Published:Updated:

``காந்தியை கோட்சே சுட்டது சரிதான்!” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``காந்தியை கோட்சே சுட்டது சரிதான்!” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி
``காந்தியை கோட்சே சுட்டது சரிதான்!” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி

``காந்தியை கோட்சே சுட்டது சரிதான்!” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி

`கோட்சே ஒரு இந்து தீவிரவாதி' என்று எதார்த்தமாகக் கமலின் வார்த்தைகளால் தொடங்கிய பிரச்னை இன்று தீவிரமாக உருவெடுத்து, நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்னை ஒருபடி மேலேசென்று காந்தியைக் கோட்சே சுட்டது சரியா, தவறா என்ற விவாதமாக இப்போது தடம்மாறிவிட்டது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பி.ஜே.பி. வேட்பாளர் சாத்வி பிரக்யா, மன்னார்குடி ஜீயர் என இந்துத்துவவாதிகள் அனைவரும் கோட்சே-வின் செயலுக்கு நியாயம் கற்பித்து வருகின்றனர். இந்த நிலையில், கோட்சே உறுப்பினராக இருந்த, கோட்சேவுக்கு இன்றளவும் வீரவணக்கம் செலுத்திவரும் அகில பாரத இந்து மகா சபையின் தமிழகத் தலைவர் தா.பாலசுப்ரமணியனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

காந்தியின் படுகொலைக்குக் காரணமான கோட்சேவை தேச பக்தர் என்று பி.ஜே.பி. வேட்பாளர் சாத்வி பிரக்யா கூறியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

``இந்த நாடு நல்லா இருக்க வேண்டும், நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று நினைத்த மிகப்பெரிய மகான் நாதுராம் கோட்சே. அவர் தேசத்தின் மீது வைத்திருந்த மிகப்பெரிய பற்றின் வெளிப்பாடுதான் காந்தியின் கொலை. எங்களைப் பொறுத்தவரையில் உடல்முழுவதும் தேச பக்தி நிறைந்த ஒரு மனிதன் கோட்சே".

``காந்தியை கோட்சே சுட்டது சரிதான்!” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி

"கோட்சே தேசபக்தர் என்றால், அப்போ காந்தி யார்?"

``காந்தியும் ஒரு தேச பக்தர்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவரால் இந்த நாட்டுக்கு நடந்த நன்மையைவிடத் தீமைகள்தான் அதிகம். ஒரு நல்ல இந்துத்துவவாதியாக, ஒரு பழுத்த இந்துவாக இருந்துகொண்டு, முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார். நவகாளி சம்பவத்தின்போது, ஏராளமான இந்துக்கள் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டனர். பல இந்துப் பெண்களை முஸ்லிம்கள் தூக்கிச் சென்றனர். இதற்குச் சமாதானம் செய்யவந்த காந்தியின் நிலைப்பாடு முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே இருந்தது. இதில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குழந்தைகளை நாம் தத்தெடுத்து வளர்க்கவேண்டும் என்றார். தேசப்பிரிவினையின்போது பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக அடித்து விரட்டப்பட்டனர். இந்த நாடு கண்ணீர் சிந்தியதோ, இல்லையோ, ரத்தம் சிந்தியது. ஆனால், காந்தியோ பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தார். இவை இப்படியே தொடர்ந்தால், மேலும் 10 ஆண்டுகள் காந்தி உயிரோடு இருந்திருந்தால், பாரதநாடு இல்லாமல் போய்விடும் என்ற முன்யோசனையில்தான் காந்தியைக் கொன்றார் கோட்சே. ஆனால், கோட்சேவின் தேசப்பற்றைப் பொறுத்தவரை, அவர் தன் மரண வாக்குமூலத்தில், `நான் இறந்த பின் என் அஸ்தியைச் சாதாரண நதிநீரில் கரைக்கக் கூடாது, அகண்ட பாரதம் அமைத்து, சிந்து நதி என்றைக்கு நம் பாரதத்திற்கு வருகிறதோ, அதில்தான் கரைக்க வேண்டும்' என்றிருக்கிறார். இன்றுவரை இந்து மக்கள் அவரின் அஸ்தியை புனேவில் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அவர் தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15-ம் தேதி, அவரின் தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி, பாகிஸ்தானை இந்தியாவோடு இணைத்து, சிந்து நதியை மீட்டு, அகண்ட பாரதம் அமைப்பதற்காக சங்கல்பம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆக, கோட்சேவின் தியாகத்திற்கும், தேசபக்திக்கும் முன்னால், காந்தி ஒரு சின்ன புள்ளியாகிப் போய்விடுவார்”.

``காந்தியை கோட்சே சுட்டது சரிதான்!” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி

``காந்தியை கோட்சே படுகொலை செய்ததை நியாயப்படுத்துவதுபோல உள்ளதே உங்களின் பேச்சு?"

``மகாபாரதப் போரானது, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கின்ற ஒரு யுத்தம். அதில் பீஷ்மர், துரியோதனன் பக்கம் நிற்கின்றார். அப்போது கிருஷ்ணர் சொல்கிறார், `பீஷ்மர் நல்லவர்தான். ஆனால் அதர்மத்தின் பக்கம் நிற்பதால், தர்மத்தை காப்பற்றவேண்டுமெனில் அவர் அழிக்கப்பட வேண்டும்' என்று. அதேபோலத்தான், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பார்வையில் காந்தி அழிக்கப்பட வேண்டியவர். அதுதான் சரி. ஒரு நல்ல இந்துத்துவவாதி காந்தியை சுடத்தான் செய்வான்!”

``நாடே தேசத் தந்தையாகப் பார்க்கின்ற மகாத்மா காந்தியை இப்படிச் சொல்லலாமா?"

``பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து காந்தி உண்ணாவிரதம் இருந்தார். பாகிஸ்தானின் விசுவாசியாக, ஜின்னாவின் ஆதரவாளராகவே செயல்பட்டார். இதை கோட்சே சொல்லும்போது, `காந்தி பாரதத்திற்காக உண்ணாவிரதம் இருந்தால், அவரைப் பாரதத்தின் தேசத்தந்தை எனலாம், ஆனால் அவரோ பாகிஸ்தானுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் தேசத்தந்தைதான், ஆனால் அது பாகிஸ்தானுக்கு' என்றார். காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் யாரால் கொடுக்கப்பட்டது, எப்போது கொடுக்கப்பட்டது? அரசாங்கம், நிர்வாகிகளால் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததா என்று மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். ஆனால், அப்படி ஒரு ஏற்பாடு எங்கும் நடக்கவில்லை என்று மத்திய அரசே கூறியது”.

``காந்தியை கோட்சே சுட்டது சரிதான்!” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி

``கோட்சே ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்தாரா? இல்லை இந்து மகாசபையில் இருந்தாரா?"

``ஆர்.எஸ்.எஸ். வேறு, இந்து மகா சபை வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான். ஆர்.எஸ்.எஸ்ஸின் இன்னொரு அரசியல் பிரிவுதான், இந்து மகாசபை. இந்து மகாசபையின் குழந்தைதான் ஆர்.எஸ்.எஸ். ஆரம்பகட்ட இந்து உணர்வை ஊட்டி, வளர்த்தெடுத்து பின் அவர்களுக்கான திசையில் அனுப்புவதுதான் ஆர்.எஸ்.எஸ். இதில்தான் கோட்சே கடைசிவரை இருந்தார். இந்து மகாசபையில்தான் செயல்பட்டார். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது".
 
``கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ் என்று அவரின் குடும்பமே ஏற்றுக்கொண்டது. ஆனால், அத்வானி உள்ளிட்ட பி.ஜே.பி. தலைவர்கள் இதை மறுக்கின்றனரே?"

``அப்படிச் சொல்வது, `எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை' என்று சொல்வதுபோல. கோட்சே சாகும்வரை ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபையில்தான் இருந்தார். அதைத் தோற்றுவித்த சாவர்க்கரின் உண்மையான, தீவிரமான விசுவாசியாக இருந்தார். அவர்களின் சிந்தனைகளைச் செய்துமுடிக்கும் தொண்டனாகவே இறுதிவரை இருந்தார்”.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு