Published:Updated:

படேல் சிலை ஓராண்டு நிறைவு - தினமும் 15,000 பேர் எனும் இலக்கை எட்டியதா?

சிலை திறந்துவைக்கப்பட்டபோது, நாளொன்றுக்கு சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Sardar Vallabhbhai Patel Statue
Sardar Vallabhbhai Patel Statue

உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமைபெற்ற சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை' நர்மதையாற்றின் கரையில் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்தச் சிலையை, சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த தினமான 2018 அக்டோபர் 31-ம் தேதி, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தியாவின் பெருமையாக இந்தச் சிலையை ஆளுங்கட்சியினர் கொண்டாடினாலும், சிலையை உருவாக்குவதற்காக சுமார் 3,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்தனர். இந்தச் சிலை எழுப்பப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவந்த பழங்குடி மக்கள் அகற்றப்பட்டதற்கும் எதிர்ப்பு எழுந்தது.

Sardar Vallabhbhai Patel Statue
Sardar Vallabhbhai Patel Statue
Image by Bishnu Sarangi from Pixabay

அந்த விமர்சனங்களுக்கு மத்திய அரசு அளித்த பதில்களில் ஒன்று, இந்தச் சிலையைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் மூலமாக சுற்றுலாத்துறைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பதுதான். மத்திய அரசு கூறியபடி சுற்றுலாத் துறையின் மூலம் வருமானம் வந்ததா என்பதைப் பார்ப்போம்.

ஒற்றுமை சிலை திறந்தபின், முதல் 10 நாள்களில் சுமார் 1.28 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். சராசரியாக நாளொன்றுக்கு 12,800 பேர் பார்வையிட்டனர். குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறையில் மட்டும் 50,000 பேர் பார்வையிட வந்தனர். ஆனால், போகப்போக பார்வையாளர்கள் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியது. 2018 நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 2.79 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். அதன்மூலம் மொத்தம் 6.38 கோடி ரூபாய் கட்டணமாக வசூலானது.

படேல் சிலை - மோடி
படேல் சிலை - மோடி
vikatan
Vikatan

செப்டம்பர் வரையிலான கடந்த 11 மாதங்களில், மொத்தம் 26 லட்சம் பேர் படேல் சிலையைப் பார்வையிட்டுள்ளதாக குஜராத் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. அவர்களின் மூலம் கட்டணமாக சுமார் 57 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு 8,700 சுற்றுலாப் பயணிகளும், அவர்களின் மூலம் கட்டணமாக 20.81 லட்சம் ரூபாயும் வசூலாகியதாக குஜராத் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

சிலை திறந்துவைக்கப்பட்டபோது, நாளொன்றுக்கு சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 10 ஆயிரத்துக்கும் குறைவான சுற்றுலாப்பயணிகளே வருவதால், அவர்களை ஈர்ப்பதற்காக தொடர்ச்சியாகப் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

கேலரியில் பார்வையாளர்கள்
கேலரியில் பார்வையாளர்கள்
vikatan
டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர்

சர்தார் வல்லபாய் படேல் சிலையைப் பார்க்க வருபவர்கள், சிலையை அருகிலிருந்தே பார்ப்பது, சிலையின் மேலே குறிப்பிட்ட உயரம்வரை ஏறிப்பார்வையிடுவது என இரண்டுவிதமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதற்கென, சிலையருகே இருந்தபடி நர்மதை நதியின் அழகைக் கண்டு ரசிக்கும்படியாக, சிலையின் உள்ளே 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர்கள் கேலரி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கேலரியில், ஒரே நேரத்தில் 200 பார்வையாளர்கள் வரை ஏறி நின்று பார்வையிட முடியும். இங்கு, பார்வையாளர்களைக் கொண்டுசெல்வதற்காக அதிவேகத் திறன்கொண்ட மின்தூக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் நாளொன்றுக்கு 5,000 பேர் வரை ஏற்றி இறக்க முடியும். (இந்த கேலரியில் பார்வையாளர்கள் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது மழை நீர் ஒழுகியதால், கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது.)

உலகிலேயே மிக உயரமான படேல் சிலையை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. படேல் சிலையைச் சுற்றி சுமார் 10 நிமிடங்களுக்கு ஹெலிகாப்டரில் பறக்க முடியும். இதற்கான கட்டணமாக ரூ.2,900 நிர்ணயிக்கப்பட்டது. மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக, அந்தப் பகுதியில் ஒற்றுமைச் சுவர், லேசர் ஒளிக்காட்சி மற்றும் இசைக் காட்சிகள், மலர் பள்ளத்தாக்கு சுற்றுலா, சர்தார் சரோவர் அணைக்கட்டுச் சுற்றுலா, நர்மதா டென்ட் சிட்டி, படகு சவாரி, பறவைகளைப் பார்வையிடுவது, ஷாப்பிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தச் சுற்றுலாத்தலம் மாற்றப்பட்டுள்ளது.

படேல் சிலை
படேல் சிலை
vikatan

சமீபத்தில்கூட, குழந்தைகளைக் கவர்வதற்காக பிரமாண்ட டைனோசர் சிலைக்கான கட்டுமானம் நடக்கும்போதே, அந்தச் சிலை கவிழ்ந்துவிழுந்த சம்பவமும் நடந்தது. படேல் சிலையை அமைப்பதற்காகவும், அங்குள்ள மற்ற சுற்றுலா வசதிகளை உருவாக்கியதற்கும் செலவிடப்பட்ட தொகையை வசூலிப்பதற்கு, (இன்றைய சூழலை வைத்துப் பார்க்கையில்) சுமார் 50 ஆண்டு காலம் ஆகலாமென்று கணிக்கிறார்கள்.