Published:Updated:

விழுப்புரம்: `எனக்கு பி.டெக் படிக்க ஆசை; ஆனா சாதிச் சான்றிதழ் தர மாட்டேங்கிறாங்க!’-தவிக்கும் மாணவன்

தந்தை தர்மனுடன் அருண்குமார்
தந்தை தர்மனுடன் அருண்குமார்

'சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாமல், கடந்த ஒரு வருடமாக வீடுகளில் டைல்ஸ் போடும் வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கேன்.' - மாணவன் அருண்குமார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்துக்கு உட்பட்ட பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர், தனக்கு சாதிச் சான்று வழங்கப்படாததால், கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாமல் போய்விட்டது எனக் கலங்கி நிற்கிறார். படிப்பதற்கு விருப்பம் இருந்தும், சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியாமல் தவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

அந்த மாணவனிடம் மேற்கொண்டு பேசத் தொடங்கினோம். "என்னோட பெயர் அருண்குமார். என் அப்பா பெயர் தர்மன். நாங்க பாலப்பாடி கிராமத்தில வசிக்கிறோம். நாங்க ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ஆதிதிராவிடர் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவங்க. அந்தப் பிரிவிலுள்ள சுமார் பத்து குடும்பங்கள் எங்க ஊர்ல இருக்கு. நான் சத்தியமங்கலத்தில் இருக்கிற அரசு உயர்நிலைப் பள்ளியில்தான் 12-வது படிச்சு முடிச்சேன். பத்தாவதுல 418/500, பன்னிரண்டாவதுல 410/600 மார்க் எடுத்தேன்.

மாணவன் அருண்குமார்.
மாணவன் அருண்குமார்.

12-வது படிச்சு முடிக்கிற வரைக்கும் சாதிச் சான்றிதழுடைய முக்கியத்துவம் எனக்கு தெரியலை. கல்லூரியில சேரணும்கிற போதுதான் அதன் முக்கியத்துவம் புரிய வந்துச்சு. சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிச்சிருந்தேன். ஆர்.ஐ (Revenue Inspector) கிட்ட போகும்போது 'ரிஜெக்ட் ஆகிடுச்சு'ன்னு சொன்னாங்க. உடனே ஆர்.ஐ-கிட்ட நாங்க போய் கேட்டோம். 'விழுப்புரத்தில், இந்த கம்யூனிட்டிக்கு தரக் கூடாதுன்னு ஸ்ட்ரைக் பண்ணி இருக்காங்க' அப்படின்னு சொன்னாரு. அதுக்கப்புறமா செஞ்சி தாலுகா ஆபீஸ்ல போய் கேட்டோம். அவங்களும் அதேபோல பதில் சொல்லி அனுப்பிட்டாங்க. அதுக்கு அப்புறமா விழுப்புரம் கலெக்டர் ஆபீஸுக்குப் போய்க் கேட்டோம். ஸ்ட்ரைக் பண்ணதா சொல்லப்படுகின்ற ஆந்திரா நபர்கள்கிட்ட விசாரிச்சுட்டு சான்றிதழ் தருவதாகச் சொன்னாங்க. ஆனா, என்னுடைய அக்கா, என்னுடைய சித்தப்பா மகள் இருவருக்குமே சம்பந்தப்பட்ட பிரிவுப் பெயரைப் போட்டு சாதிச் சான்றிதழ் ஏற்கெனவே கொடுத்திருக்காங்க. ஆனா, நான் போய்ச் கேட்கும்போது எனக்குக் கிடைக்கலை.

எனக்கு பி.டெக் படிக்கணும்னு ஆசை. கல்லூரியில் சேர்வதற்கு நேரம் குறைவு என்பதாலும், எனக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்கலை என்பதாலும், என் அக்காவின் சாதிச் சான்றிதழை மையமாக வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சாதிச் சான்றிதழ் கேட்டு வழக்கு போட்டோம். வழக்கு முடிவுல, '4 வாரத்துக்குள்ளாக விசாரித்து சான்றிதழ் கொடுக்கணும்னு' கோர்ட்டுல சொல்லிட்டாங்க. இது நடந்து ஒரு மாசத்துக்ட்ட இருக்கும்போது, தாலுகா ஆபீஸ்ல இருந்து ஒரு பெண் அதிகாரி வந்து விசாரிச்சுட்டுப் போனாங்க. ஆனா, எந்தவித ரெஸ்பான்ஸும் இதுவரை இல்லை. அதுக்கப்புறமா மீண்டும் தாலுகா ஆபீஸ் போனோம். அதே பதிலையே திருப்பிச் சொன்னாங்க.

அங்கருந்து கலெக்டர் ஆபீஸ் போனோம். அங்கேயும் சரியா பதில் கிடைக்கலை. அப்போதான், எங்க ஊர்ல இருக்கற ஒரு அண்ணன் சொன்னாங்க, முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு ஆன்லைன்ல புகார் கொடுக்கும்படி. அப்போது, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தாங்க. அப்போ சி.எம் செல்லுக்கு மெயில் போட்டேன். விசாரணை நடத்தும்படி கலெக்டருக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்கிறதா தகவர் வந்து இருந்துச்சு. ஆனா எந்தப் பயனும் இல்லை. இப்போதும் சி.எம் செல்லுக்கு மெயில் போட்டேன். அதைப்போலவே, கலெக்டர் விசாரிக்கும்படி ஃபார்வேர்ட் பண்ணி இருக்குறதா தகவல் வந்து இருந்துச்சு. ஆனா இதுவரைக்கும் எனக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்கலை” எனக் கலங்கினார்.

நீதிமன்ற ஆணையின் முதல் பக்கம்.
நீதிமன்ற ஆணையின் முதல் பக்கம்.

தொடர்ந்து பேசியவர், ``கோர்ட்டு சொல்லியும் ஒரு வருஷம்கிட்ட ஆகப்போகுது. எப்போதுதான் எனக்குச் சாதிச் சான்றிதழ் கிடைக்கும்னு தெரியலை. இதனால கடந்த ஒரு வருஷமா என் படிப்பு போச்சு. காலேஜ்ல சேர முடியாம போனதால புது வீடுகளில் டைல்ஸ் போடும் வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கேன். எனக்கு சீக்கிரம் சாதிச் சான்றிதழ் கிடைச்சு, கல்லூரியில் சேர்ந்து படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு" என்றார் மிகுந்த ஏக்கத்துடன்.

இந்த மாணவனின் போராட்டத்துக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தால், அதை உரிய பரிசீலனையுடன் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம். `சாதிச் சான்றிதழ் காரணமாக ஒரு மாணவனின் உயர் கல்வி பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

அடுத்த கட்டுரைக்கு