
``மரம் வெட்டுறீங்களா என்று கேட்டால், இனிமேல் அப்படி கேட்பவர்களை வெட்டுவோம்', தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் கடந்த சனிக்கிழமை நடத்திய கருத்தரங்கம் ஒன்றில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பத்திரிகையாளர்கள் குறித்து இவ்வாறு பேசிய காணொளி, சமூக வலைதளங்களில் பரபரப்பாகிவருகிறது. ராமதாஸின் பேச்சு, பத்திரிகையாளர்களிடையே கடும் எதிர்ப்பையும் சந்தித்துவருகிறது.
இதுகுறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராமசுப்பிரமணி,``மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு பேசியிருப்பதாகக் கேள்விப்பட்டவுடன் எனக்குக் கோபத்தைவிட வருத்தம்தான் மேலிட்டது. காரணம், 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியலின் ஆரம்ப கட்டங்களில் அவர் முற்போக்கான மனிதராக, ஆக்கபூர்வமாகச் செயல்படக்கூடியவராகத்தான் இருந்தார். குறிப்பாக தலித் மக்கள் மேம்பாட்டுக்காக உண்மையிலேயே குரல்கொடுத்தார்.
வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள தெருக்களில் தலித் சடலங்களை எடுத்துச்செல்ல எதிர்ப்பு இருந்தபோது, ஒரு தலித் சடலத்தைத் தனது தோளிலேயே சுமந்து, வன்னியர் பகுதி வழியாக அவர் எடுத்துச் சென்றார். அதற்காக அவருக்கு `தமிழ்க்குடிதாங்கி' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. ஆனால், அதே ராமதாஸ் இன்று எங்கு வந்து நிற்கிறார் என்று பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பத்திரிகையாளர்கள் குறித்து அவர் பேசியதைக் கேட்டதும் வருத்தமாகவும் கோபமாகவும் இருந்தது. இதை அவரது விரக்தியின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன்'' என்றார்.
பத்திரிகையாளர்கள் சார்பாக, சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பத்திரிகையாளர்கள், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தமிழகத்தின் மூத்த தலைவர் ஒருவர் இப்படி வன்முறையான சொற்களை உபயோகித்து, பத்திரிகையாளர்களை அவமதித்திருப்பது சரியானதல்ல. அதுவும் வெறுப்பரசியல் தொடர்பான கருத்தரங்கத்தில் அவர் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்'' என்று கூறியுள்ளார்.
ராமதாஸ் கூறியது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று கட்சியினரைத் தொடர்புகொண்டு கேட்டோம்.``இது தொடர்பாக எங்கள் தரப்பில் யாருமே பேசப்போவதில்லை'' என்று கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.