Published:Updated:

வறட்சி பாதிப்பு: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திருவாரூர் புறக்கணிப்பா...?

வறட்சி பாதிப்பு: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திருவாரூர் புறக்கணிப்பா...?
வறட்சி பாதிப்பு: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திருவாரூர் புறக்கணிப்பா...?

மிழ்நாட்டில் கடந்தாண்டு குறைந்த அளவே மழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்படுவதாக தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் அதுல்ய மிஸ்ரா அரசாணை வெளியிட்டுள்ளார்.

இந்த மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடங்கிய 38 வட்டாரங்களும் வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. என்றாலும், வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் திருவாரூர் மாவட்டம் இடம்பெறவில்லை. `தமிழக அரசின் இந்தச் செயல் நேர்மையற்றது எனக் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. அதன் பின்னணியில் அரசியல் மற்றும் அழிவுத் திட்டங்கள் அடங்கியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்துப் பேசிய தமிழகக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் இணைச் செயலாளர் வரதராஜன், ``திருவாரூர் மாவட்டத்துல கடந்த ஆண்டு மழையே இல்லை. தண்ணீர்ப் பற்றாக்குறையால் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் பரிதவிச்சுப் போனாங்க. பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு, பெரும்பாலான இடங்கள்ல போராட்டங்கள் நடந்துச்சு. இயல்பான மழை இல்லாததால் இங்குள்ள ஏரி, குளங்கள் எதுலயும் கொஞ்சமும் தண்ணீர் தேங்கல. நிலத்தடிநீர் மட்டமோ 80 அடிக்கும் கீழ போயிடுச்சுன்னு தமிழ்நாடு வடிகால் வாரியமே அறிவித்தது. ஆனால், தமிழக அரசோ திருவாரூர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்காமல் புறக்கணிக்குது. இதன் பின்னணியில மிகப்பெரிய உள்நோக்கம் இருக்கு. திருவாரூர் மாவட்டத்தில் திருக்காரவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு துடிச்சுக்கிட்டு இருக்கு. தமிழக அரசும் அதுக்கு உடந்தையா இருக்கு. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும்னு ஏற்கெனவே மக்கள் இதற்கு எதிராப் போராடிக்கிட்டு இருக்காங்க. ஏற்கெனவே இங்க செயல்பட்டுக்கிட்டு இருக்கக்கூடிய ஓ.என்.ஜி.சி-யின் பெட்ரோல் - எரிவாயுக் கிணறுகளால்தான் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதாகவும் மக்கள் ஆதங்கப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இந்தச் சமயத்துல திருவாரூர் மாவட்டத்தை நீரியல் வறட்சி மாவட்டம்னு அறிவித்தால், இதையே காரணமாகாட்டி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மேலும் தீவிரமடையும்னு தமிழக அரசு கணக்குப் போட்டிருக்கு. 

திருவாரூரை வறட்சி மாவட்டம்னு அறிவிக்க மறுக்கும் இதே தமிழக அரசுதான், மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடிநீர் மட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டது. தண்ணீர்ப் பற்றாக்குறையால் மானாவாரிப் பகுதியாக அறிவித்து, நலத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மானாவாரினு அறிவிச்சாலே நெல் சாகுபடிக்கு வாய்ப்பில்லாத பகுதின்னு அர்த்தம். தண்ணீர் அதிகம் தேவைப்படக்கூடிய நெல் சாகுபடியை விவசாயிகள் கைவிட்டால்தான், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு இருக்காதுன்னு அரசு நினைக்குது. அதேசமயம் வறட்சி மாவட்டம்னு அதிகாரபூர்வமா அறிவிச்சுட்டோம்னா, விவசாயத்துக்கும் குடிநீருக்கும் உத்தரவாதம் வழங்கக்கோரி போராட்டங்கள் நடக்கும்னு அரசு நினைக்குது” என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ``அ.தி.மு.க. ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போயிடுச்சு. தி.மு.க. தலைவராக இருந்து மறைந்த கருணாநிதியின் சொந்த மாவட்டம் என்பதாலேயே, திருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்காமல் தமிழக அரசு தவிர்த்துள்ளது. இது மிகவும் தவறான செயல். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்துல திருவாரூர் மாவட்டத்துல மழையே பெய்யவில்லை. புயல் அடித்தால் அதைத் தொடர்ந்து மழை வர்றது வழக்கம். ஆனால், கஜா புயல் கடுமையாக தாக்கிய சமயத்திலும்கூட பெரிய அளவில் மழை பெய்யவில்லை. எனவே, திருவாரூர் மாவட்டத்தையும் வறட்சி பாதித்த மாவட்டமாக கண்டிப்பாக அறிவிக்க வேண்டும். அறிவிக்கிறதோட நிறுத்தாமல், மாவட்டத்தில் ஆக்கபூர்வமான திட்டங்களையும், உதவிகளையும் விவசாயிகளுக்கு வழங்கணும். ஆனால், அ.தி.மு.க. அரசு இதை ஒழுங்காகச் செய்றதே இல்லை. 2016-17-ம் ஆண்டு தமிழ்நாட்டுல பெரும்பாலான மாவட்டங்கள்ல கடுமையான வறட்சி நிலவியது.

போராட்டங்கள் தீவிரமடைந்ததால், அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்கள் என அறிவித்து, விவசாயிகளுக்கு நிலவரி ரத்து செய்யப்படும், மகசூல் இழப்பு ஏற்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்னு அறிவித்தார். ஆனால், அவை எதுவுமே பின்னர் நடக்கல. கண் துடைப்புக்காக, குறுகிய காலக் கடன்களை மத்திய காலக் கடன்களாக நீட்டிப்பு செஞ்சாங்க...அவ்வளவுதான். வறட்சியால் வருவாயை இழந்த விவசாயிகளால், கடன்களை அடைக்க முடியலை. பழைய கடன் நிலுவையில் இருந்ததால் புதிய பயிர்க் கடனும் கிடைக்கலை. அதே நிலைமை மறுபடியும் வந்துடக்கூடாது. வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 24 மாவட்டங்களோடு திருவாரூரையும் சேர்த்து அறிவித்து, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யணும். இதர நலத்திட்டங்களையும் செயல்படுத்தணும்” என்றார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த், ``இந்திய வானிலை ஆய்வு மையம் பதிவு செய்துள்ள மழை அளவின் அடிப்படையிலேயே வறட்சி மாவட்டங்கள் தீர்மானிக்கப்படுவதாக தமிழக அரசின் அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது. வழக்கமாகப் பெய்யும் சராசரி மழை அளவைவிட பற்றாக்குறை அளவு 19 விழுக்காட்டிற்கு மேல் உள்ள பகுதிகள் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்படுவதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வரையறைக்குள் இடம்பெறாததால் திருவாரூர் மாவட்டத்தை தமிழக அரசு வறட்சி மாவட்டமாக அறிவிக்கவில்லை” என்றார். 

தமிழக அரசின் விதிமுறை மற்றும் மழைப் பதிவு செய்தலில் உள்ள நடைமுறைகள் குறித்து திருவாரூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் வனம் கலைமணி, "தமிழக அரசின் வறையரைக்குள் திருவாரூர் மாவட்டம் வராமல் போயிருக்கலாம். ஆனால், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், கொரடாச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஆண்டு இயல்பான மழை பெய்யவில்லை என்பதுதான் உண்மை. போர்வெல் வசதி இல்லாத திருத்துறைப்பூண்டியில் மழையை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்வது வழக்கம். மழை இல்லாததால்தான் அது நடைபெறவில்லை. மற்ற பகுதி விவசாயிகளுக்கும்கூட தேவையான நேரத்தில் மழை பெய்யவில்லை. இதனால் அதிகளவு மகசூல் இழப்பு ஏற்பட்டது. நன்னிலம், நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சற்று அதிகமாக மழை பெய்தது. ரேண்டம் முறையில் கணக்கிடுவதால் திருவாரூர் மாவட்டம் முழுமைக்குமான அளவு கூடுதலாகத் தெரிகிறது. இது ஒருபுறமிருக்க, கோட்டூர், கொரடாச்சேரி, களப்பால் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைப் பதிவுமானி வைக்கப்படவில்லை. ஒரு மாவட்டத்திற்கு ஏழு முதல் 10 மழைப் பதிவுமானிகள்தான் உள்ளன. அவற்றை வருவாய் கிராம அளவில் வைக்க வேண்டும். பத்தாண்டுகள் பெய்த மழை அளவை வைத்துதான் சராசரி மழையளவு கணக்கீடு செய்யப்படுகிறது. பத்தாண்டுகளாக மழை குறைந்துவிட்டது. இதனால் குறைவான அளவே, சராசரி மழை அளவாக மாறி விட்டது” என்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசோ, மழை அளவைக் காரணம்காட்டி திருவாரூரைப் புறக்கணிப்பதாக விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். இதன் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக அப்பகுதி மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இத்தகைய அவலம் மாறுமா என அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு