Published:Updated:

குஜராத் உருளை விவசாயிகளும் சூரியூர் மக்களும்” - ஆட்டம் கண்ட பெப்சி; ஒரு ரீவைண்டு!

குஜராத் உருளை விவசாயிகளும் சூரியூர் மக்களும்” - ஆட்டம் கண்ட பெப்சி; ஒரு ரீவைண்டு!
குஜராத் உருளை விவசாயிகளும் சூரியூர் மக்களும்” - ஆட்டம் கண்ட பெப்சி; ஒரு ரீவைண்டு!

``ந்த உருளைக்கிழங்கு எங்க கடைக்குத்தான் சொந்தம்!” என அண்மையில் பல லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு உடைய பெப்சிகோ நிறுவனம் அல்லாடும் குஜராத் விவசாயிகளை வம்புக்கு இழுத்தது நினைவிருக்கலாம். பயிர் வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001-ன் கீழ் எஃப்.சி.5 ரக உருளைக்கிழங்குகளைத் தங்களுடையது என அந்த நிறுவனம் பதிவு செய்து வைத்திருந்தது. 2008 வாக்கில் குஜராத், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி வாட்டியதில் மற்ற பயிர்கள் எல்லாம் ஏமாற்றிவிட்டபோது இந்த ரக உருளைக்கிழங்குதான் மார்க்கெட்டில் சக்கைப்போடு போட்டது. நாடு முழுவதும் சுமார் 24,000 விவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பயிர்களை உற்பத்தி செய்து வருகிறது பெப்சி. ஒப்பந்தப்படி விவசாயிகள் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக் கொள்முதல் செய்யும் அதே நேரம் மார்க்கெட்டிலும் விற்பனை செய்யலாம். ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத விவசாயிகள் சிலரும் இந்த ரக உருளைகளைப் பயிரிட்டதுதான் பிரச்னை. ‘நீங்க எப்படி எங்க உருளைக்கிழங்கை உருவாக்கலாம்?’ என மல்லுக்கு நின்றது பெப்சி. இந்த ஒப்பந்த விவரம் எல்லாம் அறியாத விவசாயிகள், `தெரியாமச் செஞ்சிட்டோம் விட்டுருங்கய்யா’ என்றாலும் விடுவதாக இல்லை பெப்சி. ‘ஒரு ஒன்றரை கோடி ரூபாய்க் கொடுத்துட்டுப் போங்க!’ என்று அபராதம் கேட்க ஆரம்பித்தது. 

குஜராத் உருளை விவசாயிகளும் சூரியூர் மக்களும்” - ஆட்டம் கண்ட பெப்சி; ஒரு ரீவைண்டு!

அதற்குப் பிறகு நிகழ்ந்தது சுவாரசியம், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்கிற பாகுபாடெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ‘யார் நிலத்தில் யாருக்கிட்ட அபராதம் கேட்கறிங்க?’ என்று விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் குரல்கொடுக்க ஆரம்பித்தார்கள். எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத பெப்சி நிறுவனம், ‘பணமெல்லாம் வேண்டாம் ஆனால், இனிமேல் எங்க உருளைக்கிழங்கைப் பயிரிட மாட்டோம்னு எழுதிக் கொடுத்துட்டுப் போங்க’ என்று இறங்கி வந்திருக்கிறது. இந்த சர்ச்சையின் மீதான விசாரணை வரும் ஜூன் 12 தொடரவிருக்கிறது. இந்த விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கும் அதே சமயம் தமிழகத்தில் பெப்சி நிறுவனத்துக்கு எதிராக நடந்த ஒரு போராட்டம் வெற்றி அடைந்ததையும் ரீவைண்டு செய்து பார்க்க வேண்டியிருக்கிறது. 

குஜராத் உருளை விவசாயிகளும் சூரியூர் மக்களும்” - ஆட்டம் கண்ட பெப்சி; ஒரு ரீவைண்டு!

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திலுள்ள சூரியூர் கிராமத்தில் பெப்சி நிறுவனம் அங்கிருக்கும் ஆலைக்காகத் தண்ணீர் வளத்தைச் சுரண்டிக்கொண்டிருந்தது. ஊர் மக்கள் அரசாங்கத்திடம் மனு கொடுத்தும் கார்ப்பரேட்டுகளுக்குச் செவி சாய்க்கும் அரசென்பதால் எந்தப் பலனும் இல்லை. இந்தத் தகவல் செய்தித்தாளில் வெளியானதைப் பார்த்து ஒன்றிணைந்த முகநூல் நண்பர்கள் குழு அந்த மக்களுக்கு உதவ முடிவெடுத்தது. இதற்கு முன்பு அந்தக் குழுவினர் தண்ணீர்ப் பாதுகாப்பு, குளம் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மட்டுமே செய்து வந்திருந்தார்கள். தண்ணீரைச் சுரண்டும் பெப்சி ஆலைக் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். ஆலை அமைப்பில் முறைகேடு இருப்பது தெரிய வந்தது. 

எல்லாச் சான்றிதழ்களும் ஆலையை மூடுவதற்குச் சாதகமாக இருந்தபோதும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மார்ச் 22, 2014 உலகத் தண்ணீர் தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளச் சட்டபூர்வமாக முடிவு எடுத்தபோது RTO தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த பெப்சி நிறுவனம் முன்வந்தது. உண்ணாவிரதப் போராட்டம் பயனளிக்காத காரணத்தால் 26.1.2015 குடியரசு தினத்தன்று அந்தப் பகுதி மக்களுடன் சேர்ந்து குடியுரிமை மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டம் ஏற்படுத்திய அதிர்வலையில் அடுத்த இரண்டு நாள்களில் மாவட்ட நிர்வாகத்தால் பெப்சி நிறுவன ஆலை மூடப்பட்டது. எந்தப் போராட்டத்திலும் தமிழர்கள் இந்தத் தேசத்துக்கு முன்னோடி என்பதற்கு இந்தப் போராட்டம் ஓர் உதாரணம்.

மனிதர்களின் வாழ்வாதாரத்துக்குப் பிறகுதான் எந்த கார்ப்பரேட்டும். குஜராத் உருளை விவசாயிகளும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் செயற்பாட்டாளர்களும் பெப்சி நிறுவனத்துக்கு அரசு செவிசாய்க்கா வண்ணம் இதைத் தொடர்ந்து வலியுறுத்தட்டும். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு