Published:Updated:

'லஞ்சம் வாங்கும் அனைவரும் பிச்சைக்காரர்களே!' - சகாயத்தின் சாட்டையடி

'லஞ்சம் வாங்கும் அனைவரும் பிச்சைக்காரர்களே!' - சகாயத்தின் சாட்டையடி
'லஞ்சம் வாங்கும் அனைவரும் பிச்சைக்காரர்களே!' - சகாயத்தின் சாட்டையடி

ழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 'ஊழிக் கூத்தாடும் ஊழலிலிருந்து தாய்நாட்டைக் காப்போம்' என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம் இன்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேலு (ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயலாளர்) மற்றும்  கந்தசாமி (விவசாயிகள் சங்கம்) மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், மாணவர்கள் என அரங்கமே நிரம்பி வழிந்தது. இதன் விழாத் தலைவராக சகாயம் ஐ.ஏ.ஸ். கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக சகாயம்  அவர்களால் நெஞ்சுரமிக்க நேர்மையான அரசு அலுவலர்களுக்குப் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. மேலும், முன்னதாக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

சகாயம் அவர்களின் உரையிலிருந்து…..

''என்னைப் பொறுத்தவரையில் ஒருவன் பணத்தால், படிப்பால் உயர முடியாது. மாறாக இந்தச் சமூகத்தை, தன் தாய்நாட்டை எவன் ஒருவன் உளமாற நேசிக்கிறானோ, அவனே உயர்ந்தவன். அவனுக்கு வாழ்க்கையும் வரலாறும் எதிர்காலத்தில் இருக்கிறது.

இந்தச் சமூகம் முழுவதும் லஞ்சம் ஊழல்களாக மாறி அழுக்குப் படிந்துகிடக்கிறது. இதைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதுக்குள் பெரும்சுமை ஏற்படுகிறது. அப்போதெல்லாம் நான் சந்திக்க விரும்புவது நான் பெரிதும் நேசிக்கிற குழந்தைகளைத்தான். ஏனெனில், அவர்கள்தான் மாசற்றவர்களாக என் கண்ணுக்குத் தெரிகிறார்கள். குழந்தைகள் விடுமுறைகளை விரும்புவர்கள். ஆனால், இந்த விடுமுறையிலும்கூட என்னுடைய உரையைக் கேட்க வந்துள்ள இந்த மாணாக்கர்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது என் தாய்திரு நாட்டை மீட்டெடுக்கப்போகும் ஒரு புரட்சிக் கூட்டம் புறப்படப் போகிற மகிழ்ச்சி எனக்குள் ஏற்படுகிறது. இந்த மாணவச் செல்வங்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். இந்தச் சமூகத்தையும், மக்களையும் உளமாற நேசியுங்கள். இந்த அழுக்கு நிறைந்த ஊழல் உலகை உடைத்தெரிக்கப் போகும் என் நம்பிக்கை நட்சத்திரங்கள் நீங்கள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், புரட்சிக்கும் வித்திடுபவர்கள் மாணவர்கள். அத்தகைய வழியிலே நீங்கள் செயல்பட வேண்டும்.

நான் சுடுகாட்டில் படுத்து உறங்கியபோதுகூடப் பயப்படவில்லை. ஆனால், மாசுற்ற இந்த மனிதர்களைப் பார்க்கும்போதுதான் எனக்குப் பயம் வருகிறது. இந்தத் தேசத்தை ஒட்டுமொத்த முரண்களின் உருவமாகத்தான் பார்க்கிறேன்.

இந்த உலகெங்கிலும் லஞ்சம் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் குன்னத்தூரில் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர். இவற்றையெல்லாம பார்க்கும்போது நெஞ்சம் பொறுக்க முடியவில்லை. நம் முன்னோர்கள் பாடுபட்டு பெற்றுத்தந்த சுதந்திரம், இன்னும் இவர்கள் கையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. லஞ்சம் வாங்கும் அற்ப மனமே... நீ லஞ்சம் வாங்கும் முன் சற்றுச் சிந்தித்துப் பார். அந்தப் பணத்தை அவர்கள் எவ்வாறு திரட்டியிருப்பார்கள் என்று. பாவம் அந்த ஏழை மக்கள் தன்னுடைய தாலியைக்கூட அடகுவைத்து பணத்தை வாங்கி வந்திருப்பார்கள். இது எவ்வளவு பெரிய பாவம். லஞ்சம் வாங்கும் அனைவரும் பிச்சைக்காரர்களே. லஞ்சம் வாங்குதல் பெரிய குற்றம். தேசத் துரோகச் செயல்.

நான் பெரிதும் நேசிக்கும் இந்த மண்ணில் ஒரு நாளைக்கு 100 ரூபாய்கூடச் சம்பளம் இல்லாத தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இது வெட்கக்கேடு அல்லவா?

நான் ஒரு மாணவியிடம், 'உன் எதிர்கால கனவு என்ன' என்று கேட்டபோது... 'நான் மருத்துவர் ஆக வேண்டும்' என்று கூறினார். நான் கூட, 'மகிழ்ச்சியோடு எதற்காக' என்று கேட்டேன். 'நான் நிறைய பணம் சம்பாதித்து, ஒருவேளை அரிசி வாங்கி உண்ண வேண்டும்' என்று அந்த மாணவி சொன்ன பதில் என் நெஞ்சை உறையவைத்தது. நாம் எத்தகைய நாட்டில் இருக்கிறோம் என்று பார்த்தீர்களா? இன்னும் என் தேசம் இப்படி முடங்கிப்போயிருக்கிறதே! ஒருவேளை, உணவுக்காகக் காத்திருக்கிறதே ஐயகோ! இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் படித்தவர்களாகிய நாம் சிந்திக்க வேண்டும். காரணம், இன்று படித்தவர்களெல்லாம் அளவுக்கு மீறிய சுயநலமாகவும், கோழைகளாகவும் இருக்கிறார்கள். படித்தும் இந்தச் சமுதாயத்துக்கு என்று ஒன்றும் செய்யாமல் இருக்கும் நீங்கள் மாபெரும் குற்றவாளிகள். இந்த அநீதிகளுக்கெல்லாம் காரணம், அநீதி இழைப்பவர்கள் அல்ல... இத்தனை அநீதிகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் நாம்தான்.

அரசுப் பணியிலுள்ளவர்களே நமக்குக் கிடைத்த அதிகாரத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். லஞ்சம் தவிர்த்து... நெஞ்சம் நிமிர்த்து என்ற தாரக மந்திரத்தை கைக்கொண்டு ஊழல் அற்ற சமுதாயம் அமைய, அமைக்க மாணவர்கள் முன்வர வேண்டும்.

ஊழல் ஏழைகளுக்கு எதிரானது...

ஊழல் ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கிறது...

ஊழல் கலாசாரத்துக்கு எதிரானது!

லஞ்சம் கொடுத்தல், வாங்குவதைவிடவும் பெருங்குற்றம். ஆகவே, ஒருக்காலும் எந்தச் சூழலிலும் லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம். லஞ்சத்துக்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்துக்கு கரம் கொடுங்கள். எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதற்கெல்லாம் ஊழலே முக்கியக் காரணம். கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்திட பாடுபடுங்கள். ஒவ்வொரு தனி மனிதனும் போராட வாருங்கள். கட்டாயம் உங்களைப் போன்ற மாணவர்கள் இவ்வாறு நேர்மையாகச் செயல்படும்போது இது பல்கிப் பெருகும். எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடுங்கள் ஊழலை ஒழித்து ஊழலற்ற அதிகாரி, அலுவலகம் என்று மாறும்போது ஒட்டுமொத்த சமூகமும் பயன்பெறும்'' என்றார்.

ஊழலை ஒழிக்க முற்படுவோம்.

- மு.முருகன்
(மாணவப் பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு