Published:Updated:

`அந்த முழக்கம் பிறந்ததே ஒரு புரட்சியில்தான்!' - ஜெய் பீமின் சிலிர்க்க வைக்கும் வரலாறு

காவல் நிலைய சித்திரவதை எவ்வளவு கொடூரமானது என்பதை ரத்தமும் சதையுமாக மீண்டும் ஒரு தடவை நமக்கெல்லாம் உணர்த்தியிருக்கிறது ஜெய் பீம். ஆனால், கடந்தகால மோசமான வரலாறுகளிலிருந்து அரசாங்க எந்திரங்கள் எந்த ஒன்றையும் கற்றுக்கொள்வதே இல்லை என்பதுதான் நிகழ்கால நிதர்சனம்.

`ஜெய் பீம்..!'

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளிலும் உற்றுநோக்கப்படும் கோஷமாகத் தற்போது மாறியிருக்கிறது. சாதித் திமிரோடு நடைபோடுபவர்களின் முதுகுகளுக்கு, மற்றுமொரு சாட்டையாகச் சீறும் `ஜெய் பீம்' திரைப்படம், மொழிகளைக் கடந்தும் உண்மையை உரக்கப் பேசவைத்திருக்கிறது. உண்மையில், இந்த `ஜெய் பீம்' கோஷம், இந்திய முழுக்க இருக்கும் சாதி வெறியர்களின் முதுகுகளில் உண்மையிலேயே சாட்டை அடியாக இறங்கியது என்பது, கிட்டத்தட்ட நூறாண்டு கால வரலாறு.

அம்பேத்கர்
அம்பேத்கர்

1927-ம் ஆண்டு மார்ச் 20-ம் நாளில் அண்ணல் அம்பேத்கர், மகாராஷ்டிர மாநிலத்தின் மஹத் நகரில் ஆதிக்க சாதிகளுக்கு எதிராகப் போரில் இறங்கியபோது ஓங்கி ஒலித்த கோஷமிது. வர்ணாசிரம தர்மத்தைப் போற்றும், சாதிகளை உயர்த்திப் பிடிக்கும் மனுஸ்மிருதி நூலைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, ஊர்வலமாகப் புறப்பட்டார் அம்பேத்கர். சாதிவெறியர்கள் கல்வீசி கொடூரமாகத் தாக்கினார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட முன்னேறிய அம்பேத்கர், மஹத் நகரின் சௌதார் குளத்திலிறங்கி, கைகளால் தண்ணீரை அள்ளிப்பருகினார். அந்த நேரத்தில்தான் ஓங்கி ஒலித்தது... `ஜெய் பீம்'. ஆண்டாண்டு காலமாக சாதி மற்றும் மதத்தின் பெயரால் அடக்கப்பட்டு, வாய்மூடி அடங்கிக்கிடந்த மக்கள், தங்கள் தலைவனின் வீரத்தை மெச்சும் வகையில், அவரின் பெயரான `ஜெய் பீமாராவ் அம்பேத்கர்' என்பதை விண்முட்டும் அளவுக்கு `ஜெய் பீம்' என்பதாக முழங்கினர்.

இன்றும்கூட இதற்கான தேவை இருக்கவே செய்கிறது என்பதைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்து, நாடு முழுக்க பேசுபொருளாகியிருக்கும் ஜெய் பீம்!

இன்றும் தமிழகத்தின் பல்வேறு அரிசி ஆலைகளில், செங்கல் சூலைகளில், தோட்டக்காடுகளில் நிலவுடமை பண்ணைச் சமூகத்தின் கொத்தடிமை முறை தொடரத்தான் செய்கிறது. விளிம்பு நிலையில் வாழும் இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கைப் படம்தான் ஜெய்பீம். அதேசமயம், முன்னேறிவிட்டதாகவும், நாகரிகமடைந்துவிட்டதாகவும் சொல்லிக்கொள்ளும் ஆதிக்கச் சமூகங்களுக்கு சாட்டையடி!

நாடோடி பழங்குடியின மக்களுக்காக மாமல்லபுரம் சுற்றுவட்டாரத்தில் பணியாற்றும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஏராளம்.

Jai Bhim movie
Jai Bhim movie
"வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன்!"- முதல்வர் பாராட்டுக்கு நெகிழ்ந்த `ஜெய் பீம்' சூர்யா

இருதயத்தின் கசப்பை இருதயமே அறியும் என்பதைப் போன்று, என் வாழ்விலும் இதைப்போன்ற சிலபல கதாபாத்திரங்கள் உண்டு.

``எந்த மக்களிடையே பிறந்தோமோ, அம்மக்களுக்காகப் பணியாற்ற வேண்டியது நம் கடமை என்று விழிப்புணர்வு பெற்று வீறுகொண்டெழுந்தவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்; தங்களுடைய நேரத்தைத் திறமைகளை மற்றுமுள்ள அனைத்தையும் அடிமை விலங்கை உடைப்பதற்காக அளிப்பவர்கள் பெருமைக்குரியவர்கள்; ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மனித உரிமைகளைப் பெறும்வரையில் பெரும் துன்பங்களுக்கும் அச்சுறுத்தும் ஆபத்துகளுக்கும் இடையில் செயலாற்றி அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கும் மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுபவர்கள் பெரும் புகழுக்கு உரியவர்கள்'' என்றார் அம்பேத்கர்.

இத்தகைய பணிகளை இன்றளவும் மேற்கொள்ளும் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள், `ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல், நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா போன்றவர்களும் அத்தகைய போராளிகளே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மஹத் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து ஏக்கர் சௌதார் குளத்தில் நீரெடுக்கும் உரிமைப் போராட்டத்தை அம்பேத்கர் தொடங்கினார். அந்தக் குளத்தில் நீர் எடுக்கும் உரிமையை மரபுவழிப்பட்ட உரிமை என நினைவு எட்டாத காலத்திலிருந்து ஆதிக்க சாதியினரிடம் மட்டுமே இருந்து வந்தது. பன்றி, நாய், மாடு, பாம்பு, தவளை, ஆமை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் அந்தக் குளத்தில் நீர் அருந்துவதை ஆதிக்கச் சாதிவெறியர்கள் தடுக்கவில்லை. ஆனால், ஒட்டிப்பிறந்தாலும் ஒதுக்கி வைக்கப்படுகின்ற இடதுகை போல், இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டே தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் ஒதுக்கி வைத்தனர்.

அம்பேத்கர்
அம்பேத்கர்
Jai Bhim விமர்சனம்: காவல்துறை அத்துமீறல்களும், பொது சமூகத்தின் கள்ள மௌனமும்... ஒளிர்கிறதா ஜெய் பீம்?

``இதை எதிர்த்துக் கேட்காமல், கண்மூடி எப்படி என்னால் கடந்து போக முடியும்?'' என்று சீறிய அம்பேத்கர், `கற்பி... புரட்சி செய்... ஒன்றுசேர்' என்று மக்களை போராட்டத்துக்கு ஆயத்தப்படுத்தினார். 1923 ஆகஸ்ட் 4 அன்று மும்பை மாகாண சட்டமன்றத்தில் இதற்காகத் தீர்மானம் கொண்டுவந்ததிலிருந்து, 1937 மார்ச் 17 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பைப் பெறும்வரையில் போராட்ட நெருப்பை அணையாமல் முன்னெடுத்துச் சென்றார் அம்பேத்கர்.

சௌதார் குளத்தின் நீரைப் பருகும் உரிமையை வென்றெடுப்பதற்காக மஹத் நகரில் நடைபெற்ற மாநாட்டில் அம்பேத்கர் சொன்ன செய்தி -

``இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தும், குளத்தில் நீர் அருந்துவதல்ல. குளத்து நீரை அருந்துவதால் நாம் ஒன்றும் புனிதமாகி, சாகாவரம் பெற்றவர்களாக மாறிவிடப் போவதில்லை. இத்தனை காலமும் நாம் இந்த நீரை அருந்தாமல் உயிரோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சமத்துவம் என்னும் லட்சியத்தை அடைவதற்கான அடையாளமாகத்தான் இந்தக் குளத்து நீரை அருந்தும் போராட்டம்.

பிறப்பினால் எல்லா மனிதர்களும் சமமானவர்களே. அரசியலின் உன்னத குறிக்கோள், இத்தகைய மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகவே இருக்க வேண்டும். நாம் கையில் எடுத்துள்ள இந்தத் தீண்டாமை ஒழிப்புப் பணியையும், சமத்துவத்தை நிலைநாட்டும் பணியையும் நாமே செய்து முடிக்க வேண்டும். இந்த நற்பணியைச் செய்து முடிக்கவே நாம் பிறந்துள்ளோம் என்கிற உறுதிப்பாட்டை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நோயைக் குணப்படுத்த அதன் மூலத்தைக் கண்டுபிடிக்காமல் சிகிச்சை மேற்கொண்ட பல மருத்துவர்கள் தோல்வி அடைந்ததற்கான எடுத்துக்காட்டுகள் பல உண்டு'' என்று அனல் பறக்கப் பேசி, போராட்டத் தீயை மேலும் கொளுந்துவிடச் செய்தார் அம்பேத்கர்.

காவல் நிலைய சித்திரவதை எவ்வளவு கொடூரமானது என்பதை ரத்தமும் சதையுமாக மீண்டும் ஒரு தடவை நமக்கெல்லாம் உணர்த்தியிருக்கிறது ஜெய் பீம். ஆனால், கடந்தகால மோசமான வரலாறுகளிலிருந்து அரசாங்க எந்திரங்கள் எந்த ஒன்றையும் கற்றுக்கொள்வதே இல்லை என்பதுதான் நிகழ்கால நிதர்சனம். இந்தத் திரைப்படத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைச் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு தண்டனை 1996-ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு காவல்துறை முற்றாகத் திருந்திவிட்டதா என்ற கேள்வி எழாமல் இல்லை. திருந்தியிருந்தால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பெனிக்ஸ் என தந்தை மற்றும் மகன் இருவரும் இரக்கமற்ற முறையில் காவல்துறையினரால் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டிருக்க மாட்டார்களே?

மல்லை சத்யா
மல்லை சத்யா

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் முன்னேறிய முதலாளித்துவ நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் காவல்துறை அதிகாரி டெரிக் சௌன், பட்டப்பகலில் வெட்டவெளியில் ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞர் ஜார்ஜ் ஃபளய்ட்டின் கழுத்தைக் காலால் அழுத்தி கொலை செய்த சம்பவம், உலகையே அதிர வைத்தது.

இதற்கெல்லாம் முடிவு? குடிமக்கள் அனைவரும் அரசியல் மற்றும் சட்ட விழிப்பு உணர்வை முழுமையாகப் பெறுவது ஒன்றே வழி. அத்தகைய சமூக மாற்றத்துக்கான வலுவான விதை... விசாரணை, ஜெய்பீம் எனத் திரைப்பட ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து விதைக்கப்பட வேண்டும். அநீதிக்கு எதிரான வலிமையான ஆயுதம், சட்டம் என்பதை குடிமக்கள் நம்ப வேண்டும்... யாருக்கும் அஞ்சாமல் அந்தச் சட்டங்களையெல்லாம் பயன்படுத்த வேண்டும். மரியாதைக்குரிய வழக்கறிஞர்களும் மாண்புமிகு நீதிபதிகளும்தான் அந்த நம்பிக்கையை வளர்த்தெடுக்க முடியும்; மாண்புமிகு சந்துரு போல!

ஜெய் பீம்!

- மல்லை சத்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு