Published:Updated:

மேலும் 5 மீனவர்களை கைது செய்தது இலங்கை படை: செய்திச் சுருக்கம் டிச.15

மேலும் 5 மீனவர்களை கைது செய்தது இலங்கை படை: செய்திச் சுருக்கம் டிச.15
மேலும் 5 மீனவர்களை கைது செய்தது இலங்கை படை: செய்திச் சுருக்கம் டிச.15

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்தனர்.

ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை, தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

*

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு நியமித்த நிபுணர் குழுவும், தமிழக அரசு நியமித்த குழுவும் இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

*

முல்லைப் பெரியாறு அணையில் உரிமையை எக்‍காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது என்றும், அணையை பாதுகாக்‍க மத்திய தொழில் பாதுகாப்புப் படையை மத்திய அரசு அனுப்பி வைக்‍க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசுகையில், தி.மு.க. இந்தப் பிரச்னையில் தமிழக அரசுக்கு உற்ற துணையாகத் திகழ்ந்திடும் என்ற உறுதியை தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதா பதிலுரை அளிக்கையில், முல்லைப் பெரி‌யாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறது என்று குற்றம்சாட்டினார்.

*

அணைக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என்று கேரள அரசின் உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு கோரும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

முன்னதாக, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் படை பாதுகாப்பு தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, அணையில் இருந்து தண்ணீர் முழுவதையும் வெளியேற்றக் கோரும் இடுக்கியைச் சேர்ந்த 19 பேரின் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

*

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. ஒரு டாலர் மதிப்பு, வியாழக்கிழமை 54 ரூபாயாக இருந்தது.

*

மேற்கு வங்கத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்தது.

*

தற்போது நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹஜாரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

*

இயன்றவரையில் இந்தக் கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டுவிடும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியுள்ளார்.

*

மத்திய அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்திய ப. சிதம்பரம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலால், நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கடும் அமளி நிலவியது.

*

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

*

மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 44 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தது. நிஃப்டி 16 புள்ளிகள் சரிந்திருந்தது.

*

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,686 ரூபாயாக இருந்தது.