Published:Updated:

'இந்த உள்ளம் தவிக்குதே ஐயோ!' - பெப்சி, கோக் தடைக்கு வழிகாட்டிய சகாயம் ஐ.ஏ.எஸ்

'இந்த உள்ளம் தவிக்குதே ஐயோ!' - பெப்சி, கோக் தடைக்கு வழிகாட்டிய சகாயம் ஐ.ஏ.எஸ்

'இந்த உள்ளம் தவிக்குதே ஐயோ!' - பெப்சி, கோக் தடைக்கு வழிகாட்டிய சகாயம் ஐ.ஏ.எஸ்

'இந்த உள்ளம் தவிக்குதே ஐயோ!' - பெப்சி, கோக் தடைக்கு வழிகாட்டிய சகாயம் ஐ.ஏ.எஸ்

'இந்த உள்ளம் தவிக்குதே ஐயோ!' - பெப்சி, கோக் தடைக்கு வழிகாட்டிய சகாயம் ஐ.ஏ.எஸ்

Published:Updated:
'இந்த உள்ளம் தவிக்குதே ஐயோ!' - பெப்சி, கோக் தடைக்கு வழிகாட்டிய சகாயம் ஐ.ஏ.எஸ்

1999-ம் ஆண்டு, அக்டோபர் மாதம். காஞ்சிபுரத்தில் பெரியவர் ஒருவர் வாங்கிய பெப்ஸி பாட்டிலில் கலங்கலாக சில பொருட்கள் மிதந்தன. மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் மையத்தில் இதுகுறித்து புகாரும் அளித்தார். முதியவர் அளித்த பெப்ஸி பாட்டிலை சென்னை கிங் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர் சகாயம். 'உடல் நலத்துக்கு உகந்த பானம் இது அல்ல' என ஆய்வக முடிவுகள் அறிவித்தன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பதில் சொல்லாமல், தாசில்தாரை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு மாமண்டூர் சென்ற சகாயம், பெப்ஸி குறித்த அரசு ஆய்வகத்தின் அறிக்கையை பெப்சி நிறுவன மேலாளரிடம் காண்பித்தார். 'சட்டப்படி உங்கள் நிறுவனத்துக்கு சீல் வைக்க எனக்கு அதிகாரம் உண்டு' எனக் கூறி, 8 பூட்டுகளைப் போட்டு குடோனுக்கு சீல் வைத்தார். இந்தியாவையே அதிர வைத்த சம்பவம் அது. இந்த சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போது, 'பெப்சிக்குத் தடை விதிக்க வேண்டும்' என மாணவர்கள் வீதிக்கு வந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நீட்சியாகவே, பன்னாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான முழக்கத்தைப் பார்க்க முடிகிறது. 

30 சதவீதம் சரிந்த கோக் விற்பனை! 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா நேற்று பேசும்போது, 'மார்ச் 1-ம் தேதி முதல் மளிகைக் கடைகளில் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை விற்க மாட்டோம்' என அறிவித்திருக்கிறார். கோவையில் உள்ள பிரபல கல்லூரி தாளாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சிலர், 'எங்கள் வளாகத்தில் பன்னாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம்' எனவும் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பன்னாட்டு கோலா பானங்களுக்கு எதிராக மாணவர்கள் திரள ஆரம்பித்துள்ளனர். 'நடைமுறையில் பன்னாட்டு கோலா பானங்கள் விற்பனைக்கு தடை சாத்தியமா?' என்ற கேள்வியை விக்ரமராஜாவிடம் கேட்டோம். "100 சதவீதம் சாத்தியப்படுத்த முடியும். 'பெப்சி, கோக்கை கையில் வைத்திருப்பதே ஃபேஷன்' என நம்பியிருந்த இளைஞர்களும் மாணவர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, 'பன்னாட்டு குளிர்பானங்களைத் தொட மாட்டோம்' என உறுதிமொழி எடுத்தனர்.

லட்சக்கணக்கான இளைஞர்களின் உறுதிமொழி என்பது லட்சக்கணக்கான குடும்பங்களைக் குறிக்கும். மாநிலம் முழுவதும் பெப்சிக்கு எதிராக மாணவர்கள் அணி திரண்டுள்ளனர். 'பெப்சி, கோகோ கோலா குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன' என்பது பற்றி 10 லட்சம் நோட்டீஸ்கள் அச்சடிக்க இருக்கிறோம். 'பன்னாட்டு கோலா பானங்களை ஏன் எதிர்க்க வேண்டும்?' என்ற தலைப்பில், உடல்நலத்துக்கு தீங்கு கொடுப்பது முதல் நமது தண்ணீரைப் பயன்படுத்தி அவர்கள் லாபத்தை சம்பாதிப்பது வரையில் அந்த நோட்டீஸில் விவரிக்க இருக்கிறோம். நமது குடிநீரைப் பயன்படுத்தி ஆண்டுக்கு எட்டாயிரம் கோடி ரூபாயை பெப்சி சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக, தற்போது பெப்சி, கோக் விற்பனை 30 சதவீதம் சரிந்துவிட்டது. மளிகைக் கடைகளில் மாற்றத்தை விதைத்தால், தமிழகத்தை விட்டே பன்னாட்டு பானங்களை விரட்டியடிக்க முடியும்" என்கிறார் நம்பிக்கையோடு. 

30 மடங்கு நச்சுத்தன்மை! 

"கோக், பெப்சி ஆகிய இரு குளிர்பானங்களில் மிக மோசமான நச்சுக்கள் கலந்துள்ளன. இவ்விரு குளிர்பானங்களிலும் இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் ஃபாண்டா, தம்ப்ஸ்-அப், மிரிண்டா, 7அப், ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்களிலும் புற்றுநோயை உருவாக்கக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியை சிதைக்கக்கூடிய பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பது பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2003-ம் ஆண்டில் இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ராஜஸ்தானில் இந்த பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. நாடாளுமன்ற வளாகத்திலும் பஞ்சாப் சட்டப்பேரவை வளாகத்திலும் உள்ள உணவகங்களில் கோகோ கோலா, பெப்சி போன்ற பன்னாட்டு தயாரிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஒரு புட்டி கோக்கில் 8 டீ ஸ்பூன் அளவுக்கு சர்க்கரை கலந்துள்ளது. இதனால், இதைக் குடிக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

கோகோ கோலா மற்றும் பெப்ஸியில் கரும் பழுப்பு நிறத்தைக் கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் கேரமல் எனப்படும் நிறமியால் நுரையீரல், கல்லீரல், தைராய்டு உள்ளிட்ட பலவகை புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த குளிர்பானங்களைத் தொடர்ந்து குடித்தால் எலும்புப் புரை நோய் ஏற்படும். இந்த நோய் ஏற்பட்டவர்களின் எலும்புகள் வலுவிழந்து எந்த நேரமும் முறியும் ஆபத்துள்ளது. இவற்றைத் தாண்டி மேலும் பல ஆபத்துக்களும் இந்த குளிர் பானங்களில் உள்ளன. அதையெல்லாம் அறிந்திருந்தும்  இந்த வகை குளிர்பானங்களை தடையின்றி விற்பனை செய்ய அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நச்சுக் கலப்பில்லாத பெப்சி, கோக் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியாவில் மட்டும் அவற்றைவிட 30 மடங்குக்கும் கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட பெப்சியும், கோக்கும் விற்பனை செய்யப்படுகிறது. நமது மக்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இருக்கிறதா?" என பல மாதங்களாகச் சொல்லி வருகிறார் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர்.அன்புமணி. 

சட்டரீதியான தடை? 

' சட்டரீதியாக பெப்சியை தடுக்க முடியுமா?' என உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மனோகரனிடம் கேட்டோம். "உலக வர்த்தக கழகத்தின்(WTO) ஒப்பந்தத்தின்படி, இவற்றுக்குத் தடை விதிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. 1991-ம் ஆண்டுக்கு முன்பு வரையில், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழிலைத் தொடங்க வேண்டுமானால், உள்நாட்டு மூலதனம் 51 சதவீதமும் வெளிநாட்டு மூலதனம் 49 சதவீதமும் இருக்க வேண்டும். உலக மயமாக்கலுக்குப் பிறகு, 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு கதவுகள் திறந்துவிடப்பட்டன. வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் உள்ளே நுழைவதாக தகவல் வெளியானதையடுத்து, வணிகர் சங்கங்களும் வியாபாரிகளும் தெருவில் இறங்கிப் போராடினர். இதன் விளைவாக அவர்களால் இந்திய சந்தையில் கால்பதிக்க முடியவில்லை. அதேவேளையில், வேறு வேறு பெயர்களில் அவர்கள் நுழைந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் உணவுப் பொருட்களில், உடலுக்கு ஊறு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் இந்திய உணவுச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

அப்படித்தான் காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டு, மேகி நூடுல்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது அவர்கள் மீண்டும் சந்தைக்கு வந்துவிட்டார்கள். பெப்சி, கோக்கில் நச்சுப் பொருட்கள் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், தடை விதிப்பது என்பது ஒப்பந்தத்தின்படி சாத்தியமில்லை. அரசு கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். 'இந்திய சந்தைகளில் பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்தும்படி' மாநில அரசுகளுக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆணையிட்டுள்ளது. ஆனால், மாநில அரசு எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை. பளீர் நிறம், சொக்க வைக்கும் சுவை என குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் உணவுப் பொருட்களின் மீது தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆய்வு முடிவின்படி, அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை பானங்களை முற்றிலும் ஒழிக்க முடியும்" என்கிறார் நிதானமாக. 

பெப்சி, கோக் பானங்களுக்கு எதிரான முழக்கங்கள் தீவிரம் அடையத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு முறையும் கோக்கிற்கு எதிராக கொந்தளிக்கும் உணர்வுகள், அப்படியே அடங்கிப் போவது வழக்கம். 'இந்தமுறை நீர்த்துப் போவதற்குச் சாத்தியமில்லை' எனக் கொந்தளிக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். 

பின்குறிப்பு: இந்த விவாதம் தொடர்பாக பெப்ஸி, கோக் நிறுவன நிர்வாகிகள் முழு மனதோடு தங்கள் கருத்துக்களை முன் வைக்க விரும்பினால், அவற்றைப் பரிசீலனைக்குப் பின் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்!

- ஆ.விஜயானந்த்