Published:Updated:

“20 வருஷமாச்சு, திட்டமும் வரல இழப்பீடும் இல்ல” - தேர்தலைப் புறக்கணிக்க அரியலூர் விவசாயிகள் முடிவு

“20 வருஷமாச்சு, திட்டமும் வரல இழப்பீடும் இல்ல” - தேர்தலைப் புறக்கணிக்க அரியலூர் விவசாயிகள் முடிவு
“20 வருஷமாச்சு, திட்டமும் வரல இழப்பீடும் இல்ல” - தேர்தலைப் புறக்கணிக்க அரியலூர் விவசாயிகள் முடிவு

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால், கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க ஆலோசனைக் கூட்டம் நடத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்று அரியலூர். இம்மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாகும். நஞ்சைப் பயிர்களான நெல் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும், மானாவாரி பயிர்களான கடலை, சோளம், பருத்தி ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன. முந்திரி சாகுபடியும் அதிக அளவில் உள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் தொழிலுக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்கள் கிடைப்பதால், அரசு மற்றும் தனியார் சிமென்ட் ஆலைகள் என ஏழு சிமென்ட் ஆலைகள் உள்ளன. இந்நிலையில், சிமென்ட் தொழிற்சாலைகளுக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்களை   எடுப்பதற்காகத் தனியார் நிலங்களை வாங்கி சுண்ணாம்பு சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாய நிலமும் பெருமளவு குறைந்து, விவசாயிகள் வேலைவாய்ப்பின்றி வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள ஜெயங்கொண்டம், செங்குந்தபுரம், தேவனூர், நடுவெளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், கடந்த 25ஆண்டுகளுக்கு ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக, சுமார் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சொந்த நிலம் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது, நிலத்திற்கு சொற்ப விலையே கொடுக்கப்பட்டதால் அதிக விலை தர வேண்டும் என விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததையடுத்து, 2 சிறப்பு நீதிமன்றங்கள் ஜெயங்கொண்டத்தில் தொடங்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில், ஏக்கர் ஒன்றிற்கு 8லட்சம் முதல் 10லட்சம் வரையிலும் நிலத்திலிருந்த மரத்திற்குத் தனியாகவும் இழப்பீடு வழங்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், திட்டமும் இதுவரை தொடங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. நிலத்தை திட்டம் தொடங்கப்படும்வரை நில உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், நிலம் கொடுத்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இத்திட்டத்திற்காக தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், தமிழ்நாடு முதலீட்டுக் கழகம் என்ற பெயரில் பட்டா மாற்றம் செய்யப் பட்டுள்ளதால், விற்பனை செய்த தனது நிலத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள மட்டுமே உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலத்தைவைத்து கடன் வாங்குவோர் அடமானம் வைக்க முடிவதில்லை. இதனால், தங்களது குழந்தைகளின் மேற்படிப்புக்குத் தேவையான கடன் வாங்குவதற்கோ, குழந்தைகளின் திருமணத்திற்கு நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கவோ அல்லது விவசாயத்தை மேம்படுத்துவதற்கான செலவினங்களுக்கான கடன்களை வாங்கவோ முடியாத நிலையால், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். மேலும், தற்போது மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படுகின்ற உதவித்தொகையைக்கூட பெற முடியாத அளவிற்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரிடமே நேரிடையாக மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை வழங்காமல், திட்டத்தையும் தொடங்காமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும். ஒரு திட்டம் தொடங்க அரசால் நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது, குறிப்பிட்ட காலங்களில் அத்திட்டம் தொடங்காவிட்டால், நிலத்தை உரிய விவசாயிகளிடமே வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் அதனை மதிக்காமல், அரசு செயல்பட்டுவருகிறது. எனவே, இப்பகுதி விவசாயிகள் நிலம் இருந்தும் அனாதைகளாகவே வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகளுக்குக் கொண்டுசெல்லும் வகையிலும், சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தும் வகையிலும் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க இக்கிராம மக்கள் தற்போது ஆலோசனைசெய்துவருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி ஆசைத்தம்பி பேசுகையில், ”ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலம் கொடுத்துவிட்டு 20 வருடங்களாகக் காத்திருக்கிறோம்.எந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தது கிடையாது. இதனால், விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளோம். உரிய இழப்பீடு மற்றும் திட்டத்தைத் தொடங்க பல முறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசுக்கு வலியுறுத்தியும் எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை. இதுகுறித்து மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை 15 கிராம மக்களும் புறக்கணிக்க தற்போது ஆலோசனை செய்துவருகிறோம். மேலும், சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை வழங்குவதாக கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உறுதி கூறினால் மட்டுமே நாங்கள் தேர்தலைச் சந்தித்து வாக்களிப்போம். இல்லையென்றால், தேர்தல் நாளன்று அனைத்து வீடுகளிலும் கறுப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து, தேர்தலைப் புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளனர்