Published:Updated:

"சாதி ஒழிப்பு அரசியலைப் பேசாமல் கையால் மலம் அள்ளுபவர்கள் நிலையை மாற்றமுடியாது" - திவ்யபாரதி

"உத்தரப்பிரதேசத்தில்தான் அதிக மலம் அள்ளும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என அரசு வெளியிட்ட கணக்கெடுப்பில் தெரிய வருகிறது. அவர்களுக்கு எந்த முன்னெடுப்புகளையும்  செய்யாமல் மலம் அள்ளும் தொழிலாளர்களின் கால்களைக் கழுவி விடுவதெல்லாம் வெறும் நடிப்பு."

"சாதி ஒழிப்பு அரசியலைப் பேசாமல் கையால் மலம் அள்ளுபவர்கள் நிலையை மாற்றமுடியாது" - திவ்யபாரதி
"சாதி ஒழிப்பு அரசியலைப் பேசாமல் கையால் மலம் அள்ளுபவர்கள் நிலையை மாற்றமுடியாது" - திவ்யபாரதி

கையால் மலம் அள்ளுவது ஒழிக்கப்படும்வரை, சாதி இங்கே இருந்தே தீரும் என்பதைப் புரிந்து அரசு விழித்துக்கொள்ள வேண்டும். கையால் மலம் அள்ளுபவர்களின் கரங்களைத் தட்டிவிடாமல், அவர்கள் கால்களைக் கழுவுவதால் எந்த வகையிலும் ஜனநாயகத்தைக் பாதுகாக்க முடியாது.

சில மாதங்களுக்கு முன்னர், உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் துப்புரவுப் பணியாளர்கள் ஐந்து பேரின் கால்களைக் கழுவினார் பிரதமர் மோடி. அதன் பின்னர் பேசிய அவர், "அரசியலுக்காகச் செய்யும் நிகழ்வல்ல இது, துப்புரவுப் பணியாளர்களின் கால்களைக் கழுவுவதை நான் பெருமையாக நினைக்கிறேன். இந்த நினைவை நான் வாழ்நாள் முழுவதும் சுமப்பேன். நாட்டின் தூய்மையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்பவர்கள் துப்புரவுப் பணியாளர்கள். இவர்களின் கால்களைக் கழுவுதல் ஒரு வகையான வழிபாடு" என்று துப்புரவுப் பணியாளர்கள் மீது பாசத்தைப் பொழிந்தார். ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தின் கரோலி மாவட்டத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மோடி, அந்த மாநிலத்தில் இருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் படும்பாடு பற்றி வாயே திறக்கவில்லை, மாறாகப் பி.ஜே.பி-யின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். 

அரசாங்கத் துப்புரவு பணியாளர்களாகத் தங்களை நியமிக்குமாறு, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் ஆறு பேர், ஆறு வருடங்களுக்கு முன் நீதிமன்றத்தை நாடி தற்போதுவரைப் போராடி வருகிறார்கள். ராஜஸ்தான் முனிசிபாலிட்டி விதிகளின்படி, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு அரசாங்க துப்புரவுப் பணியாளராக நியமிப்பதில் முன்னுரிமை தரவேண்டும். ஆனால், அவர்களின் நியமன உரிமையை உயர்சாதி மக்கள் பறித்து விடுகிறார்கள் என்று செய்திகள் வெளியாகின. மேலும் பி.ஜே.பி. அரசாங்கம் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்குச் சரியான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. 

"சாதி ஒழிப்பு அரசியலைப் பேசாமல் கையால் மலம் அள்ளுபவர்கள் நிலையை மாற்றமுடியாது" - திவ்யபாரதி

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் 'மூன்று வருடத்திற்குள் மலம் அள்ளும் தொழிலாளர்களை அதிலிருந்து முழுவதுமாக விடுவித்து அனைவருக்குமான மறுவாழ்வு உறுதிசெய்யப்படும்' என்று கூறியிருக்கிறது. ஆனால், பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையிலோ மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்படும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. 1993-ல் ஒரு சட்டம், 2013-ல் ஒரு சட்டம் என மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் இருப்பினும், அவை நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியிலும் சரி , பி.ஜே.பி. ஆட்சியிலும் சரி, இதற்கான முன்னெடுப்புகள் சரிவர மேற்கொள்ளப்படாமலே இருக்கிறது. 

"சாதி ஒழிப்பு அரசியலைப் பேசாமல் கையால் மலம் அள்ளுபவர்கள் நிலையை மாற்றமுடியாது" - திவ்யபாரதி

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்ஃபோன்ஸிடம் பேசினோம். "மூன்று வருடத்தில் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்கும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது சாத்தியமா?" என்று கேட்டதற்கு பதிலளித்தவர், "வயிற்றுப்பசிக்கு மலம் அள்ளித்தான் பிழைக்கவேண்டும் என்ற அடித்தட்டு மக்களின் நிலையை மாற்றவேண்டும். அதைச்செய்யாமல் மலம் அள்ளும் தொழிலை ஒழிப்பது சாத்தியமில்லை. பட்டியலின மக்கள் மட்டும்தான் இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சட்டம் இயற்றி உள்ளாட்சி அமைப்புகளில் இதுபோன்ற செயலில் யாரையும் ஈடுபடுத்தக் கூடாது என்று தடுக்கலாம். தனியாக ஒரு வீட்டிலோ, ஒரு தொழிற்சாலையிலோ மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்துபவர்களை எப்படித் தடுப்பது? முதலில் யார் யாரெல்லாம் இதைத் தொழிலாகச் செய்கிறார்களென கணக்கெடுப்பு நடத்தி, அவர்களின் மீள்வாழ்வுக்கு என்ன செய்யமுடியும் என்ற வகையில் அரசு யோசிக்கவேண்டும். மேலும் இந்தத் தொழிலில் தொழிலாளர்களை  ஈடுபடுத்துவோர் மீது குற்றவியல் வழக்குப் பதியவேண்டும். இந்தத் தொழிலுக்கு மாற்றாக ரோபோக்களை ஈடுபடுத்துவதா, இயந்திரங்களைப் பயன்படுத்துவதா என்று அதற்கான மாற்று வழிமுறைகளை முதலில் முன்வைத்து அதற்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தயார்படுத்தவேண்டும். கழிப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியது போலவே, மலம் அள்ளும் இயந்திரங்களுக்கு ஒரு ஸ்கீம் ஆரம்பித்து அதற்கு நிதி ஒதுக்கவேண்டும். இதையெல்லாம் செய்யாமல் 3 வருடத்தில் ஒழித்துவிடுவோம் என்று சொல்வது சாத்தியமா என்றால் சந்தேகம்தான்!" என்றார். காங்கிரஸ் அறிவித்ததில் இருக்கும் முரண் அவர் கூறியதில் தெளிவானது. தேர்தலில் வெற்றி பெறும் நிலையில் காங்கிரஸ் இதையெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறதா?

"சாதி ஒழிப்பு அரசியலைப் பேசாமல் கையால் மலம் அள்ளுபவர்கள் நிலையை மாற்றமுடியாது" - திவ்யபாரதி

மலம் அள்ளும் தொழிலாளர்களின் நிலைகுறித்தும், மாறி மாறி ஆட்சிக்கு வந்து ஆயிரம் அறிக்கைகள் வெளியிட்டாலும் கையால் மலம் அள்ளும் தொழிலை முற்றிலுமாக அழித்தொழிப்பதில் மலட்டுத்தன்மையுடனே நடந்து கொள்ளும் கட்சிகள் குறித்தும் பேசினார் ஆவணப்பட இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திவ்யபாரதி. அவர், "மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பதோ, ரோபோக்களை இந்த வேலைகளில் ஈடுபடுத்துவதோ, அவர்களுக்கு முழுமையான தீர்வாக அமையாது. மனித மலத்தை மனிதனே அள்ளும் நிலையை அகற்றுவது, சாதி ஒழிப்பு அரசியலை பேசாமல் நிகழாது. பல போராட்டங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் பிறகுதான் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் மலம் அள்ளும் தொழில் பற்றி குறிப்பிடவாவது செய்கின்றன. தேர்தல் அறிக்கையில் சொல்லப்படும் பெரும்பாலானவை எப்படி நிறைவேறாதோ, அதேபோல்தான் இதுவும். ஏனென்றால் எந்த அரசாங்கமும் நம்முடைய மலத்தை வேறு ஒருவர் கையால் அள்ளுவதைப் பிரச்னையாகவே கருதவில்லை. அரசாங்க துப்புரவுப் பணியாளர் வேலையை உயர் சாதி மக்கள் வாங்கிவிடுவது ராஜஸ்தானில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடக்கிறது. தமிழ்நாட்டில் பதிலாட்கள் என்று தனியொருவகை தொழிலாளர்களே இருக்கின்றனர். உயர் சாதியில் உள்ளவர்கள், தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி துப்புரவுப் பணியாளர்களாக அரசு வேலையை வாங்கிவிடுவர். அரசாங்கத் துப்புரவு பணியாளருக்குக் கிட்டத்தட்ட 24,000 வரை சம்பளம் இருக்கும். ஆனால், வேலை வாங்கிய உயர்சாதி ஆட்கள் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்குப் பதில் பட்டியலின மக்களை வேலைக்கு அமர்த்துவார்கள், வேலை வாங்கிய அந்த உயர்சாதி ஆட்கள் பதிலாளாக நியமிக்கப்பட்ட பட்டியலினத்தவருக்கு அதிகபட்சம் 5,000 கொடுப்பார்கள். சென்னை, மதுரை என ஒவ்வொரு இடத்திலும் இது மாறுபடும். இதை எந்த அரசாங்க அதிகாரியும் கண்டுகொள்வதில்லை.

மத்திய அரசுதான் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு 2013-ல் சட்டம் இயற்றியது. அதை அமல்படுத்துவதில் முக்கியப் பங்கு மத்திய அரசுக்குத்தான் உண்டு. ஸ்வச் பாரத் வந்த பின்னர், வாங்குகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஸ்வச் பாரத் வரி என்று தனியான வரி இருக்கும். அந்தப் பணம் மத்திய அரசுக்குத்தான் போகிறது. அதன் மூலம் ஒரு மலம் அள்ளும் தொழிலாளிக்காவது மீள்வாழ்வு அளித்திருப்பார்களா? பி.ஜே.பி-யினர் சொல்வதுபோல் மாநில அரசுக்குத்தான் பொறுப்பு அதிகம் என்றால் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் மலம் அள்ளும் தொழிலாளர்கள் எண்ணிக்கை ஏன் அதிகமாக இருக்கிறது? உத்தரப்பிரதேசத்தில்தான் அதிக மலம் அள்ளும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என அரசு வெளியிட்ட கணக்கெடுப்பில் தெரிய வருகிறது. அவர்களுக்கு எந்த முன்னெடுப்புகளையும்  செய்யாமல் மலம் அள்ளும் தொழிலாளர்களின் கால்களைக் கழுவி விடுவதெல்லாம் வெறும் நடிப்பு. மோடியின் 'கர்மயோக்' புத்தகத்தில், (அந்தப் புத்தகம் சர்ச்சையானதை அடுத்து, அதன் 5,000 பிரதிகளும் திரும்பபெறப்பட்டு, அதன் ஆன்லைன் பிரதிகளும் நீக்கப்பட்டது நினைவில் இருக்கலாம்) 'கையால் மலம் அள்ளுபவர்கள் அதை ஓர் ஆன்மிக அனுபவமாக நினைத்துச் செய்யவேண்டும்' என்று குறிப்பிட்டிருப்பார். ஆன்மிக அனுபவம் என்றால் அவர்கள் கட்சியினரே அதைச் செய்யட்டும்" என்றார்.

"சாதி ஒழிப்பு அரசியலைப் பேசாமல் கையால் மலம் அள்ளுபவர்கள் நிலையை மாற்றமுடியாது" - திவ்யபாரதி

இதே பிரச்னை குறித்துப் பேசிய பி.ஜே.பி-யின் நாராயணன், "கையால் மலம் அள்ளும் தொழில் செய்பவர்களின் நிலை பரிதாபகரமானது. குறிப்பிட்ட வகுப்பினரன்றி பல்வேறு உயர்சாதி வகுப்பினரும் இந்த வேலையைச் செய்கிறார்கள். இந்த அவலத்தை ஒழிக்க மாநில அரசுதான் தக்க முன்னெடுப்பு செய்ய வேண்டும். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, சில கோடிகளை இதற்காக ஒதுக்கி இத்தகைய தொழிலாளர்களுக்கு உதவி செய்தார். எந்த அரசு வந்தாலும் இவர்களின் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்கி இதை அகற்றவேண்டும். இதனை ஒழிக்கப் பணம் அல்ல, மனம்தான் முக்கியம். பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் இதற்கான முன்னெடுப்புகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன" என்றவரிடம்,  "கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பி.ஜே.பி ஆட்சியில் 448 கோடியிலிருந்து வெறும் 5 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டு விட்டதே?" என்று கேட்டதற்கு, "அது தவறான தகவல் , கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது பி.ஜே.பி. அரசு. திட்ட ஆணையம் இருந்தபோது, இருந்த நிலைமை வேறு. இப்போது நிதி ஆயோக் இருப்பதால் இருக்கும் நிலை வேறு. ஆகவே, மத்திய அரசைவிட மாநில அரசின் முன்னெடுப்புதான் இங்கே அவசியம். 5,000 கோடி ரூபாய் ஒதுக்கினால் ஒழித்துவிடமுடியும் என்றால் இன்றைக்கே 5,000 கோடியை ஒதுக்கிவிடுவோம். எவ்வளவு பணம் ஒதுக்கினாலும் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கண்காணிப்பு இதில் முக்கியம். காங்கிரஸ் 60 வருடத்தில் செய்யாததையா 3 வருடத்தில் செய்யப்போகிறார்கள்? பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அதிக நிதி ஒதுக்கி இதற்குத் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை" என்றார். 

Vikatan