Published:Updated:

மலேசியத் தமிழர்கள் மீட்பு விவகாரம்... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாதிக்கப்பட்டவர்கள்!

மலேசியா சிறையிலிருந்து மீண்டு வந்திருக்கும் 49 தமிழர்கள் கூறுகையில், ``சாப்பாட்டுக்காக ஒரு மணி நேரம் தரையில வரிசையா உட்கார்ந்திருக்கணும். திரும்பிப் பார்த்தா முதுகுல அடிப்பாங்க. 14 பேருக்குக் காலையில 5 லிட்டர், சாயந்தரம் 5 லிட்டர்னு தண்ணி குடுப்பாங்க. கக்கூஸ் போறதுக்கு, குளிக்கறதுக்கு, குடிக்கறதுக்குனு அத்தனைக்கும் அந்தத் தண்ணிதான். ஊருக்குத் திரும்பிப் போவோம்கிற நம்பிக்கையே இல்லாமப் போச்சு’’ என்கிறார்கள்.

மலேசியத் தமிழர்கள் மீட்பு விவகாரம்... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாதிக்கப்பட்டவர்கள்!
மலேசியத் தமிழர்கள் மீட்பு விவகாரம்... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாதிக்கப்பட்டவர்கள்!

`கனிமொழி (நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்) முயற்சியால் மலேசியாவில் தவித்த 49 தமிழர்கள் மீட்பு - கிராம மக்கள் நன்றி’ என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதுதொடர்பாக, ஏற்கெனவே மூன்று செய்திகளையும் பதிவிட்டிருந்தோம். மலேசியாவைச் சேர்ந்த தமிழ்ச் சங்கம், எம்.எல்.ஏ. கருணாஸின் புலிப்படை மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோர் இந்த மீட்பு நடவடிக்கைகளில் உதவியுள்ளனர்' என்று சம்பந்தப்பட்டவர்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் அந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டன. இந்நிலையில், `அவர்களை மீட்டது கனிமொழி அல்ல... எங்களின் முயற்சிதான்' என்றபடி முகநூல் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் காணொலியைப் பதிவேற்றியுள்ளனர் மலேசியாவில் செயல்பட்டுவரும் `அயலகம் உதவிக்குழு - மலேசியா' எனும் அமைப்பினர். 

எது உண்மை?

எது உண்மை என்று அறிந்துகொள்ள நெல்லை மாவட்டத்திலிருக்கும் தலைவன்கோட்டை கிராமத்துக்குச் சென்றோம். மலேசியாவிலிருந்து திரும்பியிருக்கும் வெள்ளத்துரை, குணசேகரன், மாரித்துரை, பேச்சிப்பாண்டியன் ஆகியோரைச் சந்தித்தோம். மலேசிய சிறையில் சிக்கி உடல்நலம் குன்றிப்போனவர்கள், இன்னமும் அதிலிருந்து முழுமையாக மீளவில்லை. தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை எடுத்துவரும் அவர்கள், ``இதுவரைக்கும் எந்த மீடியாவுக்கும் நாங்க பேட்டி கொடுக்கல. செய்தியாளர்கள் பலரும் தேடி வந்தாங்க. இப்ப இருக்குற மனநிலையில யாரிடமும் பேசி, பட்ட கஷ்டங்களையும் வேதனைகளையும் மறுபடியும் நினைச்சுப் பார்க்க விரும்பல. அதனாலதான் யார்கிட்டயும் பேசல. எங்க மேல அக்கறைகொண்டு தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்த விகடனே தேடி வந்திருக்கும்போது பேசாம இருக்க முடியல’' என்றவர்கள், தொடர்ந்தனர். அவர்களுடைய பேச்சின் சாராம்சத்தின்படி அயலகம் உதவிக்குழு, கருணாஸ் மற்றும் கனிமொழி மூன்று தரப்புமே அவரவர் பங்குக்கு உதவி செய்திருப்பது தெரியவருகிறது.

அயராமல் உதவிய அயலகம்!

இதைத் தொடர்ந்து, அயலகம் உதவிக் குழுவைச் சேர்ந்த பாரி தமிழரசனைத் தொடர்புகொண்டு பேசியபோது, ``நானும் ஜோதிபாரதியும் சேர்ந்துதான் அயலகம் உதவிக் குழு அமைப்பைத் தொடங்கினோம். தற்போது 60-க்கும் அதிகமானோர் இந்தக் குழுவில் இருக்கிறார்கள். இங்கே வேலை செய்துகொண்டே பிறருக்கு உதவும் பணியையும் செய்துவருகிறோம். எங்களின் முயற்சியால் நிறைய பேர் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்கள். உரிய அனுமதி பெறாமல் புரோக்கர்களை நம்பி வேலைக்காக வந்து சிறையில் சிக்கிக்கொள்பவர்கள் பற்றிய தகவல்களை உறவினர்களுக்குத் தெரிவிப்பது, தூதரகம் மற்றும் குடியுரிமைத் துறை அதிகாரிகள் மூலமாக மீட்டுச் சொந்த ஊருக்கு அனுப்புவது போன்ற பணிகளைச் செய்துவருகிறோம். அப்படித்தான் அந்த 49 பேருக்கும் உதவி செய்தோம். அவர்களின் வழக்குகளைத் தொடர்ந்து கவனித்துவந்தோம். சிறைக்குச் சென்று உதவிகளைச் செய்தோம். தூதரகத்தில் அவர்களின் நிலையை எடுத்துச் சொல்லி சொந்த ஊருக்கு அனுப்ப முயற்சிகளைச் செய்தோம். ஆனால், எந்த உதவியும் செய்யாத தமிழக அரசியல்வாதிகள் அவர்களை வைத்து அரசியல் செய்வதை என்ன சொல்வது’’ என்றார் காட்டமாக.

கருணை காட்டிய கனிமொழி!

கனிமொழி தரப்பினரிடம் பேசியபோது, ``செய்யாத உதவிகளுக்கு பெருமைதேடிக் கொள்ளவேண்டிய அவசியம் கனிமொழிக்குக் கிடையாது. மலேசியா சிறையில் தவித்த அந்த 49 பேரின் உறவினர்கள் கனிமொழியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்ததுமே, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மூலமாக நடவடிக்கை எடுத்தார். வெளியுறவுத் துறை அதிகாரிகளிடமும் பேசி வந்தார். சிறையிலிருந்தவர்களை, குடியுரிமை தடுப்பு முகாமுக்கு மாற்றி இருப்பதாக சுஷ்மா சுவராஜ் கடிதம் மூலமாகவே கனிமொழிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மலேசியாவிலிருந்து மீண்டு வந்திருப்பவர்களே கனிமொழியை நேரில் சந்தித்து, `நீங்க உதவி செய்யலைனா திரும்பி வந்திருக்க முடியாது’ என்று நன்றியும் தெரிவித்துள்ளனர். இப்படி வெளிநாட்டுச் சிறையில் சிக்கிய மீனவர்கள் உள்ளிட்ட பலரையும் மீட்க கனிமொழி உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்’’ என்றார்கள்.

ஒட்டுமொத்தமாகக் கிடைத்த உதவி!

ஆக மொத்தம், அயலகம் உதவிக்குழு - மலேசியா, கருணாஸின் ஆட்கள் மற்றும் கனிமொழி ஆகிய மூன்று தரப்புமே இந்த 49 பேருக்கு உதவியுள்ளனர். ஆரம்பத்தில் நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கருணாஸ் மற்றும் கனிமொழி ஆகியோரின் உதவிகள் குறித்து செய்திகளை வெளியிட்டிருந்தோம். அயலகம் உதவிக்குழுவின் மனிதாபிமான அடிப்படையிலான முயற்சிகள் பற்றி அப்போது நமக்குச் சொல்லப்படவில்லை. அப்பாவிகளாக வந்து சிக்கிக்கொள்ளும் சகதமிழர்களை மீட்பதற்காகவே மலேசிய மண்ணில் அமைப்பை நடத்திவரும் அயலகம் உதவிக்குழுவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவையே!

கண்ணீர்க் கதை!

இந்த விவாதங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் மலேசியாவிலிருந்து மீண்டிருக்கும் அவர்களின் கதை, அனைவருக்கும் கண்ணீரைப் பொங்கவைப்பதாக இருக்கிறது. வெள்ளத்துரை, குணசேகரன், மாரித்துரை, பேச்சிப்பாண்டியன் ஆகியோர் பேசும்போது, ``ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த நாங்க, வெளிநாட்டுல வேலை பார்த்தா குடும்பக் கஷ்டங்கள் தீரும்னுதான் வட்டிக்குப் பணத்தை வாங்கி, நேரடியா கம்பெனி மூலமாகவே மலேசியாவுக்குப் போனோம். ஏ.ஜே.என் எனர்ஜி நிறுவனம் சார்பாக மின்சார டவர் அமைக்கும் வேலைக்காகத்தான் போனோம். வேலை நேரம், தங்கும் வசதி, சம்பளம் எல்லாத்தையும் ஒப்பந்தத்திலேயே தெரிவிச்சிருந்தாங்க. ஆனா, அதையெல்லாம் மீறி, மலேசிய காட்டுப் பகுதியில காலை 7 மணியில இருந்து ராத்திரி 7 மணி வரை டவர் அமைக்கிற வேலை செய்ய வெச்சாங்க. பாம்பு, காட்டுப்பன்றி, அட்டைப்பூச்சி, விஷப்பூச்சினு உயிருக்கே ஆபத்தான சூழல்ல உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு வேலை பார்த்தோம். ஒருத்தருக்கு விஷப்பூச்சி கடிச்சதால, ஒரு வாரத்துக்குப் பார்வையே தெரியல. 

முதல் மாசம் பேசினபடி சம்பளம் கொடுத்தவங்க, அடுத்த மாசமே பாதியா குறைச்சுட்டாங்க. பத்தாயிரம் ரூபாய்தான் கொடுத்தாங்க. ஒப்பந்தப்படி உணவு, தங்குமிடம், குடிநீர் வசதி செய்து கொடுக்கல. அதனால, வேலை செய்ய மறுத்தோம். பாஸ்போர்ட்டை வாங்கிவெச்சுக்கிட்டு, போலீஸில் புகார் செய்துட்டாங்க. `கம்பெனி விதிமுறைகளைக் கடைபிடிக்கலை'னு சொல்லி, ஜெயில்ல போட்டுட்டாங்க. கொலையாளிகள், போதைப்பொருள் கடத்தி தண்டனை பெற்றவங்க உட்பட கொடூரக் குற்றவாளிகளோட எங்களையும் அடைச்சுட்டாங்க.

நம்பிக்கையே செத்துப்போச்சு!

சாப்பாட்டுக்காக ஒரு மணிநேரம் தரையில வரிசையா உட்கார்ந்திருக்கணும். திரும்பிப் பார்த்தா முதுகுல அடிப்பாங்க. 14 பேருக்கு காலையில 5 லிட்டர், சாயந்தரம் 5 லிட்டர்னு தண்ணி குடுப்பாங்க. கக்கூஸ் போறதுக்கு, குளிக்கறதுக்கு, குடிக்கறதுக்குனு அத்தனைக்கும் அந்தத் தண்ணிதான். குளிக்காததால சொறி, சிரங்கு, சிக்கன்பாக்ஸ் வந்து சிரமப்பட்டோம். ஊருக்குத் திரும்பிப் போவோம்கிற நம்பிக்கையே இல்லாமப் போச்சு. இந்த நிலையிலதான், `அயலகம் உதவிக்குழு'வைச் சேர்ந்த ஜோதிபாரதி, சிறையில் வந்து எங்கள பார்த்தார். வேதனையையெல்லாம் கொட்டித் தீர்த்தோம். எங்க மொபைல் போனுக்கு ரீசார்ச் செய்து கொடுத்தார். எங்க கஷ்டங்கள வீடியோவா பதிவு செஞ்சு வீட்டுக்கு அனுப்பினோம். ஊர்ல இருக்கறவங்ககிட்ட பேசினோம். எங்க உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர்கிட்ட ரெண்டு தடவை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எங்க ஊரைச் சேர்ந்த புலிப்படை மாவட்டச் செயலாளர் ராஜூ குணசேகரன் மூலமாக கருணாஸ் எம்.எல்.ஏ-வுக்கு விஷயத்தை எங்க உறவுக்காரங்க தெரியப்படுத்தியிருக்காங்க. கருணாஸ் சொல்லி, மலேசியாவுல இருக்கிற நந்தகோபால்ங்கறவர் எங்கள வந்துபார்த்துட்டு, தூதரகத்தில் தகவல் சொல்லி உதவி கேட்டார். ஆனா, எந்த உதவியும் கிடைக்கல. பிறகுதான், எங்க ஊரைச் சேர்ந்த பூசைப்பாண்டியன், ராஜூ குணசேகரன், சுப்பையா பாண்டியன், துரைபாண்டியன் இவங்களோட கிராம மக்களும் சேர்ந்து கனிமொழியைச் சந்திச்சி விஷயத்தைச் சொல்லியிருக்காங்க. 2018 டிசம்பர் 20-ம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கனிமொழி கடிதம் எழுதின பிறகுதான், இந்தியத் தூதரகத்துல இருந்து ராமகிருஷ்ணன்கிற அதிகாரி வந்து பார்த்துப் பேசினார்.

`அயலகம் உதவிக்குழு' ஜோதிபாரதி அடிக்கடி எங்கள சந்திச்சி செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துகொடுத்து குடும்பத்தோட பேச உதவியா இருந்தார். அவரைப் பார்த்த பிறகுதான், `சொந்த ஊருக்குப் போய்விட முடியும்'கிற நம்பிக்கையே வந்துச்சு. இந்தியத் தூதரகத்துக்கும் அயலகம் உதவிக்குழுவினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாங்க. இன்னொரு பக்கம் சுஷ்மா சுவராஜ் மூலமா கனிமொழி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே, பக்கிட் (Bukit) ஜெயிலுக்கு எங்கள மாற்றினாங்க. அந்தச் சிறையும் நரகமாகவேதான் இருந்துச்சு. சில நாள்களுக்குப் பிறகுதான் ஊர் திரும்புறதுக்கான நடவடிக்கைள் ஆரம்பமாச்சு.

பெயர் வாங்கப் பார்த்த தமிழக அரசு!

பிப்ரவரி 20-ம் தேதி காலை 7.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்துட்டோம். ஆனா, அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜலட்சுமி ரெண்டுபேரும் 9 மணிக்குத்தான் வந்தாங்க. அதுவரை எங்கள வெளியில விடல. உறவினர்களையும் பார்க்க அனுமதிக்கல. சென்னை மாவட்ட கலெக்டரும் அதிகாரிகளும் வந்து, `தமிழக அரசின் முயற்சியாலும் உதவியாலும்தான் சொந்த ஊருக்கு வர முடிஞ்சது’னு சொல்லச் சொன்னாங்க. நாங்க மறுத்துட்டோம். `எங்களுக்கு தமிழக அரசு எந்த உதவியும் செய்யல'னு சொன்னதுக்கு, `நீங்க என்ன ராணுவத்துலயா வேலை செஞ்சுட்டு வந்திருக்கீங்க. பணத்துக்காக வெளிநாட்டு வேலைக்குப் போயிட்டுதானே வந்திருக்கீங்க. உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்’னு அதிகாரிங்க சொன்னாங்க. அமைச்சர்கள் வந்தபிறகும், சால்வை வாங்கிட்டு வர மறந்துட்டதால கூடுதலா ஒரு மணிநேரம் காத்திருக்க வெச்சுட்டாங்க. `தமிழக அரசின் முயற்சியால் 49 தமிழர்கள் மீட்கப்பட்டு இருக்காங்க’னு அமைச்சர் ஜெயக்குமார் கூச்சமே இல்லாம மீடியாகிட்ட சொன்னார். தமிழக அரசு சார்பாக வழிச் செலவுக்கு ரூ.500, காலை உணவு, சொந்த ஊர் செல்ல போக்குவரத்து வசதி எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறதா அமைச்சரும் அதிகாரிகளும் சொன்னாங்க. `எந்த உதவியும் தேவையில்லை'னு சொந்தச் செலவுலயே ஊருக்கு வந்துட்டோம். கடைசியா நாங்க சொல்ல விரும்புறது என்னன்னா, தமிழக இளைஞர்கள் யாரும் மலேசியாவுக்கு வேலைக்குப் போய் சிரமப்பட வேண்டாம்கிறதுதான்’’ என்றனர் சற்றே வேதனையுடன்.

என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

தொடர்ந்து அவர்கள், ``எங்களுக்குத் தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இதுவரையிலும் இங்கே வந்து எந்த அதிகாரியும் பார்க்கவில்லை. உடல் நலப்பாதிப்பு காரணமாக இன்னும் சிகிச்சை எடுத்துக்கிட்டிருக்கோம். எங்களோட பரிதாபமான நிலையைக் கவனத்துல எடுத்துக்கிட்டு, தொழில் தொடங்க கடன் உதவி அளிக்கவாவது தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றார்கள், பாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞர்கள். 

அவர்களின் கோரிக்கையையாவது பரிவுடன் பரிசீலிக்குமா, தமிழக அரசு?