Published:Updated:

33 கோடி வொயிட்... 1,000 கோடி பிளாக்... தமிழகத் தேர்தலின் 'டுமீல்' செலவு!

33 கோடி வொயிட்... 1,000 கோடி பிளாக்... தமிழகத் தேர்தலின் 'டுமீல்' செலவு!
33 கோடி வொயிட்... 1,000 கோடி பிளாக்... தமிழகத் தேர்தலின் 'டுமீல்' செலவு!

தமிழகத்திலுள்ள 30 லிருந்து 35 தொகுதிகள் வரை, தலா 30 கோடி ரூபாய் வரை பணம் செலவிடப்படுமென்று, அரசியல் விமர்சகர்கள் பலரும் கணிக்கின்றனர். குறிப்பாக, ஐந்தாறு தொகுதிகளில் 50 கோடிகளைத் தாண்டவும், அதிலும் ஒன்றிரண்டு தொகுதிகளில் 100 கோடி ரூபாயைத் தாண்டிப் பணம் வாரியிறைக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘கற்றது கையளவு; கல்லாதது கடலளவு’ என்பது பழமொழி. 'கைப்பற்றியது துளியளவு; கடத்தப்பட்டது மலையளவு’ என்பதுதான் தமிழகத்துக்கான தேர்தல் மொழி. அந்த அளவிற்கு இந்தத் தேர்தலில் விளையாடபோகிறது கறுப்புப்பணம். 

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்குச் சவால் விடும் வகையில், தேர்தலைப் பணத்தால் எதிர்கொள்ளும் போக்கு, தமிழகத்தில் விஷவிருட்சமாக வளர்ந்து வருகிறது. தேர்தலுக்குத் தேர்தல், பணம் விளையாடுவது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தேர்தல் ஆணையமும் `நாங்களும் இருக்கோம்ல’ என்ற கணக்கில், ஏதோ பெயரளவுக்குக் கொஞ்சம் பணத்தைப் பிடித்துப் பறிமுதல் செய்து கொண்டிருக்கிறது.

தமிழகம் இதுவரை சந்தித்திராத அளவுக்கு, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது. நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் வெல்வதைவிட, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஜெயிப்பதையே இரு பெரும் திராவிடக் கட்சிகளும் முக்கிய `டார்கெட்’ ஆக வைத்துள்ளன. ஆனால், இரண்டு தேர்தல்களிலும் தங்களது சாதனைகள், எதிர்க்கட்சிகள் மீதான குற்றச்சாட்டுகள், மக்களை ஈர்க்கும் தேர்தல் வாக்குறுதிகள் மூலமாக வாக்குகளை வாங்குவதை விட, நேரடியாகப் பணம் கொடுப்பதன் மூலமாகவே தங்களால் ஜெயிக்க முடியுமென்பதில் இரண்டு கட்சியினருமே உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக, ஆளும்கட்சிக்கு இது வாழ்வா, சாவா போராட்டம் என்பதால், இந்த இடைத்தேர்தலில் பெருமளவு தொகுதிகளைக் கைப்பற்றுவதற்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராகவுள்ளது. நாடாளுமன்றத் தொகுதிகளில், `ஓட்டுக்கு 500 ரூபாய் நோட்டு’ என்று பட்ஜெட் போட்டுள்ள அ.தி.மு.க தலைமை, இடைத்தேர்தலில் `ஓட்டுக்கு 2,000 ரூபாய் நோட்டு’ என்று கணக்குப் போட்டிருப்பதாகத் தகவல்கள் பரவி, எதிர்க்கட்சியினரை தலைசுற்றவைத்துள்ளது. 

இதற்கிடையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, கணக்கில் காட்டப்படாத அல்லது காட்ட முடியாத பணம் 14 கோடி ரூபாய் வரை, பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தங்கநகைகள், மொபைல்போன்கள் எனப் பலவிதமான விலைமதிப்புள்ள பொருள்களும் எக்கச்சக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை கைப்பற்றப்பட்டதைப் பற்றிச் சொல்லும் தேர்தல் ஆணைய அதிகாரிகள், அவை திரும்ப ஒப்படைப்பது பற்றித் தெளிவாகத் தகவல் தருவதில்லை.

தற்போதைய நிலையில், தேர்தல் பணி செய்வோருக்குக் கொடுப்பதற்காக மட்டுமே, பல இடங்களுக்கும் பணம் பயணப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பே, பல கோடி வாக்காளர்களுக்கு, ஓட்டுக்கு இவ்வளவு என்று பணப்பட்டுவாடா செய்வதற்கான வேலைகளையும் முக்கியக் கட்சிகள் செய்து வருகின்றன. இதற்கான பணம் எந்தெந்த வழிகளில் எங்கெங்கே கடத்தப்படுகிறது என்பதுதான் இப்போது வரை யாருக்குமே புரியாதபுதிராக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் ஆளும்கட்சிக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளே, கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு முக்கிய பணிகளிலும் காவல் பணிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், இவர்களின் வாகனங்களிலேயே ஆளுங்கட்சியினரின் பணம் கொண்டு செல்லப்படுகிறது என்று அதிர்ச்சிகரமான தகவல்களையும் விவரமறிந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கோவை மாவட்டத்தில், ஆளும்கட்சி வி.ஐ.பி ஒருவரின் தொகுதிக்கும் அவரது ஆதரவாளர் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு தொகுதிக்கும் அந்த வி.ஐ.பி–க்கு நெருக்கமானவர்களே தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய வாகனங்களில்தான், பல இடங்களுக்கும் பணம் கடத்தப்பட்டது. இதுபற்றித் தகவலறிந்த தி.மு.க–வினர், அப்போதிருந்த தமிழக தேர்தல் அதிகாரிக்கே புகார் கொடுத்தனர். ஆனால், தகவல் அவர்களுக்கே அனுப்பப்பட்டு, பெயரளவுக்குச் சோதனை நடத்தப்பட்டது. அவர்களை மாற்ற வேண்டுமென்ற எதிர்க்கட்சியினரின் கோரிக்கை இறுதிவரை ஏற்கப்படவேயில்லை.

அந்தத் தேர்தலின்போது, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் `கான்வாய்’ வாகனங்களிலும், உயர் போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களிலும் பணம் கடத்தப்படுகிறது என்று, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ புகார் தெரிவித்தார். ஆதரவற்றோர் பிணங்களை போலீஸார் உதவியுடன் எடுத்துச் சென்று, அவற்றை எடுத்துச் செல்லும் அமரர் ஊர்திகளிலும் பணம் கொண்டு செல்லப்படுவதாகவும் அப்போது புகார் கிளம்பியது. ஆனால், இதுபோன்று எந்த வாகனங்களிலும் பணம் கைப்பற்றப்படவே இல்லை. மாறாக, சிறு வணிகர்கள், சிறு தொழிற்கூடம் நடத்துவோரின் வாகனங்கள் மறிக்கப்பட்டு, அவர்களிடமிருந்த பணம் பறிமுதல் செய்வது தொடர்ந்து நடந்துவந்தது. இப்போது ஆம்னி பஸ்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் வாகனங்களில்தான் அதிகளவில் பணம் கடத்தப்படுகிறது என்று பரவலாக புகார் கிளம்பியுள்ளது. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ``தேர்தல் ஆணையம் பணத்தைப் பிடிப்பது என்பது, முழுக்க முழுக்கக் கண் துடைப்பு வேலை. ஆளும்கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், பணத்தை ஏற்கெனவே பதுக்கிவிட்டனர். சென்னையிலிருந்து ஆம்னி பஸ்களிலும் போலீஸ் வாகனங்களிலும்தான் வெளியூர்களுக்குப் பணம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக எங்களது துறையிலேயே தகவல் கசிந்து வருகிறது. உள்ளூருக்குள் பணத்தைப் பரிமாறுவதற்கும், அந்தந்தத் தொகுதிகளில் ஆளுங்கட்சியினரால் பணியமர்த்தப்பட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளின் வாகனங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்கள் எதுவும் எந்தச் சோதனைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. அதனால், இந்தத் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்குப் பணம் ஆறாகப் பாயும் என்பது உறுதி.

வேலுார், அரக்கோணம், தேனி, மத்திய சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட சில தொகுதிகளில் பல கோடி ரூபாய் பணம் புரளும் வாய்ப்புள்ளது. சில தொகுதிகளில் முதற்கட்டப் பணப்பட்டுவாடா முடிந்துவிட்டது. வேலூரில் கற்பனைக்கு எட்டாத அளவுக்குப் பணத்தை இறக்குவதற்கு ஒரு வேட்பாளர் தயாராகவுள்ளார். இந்த முறை எப்படியும் ஜெயிக்க வேண்டுமென்பதற்காக, கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகளுக்குப் பட்டு வேட்டி, பட்டுச் சேலை வாங்கிக் கொடுத்து, தேர்தல் பணியை அமர்க்களமாகத் தொடங்கியுள்ளார். அங்கெல்லாம் அதிரடி ஆய்வுகள் செய்தால், எக்கச்சக்கமான பணம் மற்றும் பொருள்களைப் பிடிக்கமுடியும். ஆனால், தேர்தல் பணியிலுள்ள எந்த அதிகாரியும் அதைச் செய்யமாட்டார்கள். இந்தத் தேர்தலில் கருத்துக் கணிப்புகளை வைத்து, எதையும் தீர்மானிக்க முடியாது. அந்த அளவிற்குப் பணம், தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். ஒரே ஒரு ஆர்.கே.நகர்த் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோதே, ஆளும்கட்சியின் அதிகாரபலம், எதிர்க்கட்சியின் அரசியல் பலத்தைத் தாண்டி பணம் விளையாடியது. அந்தத் தேர்தலின் முடிவு, தமிழகத்தில் இனிமேல் நியாயமாகத் தேர்தல் நடக்க வாய்ப்பேயில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டது. இந்தத் தேர்தலில் அது அடுத்தகட்டத்தை நோக்கி நகரும். குறிப்பாக, இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் மூன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் பணத்தைத் தாறுமாறாக இறக்குவதற்கு வாய்ப்புண்டு. ஆளுங்கட்சியினர் பணம் கொடுப்பதைத் தடுக்காமல், எதிர்க்கட்சியினரின் பணத்தை மட்டும் முடக்க நினைத்தால் சட்டம்–ஒழுங்கு பிரச்னை ஏற்படுமென்பது நிச்சயம்’’ என்றார்.

தமிழகத்திலுள்ள 30 லிருந்து 35 தொகுதிகள் வரை, தலா 30 கோடி ரூபாய் வரை பணம் செலவிடப்படுமென்று, அரசியல் விமர்சகர்கள் பலரும் கணிக்கின்றனர். குறிப்பாக, ஐந்தாறு தொகுதிகளில் 50 கோடிகளைத் தாண்டவும், அதிலும் ஒன்றிரண்டு தொகுதிகளில் 100 கோடி ரூபாயைத் தாண்டிப் பணம் வாரியிறைக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இதுவே, சட்டமன்றத் தொகுதிகளில் 5லிருந்து 10 கோடி ரூபாய் வரை பணம் இறங்கும் என்றும் அடித்துச் சொல்கின்றனர். இதன்படி கணக்கிட்டால், ஒட்டுமொத்தமாக 1200 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் செலவிடப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றத் தொகுதிக்கு 70 லட்ச ரூபாய், சட்டமன்றத் தொகுதிக்கு 28 லட்ச ரூபாய் என்றுதான் தேர்தல் ஆணையம் செலவு வரம்பை நிர்ணயித்துள்ளது. இதன்படி பார்த்தால், புதுச்சேரியையும் சேர்த்து 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் அனுமதிக்கும் செலவினத்தொகை, 28 கோடி ரூபாய். 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து 5 கோடியே 4 லட்ச ரூபாய். இரண்டுக்கும் சேர்த்து 33 கோடியே 4 லட்ச ரூபாய் மட்டுமே. உண்மையாகச் செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தொகையையும், கணக்கில் காட்டப்படவுள்ள தொகைக்குமான இடைவெளி, மலைக்கும் மடுவுக்குமானதாக இருக்கிறது. சுருங்கச் சொன்னால், 1000 கோடி ரூபாய் அளவிற்குக் கறுப்புப்பணம், இந்தத் தேர்தலில் இறக்கப்படவுள்ளது. அத்தனையையும் வருமானவரித்துறையும் தேர்தல் ஆணையமும் வேடிக்கை பார்க்கவுள்ளன. கூடவே, தமிழக வாக்காளர்களும்தாம். 

அடுத்த கட்டுரைக்கு