Published:Updated:

``சுமுகமாக இருக்கிறதா குஜராத்?" - உண்மை என்ன?

``சுமுகமாக இருக்கிறதா குஜராத்?" - உண்மை என்ன?
``சுமுகமாக இருக்கிறதா குஜராத்?" - உண்மை என்ன?

``2002-ல் நடந்த குஜராத் கலவரத்துக்குப் பிறகு அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. நாங்கள் சுமுகமாகவே வாழ்ந்து வருகிறோம். நாங்கள் மறந்துவிட்டோம். ஆனால், கட்சிகள்தான் கலவரத்தை மறக்கவில்லை" என்று கூறியதாகப் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்று சில நாள்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தது.

மக்கள் எதை மறந்து சுமுகமாக இருக்கிறார்கள்? 14 பேர் பேக்கரிக்குள் திணிக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டதையா, எட்டுப் பெண்கள் கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு அதற்குச் சாட்சியாக இருந்த பெண்ணின் குழந்தை தலையில் அடித்துக் கொல்லப்பட்டதையா?. குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 5,000 பேர் கொல்தல், வன்புணர்தல், வெட்டிச்சாய்த்தல் என உலகம் அறிந்த அத்தனை வன்முறைகளையும் ஒருசில நிமிடங்களில் அரங்கேற்றியதையா? சாதிய வன்மம், மதவன்மம், தனிமனித வன்மம் என அத்தனை வன்மங்களும் கூட்டுக் கலவையாக நிரம்பியிருந்த அந்த மூன்று நாள்களையும் அதற்காக வெவ்வேறு வகையில் வெவ்வேறு பரிமாணங்களில் பலி கொடுக்கப்பட்ட உயிர்களையும் மக்கள் மறந்துவிட்டார்கள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத முரண். மறந்துவிடுவதற்கு இது வசந்த காலத்தில் பிரிந்து சென்ற காதலின் பக்கங்கள் இல்லை. வயோதிகம் எடுத்துச் சென்றுவிட்டது என்று ஏற்றுக்கொண்டு கடக்கும் மரணமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்விதக் குற்றஉணர்வுமற்று உலா வருவதும், பாதிக்கப்பட்டவர்களே மீண்டும் மீண்டுமாகத் தாக்குதலுக்கு உள்ளாவதும் பாதிக்கப்பட்டு ஒடுங்குவதும் இந்திய ஜனநாயகத்தின் எழுதப்படாத தண்டனைச் சட்டம்.

``சுமுகமாக இருக்கிறதா குஜராத்?" - உண்மை என்ன?

``குஜராத் தொடர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு நஷ்டஈடாக ஐம்பது லட்சம் ரூபாயை அம்மாநில அரசு வழங்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் கூறியிருந்தது. ``நான் இயல்பாக அமைதியாய் வாழவேண்டும்” என்று அதுதொடர்பாகக் கடந்த மாதம் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் அவர். கலவரத்தில் பாதிக்கப்பட்டு 17 வருடங்களுக்குப் பிறகும் அவருக்கு இயல்பான வாழ்க்கை சாத்தியப்படவில்லை என்பதை `சுமுகம்’ பேசுபவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மதக்கலவரம் வெடித்ததும் கையில் தன்னுடைய இரண்டு வயதுக் குழந்தை, வயிற்றில் இருந்த ஐந்து மாதக்கரு மற்றும் தன் கணவருடன் தாங்கள் முகாமிட்டுத் தங்கியிருந்த இடத்திலிருந்து பாதுகாப்பானதொரு பகுதிக்கு வெளியேறினார் பில்கிஸ் பானு. 

``சுமுகமாக இருக்கிறதா குஜராத்?" - உண்மை என்ன?

அப்போது அவருக்கு வயது 19. வண்டியில் பயணம் செய்த பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை வழிமறித்துக் கொலை செய்தது ஒரு மதவெறிக் கூட்டம். பில்கிஸின் குழந்தை அவரது கண் முன்பே கல்லால் அடித்துக் கொல்லப்பட்டது. இதைப்பார்த்து அவர் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டுவிட அவர் இறந்ததாக நினைத்துக் கொண்டது அந்தக் கும்பல். அவரது தாயாரையும், கருவுற்றிருந்த அவரின் சகோதரியையும் சேர்த்துக் கொன்றிருந்தார்கள்.

மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த பில்கிஸ் பானு, தானும் உடை களையப்பட்டு ரத்தப்போக்குக்கு இடையே கிடந்தார். தன் குடும்பத்தினர் அத்தனை பேரும் கொல்லப்பட்டதற்கான ஒற்றைச் சாட்சி பில்கிஸ் பானு மட்டுமே. 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆறு வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பளிக்கப்பட்டது. அச்சுறுத்தல் காரணமாக, குஜராத்தில் வழக்கு சரிவர நடத்தமுடியாததால், பானுவின் கோரிக்கையின்பேரில் வழக்கு சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், தண்டனை பெற்றவர்கள் அனைவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். ``பானுவை நாங்கள் கூட்டு வன்புணர்வு செய்யவில்லை. கூட்டு வன்புணர்வு செய்திருந்தால் குழந்தை எப்படிப் பிறந்திருக்கும்?” என்பதுதான் அவர்கள் வைத்த முதல்வாதம். இறந்ததாகச் சொல்லப்பட்ட சிலரின் சடலங்களும் கிடைக்காததால் “நாங்கள் யாரையும் கொலை செய்யவில்லை” என்றும் அவர்கள் சொன்னார்கள். இருந்தும் குஜராத் உயர் நீதிமன்றம், `அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது சரி' என்று சொன்ன நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம்வரை சென்று, 2017-ல் தண்டனை மீண்டும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. குற்றவாளிகளின் வாழ்க்கை இனிமையாக மாறிவிடுவதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு இருப்பதில்லை. 

கலவரம் நடந்த குஜராத்தின் காந்தி நகர்ப் பகுதியிலிருந்து 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார், கலவர வழக்கின் முதல் குற்றவாளியாகச் சந்தேகிக்கப்பட்டு, பின்னர் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. ஆனால், எத்தனை இழப்பீடுகள் கொடுக்கப்பட்டாலும் பில்கிஸ் பானுக்கள் அமைதியான இயல்பான வாழ்க்கையைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பின் நிதர்சனம்.

Vikatan