Published:Updated:

கிரானைட் முறைகேடு: சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!

Vikatan Correspondent
கிரானைட்  முறைகேடு: சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!
கிரானைட் முறைகேடு: சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!
கிரானைட்  முறைகேடு: சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!

புதுடெல்லி: கிரானைட் உள்ளிட்ட முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகை குவாரிகளையும் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை சிறப்பு அதிகாரியாக நியமித்ததோடு, 2 மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், சகாயத்துக்கு தகுந்த பாதுகாப்பை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வழங்க வேண்டும் என்றும், மாநில வருவாய் நிர்வாகம் ஆய்வு செய்ய தேவையான நிர்வாக ரீதியான உதவிகளையும், நிதியையும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டவிரோதமாக இயங்கும் கிரானைட், மணல் மற்றும் கல் குவாரிகள் மற்றும் அவற்றை நடத்தியவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று தமிழகத்தில் சட்டவிரோதமாக குவாரிகளை நடத்தியவர்கள் மீது தமிழக அரசு ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த முறைகேடு குறித்து வருவாய்த்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைத்து, அவர் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கையை தமிழக அரசுக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக இயங்கிய குவாரிகள் மீதும் அவற்றை நடத்தியவர்கள் மீதும் பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த முறைகேடுகள் குறித்து முறையான விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மீண்டும் ஒரு அதிகாரியை சிறப்பு அதிகாரியாக நியமிப்பது தேவையற்றது. மீண்டும்,

கிரானைட்  முறைகேடு: சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!

மீண்டும் இப்படி குழுவையும், சிறப்பு அதிகாரிகளையும் நியமிப்பதில் அதிக காலவிரயம் ஏற்படும். சரியான நேரத்தில் முடிவு எட்டப்படாத நிலை ஏற்படும். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளும் விசாரணைகளும் மேலும் காலதாமதம் ஆவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

எனவே, சென்னை உயர் நீதிமன்றம் தமிழகம் முழுவதும் கிரானைட், மணல், கல் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை சிறப்பு அதிகாரியாக நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி டிராபிக் ராமசாமி கேவியட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கிரானைட் முறைகேடு தொடர்பாக அரசு போதுமான நடவடிக்கை எடுத்து வருவதால் சகாயம் தலைமையிலான குழு தேவையில்லை என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணைகள் முடிக்கப்படாமல் உள்ளது என்று கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, சகாயம் தலைமையிலான குழுவின் விசாரணை தமிழக அரசுக்கு உதவும் என்று நம்புவதாக கூறினர்.