்கிறது. ஒருபோதும் அதை ஏற்க முடியாது. ‘யாரெல்லாம் சுன்னத் செய்து இஸ்லாமியர் ஆகவில்லையோ, யாரெல்லாம் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவர் ஆகவில்லையோ அவர்கள் எல்லோருமே இந்துக்கள்’ என்று சொல்லிக்கொண்டு எங்கள் வழிபாட்டையும் கையில் எடுக்க அவர்கள் முற்படுகிறார்கள்.            நாங்கள் ஆரியத்தையும் அந்நிய மொழியையும் எதிர்த்து, புதிய வழிபாடு கண்டவர்கள். எனவே, எங்களைத் தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு மதச் சிறுபான்மை உரிமை கிடைக்கும். இதை வலியுறுத்து வதால் என்னைக் கொல்லவும்  திட்டமிட்டிருக்கிறார்கள். அய்யா வழிபாட்டைத் தனி மதமாக்க உயிரைக் கொடுக் கவும் தயார்’’ என்றார் ஆவேசத்துடன்.

‘அய்யா வழி’... தனி வழியா? - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...

இன்னொருபுறம், பால பிரஜாபதியின் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய பாடகர் சிவசங்கரன், “ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை என் நண்பர். ஆனால், அவர் சட்டமன்றத் தில் பேசியபோது, ‘அய்யா வழியைத் தனிமதமாக  அறிவிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்ததை அறிந்து நான் மட்டும் அல்லாமல், அய்யா வழியைப் பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களும் வேதனைப்பட்டோம். இந்த வழிபாட்டைப் புரிந்துகொள் ளாமல் சிலர் தனி மதமாக்கக் கோருகிறார்கள். அய்யா வழிபாடு இருந்த காரணத்தால் தான், குமரி மாவட்டத்தில் மத மாற்றம் நடக்கவில்லை. அதை எல்லாம் மறந்துவிட்டு, பால பிரஜாபதி அடிகளார் தனி மதக் கோரிக்கையை முன்வைக்கிறார். இப்படிப் பேசுவதால் என்னை பி.ஜே.பி-யின் ஆதரவாளர் என்கிறார்கள். எனக்கு எந்தக் கட்சி சார்பும் கிடையாது. ஒருகாலத்தில் இழிவானவன் என்று எங்களை ஒதுக்கி வைத்தவர்கள்கூட, இப்போது தோளில் கைபோட்டுப் பேசும் நிலை உருவாகியிருக்கிறது. வைகுண்டர் வழிபாடு எந்தச் சாதிக்கும் சொந்தமானது அல்ல. ஒட்டுமொத்த மக்களுக்கானது. அதை தனி மதமாக அறிவித்தால், தெருவில் இறங்கிப் போராடுவேன்’’ என்றார் காட்டமாக.

இந்து மக்கள் கட்சித் தலைவரான அர்ஜுன் சம்பத், ‘‘இன்பதுரை எம்.எல்.ஏ-வுக்கும், அய்யா வைகுண்டர் வழிபாட்டுக்கும் என்ன சம்பந்தம்? இந்து சமயம் என்கிற பெரும் ஜன சமுத்திரத்திலிருந்து, அய்யா வழிபாட்டின் அன்புக்கொடிகள் என்று அழைக்கப்படுபவர்களை இன்பதுரை பிரிக்க முயற்சி செய்கிறார். இந்தச் சதிச் செயலுக்கு இந்துக்கள் கண்டனம் தெரிவிக்கவேண்டும். அய்யா வழியைத் தனி மதமாக அறிவிக்கும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும். ஏற்கெனவே கர்நாடகத்தில் லிங்காயத்துகளைத் தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அங்கீகரித்து, சதி செய்தது முந்தைய காங்கிரஸ் அரசு. அதுபோல தமிழ்நாட்டில், இந்துக்களைப் பிரிக்க நினைக்கும் முயற்சியை முதல்வர் அனுமதிக்கக் கூடாது’’ என்று படபடத்தார்.

‘அய்யா வழி’... தனி வழியா? - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...

இதனிடையே, குமரி மாவட்டம் சாமித்தோப்பு பகுதியில் இருக்கும் அய்யா வைகுண்டர் பதி என்னும் வழிபாட்டு தலத்தை இந்து அறநிலையத்துறை கைப்பற்றும் முயற்சியும் வேகமாக நடக்கிறது. இதற்கும் பலத்த எதிர்ப்புக் கிளம்பி வருகிறது.

இந்தப் பிரச்னையில் அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது?  

- பி.ஆண்டனிராஜ்,
படங்கள்: எல்.ராஜேந்திரன்