Published:Updated:

தயவுசெய்து குப்பைக்காரரே, `இந்தா குப்பை'னு கூப்பிடாதீங்க!

தயவுசெய்து குப்பைக்காரரே, `இந்தா குப்பை'னு கூப்பிடாதீங்க!
தயவுசெய்து குப்பைக்காரரே, `இந்தா குப்பை'னு கூப்பிடாதீங்க!

ஒரு சிலரெல்லாம் குப்பைக்காரரே, இந்தா குப்பை இப்படியெல்லாம் கூப்பிடுவாங்க, அப்படி அவங்க சத்தம் போட்டுக் கூப்பிடும் போது, உள்ளுக்குள்ள வலிக்கிற வலி, நான் சொன்னா உங்களுக்குப் புரியாது. என்ன பண்றது, எங்களால அவங்ககிட்ட எதையும் சொல்ல முடியாது. அதுலாம் அவங்கள மாத்திகிட்டாதான் உண்டு. 

ஒரு குப்பை வண்டியோ, குப்பை லாரியோ நம்மைக் கடந்து செல்லும்போது, இயல்பாகவே நம்மில் அநேகமானோர் மூக்கை மூடிக் கொள்வது வழக்கம். ஆனால், என்றாவது ஒருநாள் அந்தக் குப்பை வண்டியைத் தள்ளிக்கொண்டு போகின்றவரும், குப்பை லாரியின் பின்னால் நின்றுகொண்டு போகிறவரும் மூக்கை மூடிக்கொண்டு போனதை நாம் கண்டதுண்டா..? அவர்களுக்கெல்லாம் அந்தத் துர்நாற்றம் வீசாதா என்ன..?

`அதிகாலை முதல் அந்தி சாயும் பொழுதுவரை' ஆங்காங்கே துடைப்பதுடன் ஒருசிலர் பெருக்குவதைப் பாத்துருப்பீர்கள். அவர்கள்தான் உங்கள் ஊர் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க முக்கியக் காரணமானவர்கள். ஒரு நாள் உங்கள் தெருவில் குப்பை எடுத்துச்செல்லும் வண்டி வரவில்லை என்றால், என்ன இன்னும் இந்தக் குப்பை வண்டி வரலையே என்று அடுத்த நாள் வரை குப்பையைச் சேர்த்துவைத்துப் போடும் பழக்கம் உள்ளவர்கள்தான் இங்கு அதிகம். உங்கள் வீட்டுக் குப்பையை, நீங்கள் பயன்படுத்திய குப்பையை நீங்களே எடுத்துச் செல்ல தயங்கும் பொழுது,  எவ்வித தயக்கமுமில்லாது, தினசரி அந்த வேலையே செய்யும் அவர்கள் உயர்ந்தவர்கள் தானே..!

கடந்த பதினெட்டு வருடங்களாகத் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கும் மோகன் நம்மிடம் பகிர்ந்து கொண்டது...

இந்த வேலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், உங்களைச் சுற்றி உள்ளவர்கள் எப்படிப் பார்க்கின்றனர்..?

பெருமைக்காகலாம் சொல்லலைங்க இந்தத் தொழிலை ஒரு சேவையா நினைச்சித்தான் இத்தனை வருஷமா பண்ணிக்கிட்டுருக்கேன், நான் மட்டும் இல்லை, இந்த வேலை பார்க்கிற நிறையபேர் அப்படித்தான் நினைப்பாங்க. இந்த வேலை பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப பெருமையாத்தான் இருக்கு. என்ன எப்போ கஷ்டமா இருக்கும்னா, எங்களை பார்த்ததும் கொஞ்ச தூரத்திலேயே மூக்கை மூடிக்கிட்டுப் போவாங்க, அது மாதிரி சமயத்தில்தான் மனசு ரொம்ப வலிக்கும். எங்க வண்டியில் இருக்கிறது அவங்க வீட்டுக் குப்பை தான..? ஏன், எங்களுக்கெல்லாம் மூக்கு இல்லையா, எங்களுக்கெல்லாம் நாறாதா..? 

உங்களை எப்படி எல்லாம் கூப்பிடுவார்கள்..?

தெரிஞ்சவங்கன்னா பெயர் சொல்லியே கூப்பிடுவாங்க, இல்ல தம்பி இங்க வாப்பா அப்படியும் கூப்பிடுவாங்க. ஒரு சிலரெல்லாம் குப்பைக்காரரே, இந்தா குப்பை இப்படியெல்லாம் கூப்பிடுவாங்க. அப்படி அவங்க சத்தம் போட்டுக் கூப்பிடும் போது, உள்ளுக்குள்ள வலிக்கிற வலி, நான் சொன்னா உங்களுக்குப் புரியாது. என்ன பண்றது, எங்களால அவங்ககிட்ட எதையும் சொல்ல முடியாது. அதுலாம் அவங்கள மாத்திக்கிட்டாதான் உண்டு. 

இந்த பிளாஸ்டிக் பாட்டில் எடுத்து வைப்பது எதற்கு..?

எங்க சம்பளம் 8,500 ரூபாய். அதுவும் பிடித்தம் போக ஏழாயிரத்துச் சொச்சம்தான் வரும். அதை வச்சுக்கிட்டு எப்படிப் பொழப்ப ஓட்டுறதுங்க? எங்களுக்கும் கொழந்த குடும்பம்லா இருக்குல்ல. இப்படி பிளாஸ்டிக் பாட்டில், பால் கவர் எல்லாம் எடுத்து கடைல போட்டா நாளைக்கு அம்பதுலருந்து அறுவது ரூபாய் வரைக்கும் கிடைக்கும் அது அன்னைக்குச் சாப்பாடுச் செலவுக்கு ஆகிக்கும்ல. 

உங்களின் வேலை நேரம் என்ன..?

காலைல ஆறு மணியில இருந்து மதியம் ரெண்டு மணிவரைக்கும். வாரத்துல ஒரு நாள் லீவு எடுத்துக்கலாம். மொத்தம் மூணு ஷிஃப்ட்டா வேலைக்கு ஆள் வருவாங்க. எனக்கு வேலை முடிஞ்சதும், கெளம்பிடுவேன். அதுக்கப்புறம் ரெஸ்ட் எடுக்குறதுன்னா எடுப்பேன். இல்ல ஏதாச்சும் வேலை வந்தா பார்ப்பேன். பெரும்பாலும், ஒடம்பு அடிச்சி போட்டாப்ல இருக்கும். அதுனால ஷிஃப்ட் முடிஞ்சதும் ரெஸ்ட்தான். 

படங்களில் இருக்கும் குப்பையைப் பார்த்தால் ஏதோ பலநாள்களாய்ச் சுத்தம் செய்யாமல் சேர்த்த குப்பை போலத் தெரிகிறதா? நம்பினால் நம்புங்கள். இது 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் சேர்ந்த குப்பை.

இந்தக் குப்பைத்தொட்டி இருக்கும் இடத்திற்கு இருபதடி தூரத்தில் காலியாகக் கிடக்கும் இன்னொரு தொட்டியைப் பயன்படுத்தாதது யார் தவறு..? தினசரி இருவேளை சுத்தம்செய்யும் அந்தத் துப்புரவுத் தொழிலாளியின் தவறா..? இல்லை இன்னொரு தொட்டி காலியாய்க் கிடக்கையில் இதிலேயே போடும் நம் தவறா..???

மாற்றத்தை நோக்கி நகர்வோம் நாம் அனைவரும்...!

அடுத்த கட்டுரைக்கு