Published:Updated:

“ஒரு தாய் மக்கள் நாம் என்போம்!” ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டம்

“ஒரு தாய் மக்கள் நாம் என்போம்!” ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டம்
“ஒரு தாய் மக்கள் நாம் என்போம்!” ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டம்

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவருடைய நினைவு தினம் தொடர்பாகத் தமிழகத்தில் ஆங்காங்கே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டபோதிலும், கொங்கு மண்டலத்தில் அதுவும் ஈரோடு மாவட்டம் ஓடாநிலை கிராமத்தில் அமைந்துள்ள சின்னமலையின் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிதான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாக இருந்தது. தமிழக அரசின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு வகிக்கும் இந்த வேளையில், தீரன் சின்னமலையின் நினைவு தினத்தன்று அவர் ஈரோடு வந்து சின்னமலையின் மணிமண்டபத்தை வணங்கிச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தது கட்சிகளைக் கடந்த அவர் இனச் சமுதாயம். ஆனால், அவர் சிம்பிளாகச் சென்னையிலேயே சின்னமலைக்கு மாலையைப் போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார். இருப்பினும், மற்ற கொங்கு அமைச்சர்களான செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஓடாநிலை தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் ஆஜரானார்கள். குறிப்பாகத் தன் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ள தோப்பு வெங்கடாசலமும் வந்து மேடையில் ஓர் ஓரமாய் அமர்ந்துகொண்டார்.

தமிழக அரசு சார்பில், 'தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா' என்ற பெயரில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இருந்தது ஈரோடு மாவட்ட நிர்வாகம்.

விழாவின் தொடக்கத்தில் தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவத்துக்கு மாலைபோட்டு வணங்கிய அமைச்சர்கள், பின்னர் தற்போதைய எடப்பாடி அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி அரங்கைத் திறந்துவைத்தார்கள். பின்னர், விழா மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீரன் சின்னமலையின் வாரிசுகளைக் கெளரவித்த அமைச்சர்கள், இறுதியாகப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு நடையைக் கட்டினார்கள். அத்துடன் அரசு விழா நிறைவடைய அதன் பிறகு மற்ற கட்சிகளும், சாதி அமைப்புகளும் அணி அணியாக வரத் தொடங்கின.

'தீரன் சின்னமலையின் மணிமண்டபத்துக்குள் ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்ட நேரம்தான் உள்ளே வர வேண்டும்' என்று நேரப் பட்டியல் முன்கூட்டியே அளிக்கப்பட்டு இருந்து. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரனும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான தனியரசுவும் வழக்கம்போலத் தங்களின் கூட்டத்தைக் கூட்டிவந்து அலைப்பறைகளைக் காட்டிவிட்டுச் செல்ல, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் படை அணிவகுத்து வந்து பாட்டன் சின்னமலைக்கு வீரவணக்கம் செலுத்தியது.

இப்படி 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பட்டியலில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் வந்து சென்றுகொண்டு இருக்க, அந்த பட்டியலில் 22-வது அணியாக நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு. தன்னுடைய சகாக்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பொன்னையன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட ஐவர் படையாக மாலை நேரத்தில் வந்து இறங்கினார் ஓ.பி.எஸ். கொங்கு மண்டலத்தில் தன் பலத்தைக் காட்டியாக வேண்டும் என்று அவர் முன்கூட்டியே திட்டமிட்டு இருந்ததால்... திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், சேலம் எனப் பக்கத்துக்கு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆள்களை அள்ளிப்போட்டு அழைத்து வந்திருந்தார்கள் ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்கள்.

காலையில் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஒன்றாகவந்து கலந்துகொண்டபோதுகூட இல்லாத கூட்டம், மாலையில் ஓ.பி.எஸ்ஸின் வருகையால் ஓடாநிலை பகுதியில் திரண்டிருந்தது. நாள் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் துரிதமாகச் செயல்பட்டு வந்தபோதும், ஓ.பி.எஸ் அணி வந்துசேர்ந்த அடுத்த ஒருமணி நேரத்துக்கு முற்றிலுமாகக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறித்தான் போனது. வளாகம் முழுவதும் கூட்டம் கும்மியெடுக்க, சிரித்த முகத்துடனேயே மணிமண்டபத்துக்குள் சென்றவர், தானாக முன்வந்து செய்தியாளர்களை அழைத்துப் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

பின்னர், அதேமுகத்துடன் வெளியே வந்து, தன் அணியினர் கூட்டிவந்த கூட்டத்தை நோக்கிக் கை அசைத்தவாறு இரண்டு நிமிடங்கள் நின்றார். அதையடுத்து, “இந்திய திருநாடு சுதந்திரமடைவதற்கு தீரன் சின்னமலை மேற்கொண்ட தியாகம் போற்றுதலுக்கு உரியது. அவரது நினைவுகளைப் போற்றும் வகையில் அவரின் நினைவு தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடுவோம் என்று ஜெயலலிதா அறிவித்தார். தீரன் சின்னமலை நமக்குப் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பேணி காக்க, நாம் அனைவரும் ஒருதாய் மக்களாய் வாழ்வதே நம்முடைய தலையாயக் கடமையாகும்'' என்றவர், பின்னர் மீண்டும் கூட்டத்துக்கு ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.

ஒரு தியாகியின் நினைவு தின கொண்டாட்டத்தைத் தங்களின் பலத்தைக் காட்டி முறுக்கிக்கொள்ளும் சடங்காகவே மாற்றிவிட்டார்கள் அரசியல்வாதிகள்...