Published:Updated:

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது;5 படகுகள் பறிப்பு

Vikatan Correspondent
தமிழக மீனவர்கள் 23 பேர் கைது;5 படகுகள் பறிப்பு
தமிழக மீனவர்கள் 23 பேர் கைது;5 படகுகள் பறிப்பு
தமிழக மீனவர்கள் 23 பேர் கைது;5 படகுகள் பறிப்பு

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, 5 படகுகளை பறித்துக் கொண்டதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம்த்தில் இருந்து ஜூலை 21-ம் தேதி சுமார் 700 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் தலைமன்னார், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, தலைமன்னார் கடல் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.

பின்னர் ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மோட்சம், செல்லத்துரை (இரு படகு), முருகன், ஜஸ்டின் ஆகியோருக்கு சொந்தமான 5 படகுகளையும், இலங்கை கடற்படையினர் ஜூலை 21-ம் தேதி இரவில் சிறைபிடித்து, தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் 5 படகையும் தலைமன்னார் கடற்கரையில் நிறுத்தி வைத்து விட்டு, மீனவர்கள் ராஜு, சூலியான்ஸ், விவால்டன், எஸ்ரோம், கிறிஸ்டோபர், பாலமுருகன், மாரி, பஞ்சவர்ணம், முருகன், சுப்பிரமணி, மற்றொரு முருகன், திருமுருகன், முனியசாமி, மாயமுருகன், நம்புராஜன், முத்துமாணிக்கம், அண்ணாமலை, மற்றொரு முருகன், அந்தோணிசிலுவை, கருப்பையா, நசீர், கோவிந்தன் உள்ளிட்ட 23 பேரையும் நேற்று தலைமன்னார் போலிசாரிடம் இலங்கைக் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து மீனவர்கள் 23 பேர் மீதும் எல்லைத் தாண்டி வந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மீனவர்களை இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் 2011 நவம்பரில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.