Published:Updated:

‘ஃபாரின் பெண்ணை 2-ம் தாரமாக மணந்தால் நோபல் பரிசு!’- பா.ஜ.க கமென்டும் அபிஜித் தாயாரின் கொதிப்பும்

`வெளிநாட்டுப் பெண்ணை இரண்டாம் தாரமாகக் கொண்டிருப்பவர்களுக்கே நோபல் பரிசு வழங்கப்படுகிறது’ என்று நோபல் பரிசு பெற்றுள்ள அபிஜித் பானர்ஜியை, பா.ஜ.க தலைவர் ஒருவர் விமர்சித்ததற்குக் கண்டனங்கள் குவிகின்றன.

அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டப்லோ
அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டப்லோ

பொருளாதாரத் துறையில் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளுக்காக, பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி, அவரின் மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரீமர் ஆகியோருக்கு, 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியின் பொருளாதாரத் துறைத் தலைவராக இருந்த தீபக் பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள சமூக விஞ்ஞானக் கல்விக்கான மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய நிர்மலா பானர்ஜி தம்பதிக்கு மகனாக 1961-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் அபிஜித் பானர்ஜி.

இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்பதை அரசு ஏற்க வேண்டும்.
அபிஜித் பானர்ஜி

கொல்கத்தாவில் வளர்ந்த அவர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் எம்.ஏ பட்டம்பெற்று, பொருளாதாரத்தில் ஆய்வுப்பட்டம் மேற்கொள்வதற்காக 1988-ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகம் சென்றார். பி.எச்டி ஆய்வுப்பட்டம் பெற்றபிறகு, ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். தற்போது, அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி எனப்படும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.

ரகுராம் ராஜன் உள்ளிட்ட முக்கியப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து ‘பொருளாதாரத்துக்கான இப்போதைய தேவை என்ன?’ என்ற நூலை எழுதியுள்ளார், அபிஜித் பானர்ஜி. அவரும் அவரின் மனைவி எஸ்தர் டப்லோவும் வறுமை ஒழிப்புத் தளத்தில் இணைந்து பணியாற்றி பொருளாதாரம் தொடர்பான புத்தகங்களை எழுதியுள்ளனர்.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட மூவருக்கும் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார், பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், அபிஜித் பானர்ஜியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

அபிஜித் பானர்ஜி
அபிஜித் பானர்ஜி

தற்போது, இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. மத்திய அரசு கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகளே அதற்குக் காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளன. குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம் உட்பட மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இந்த நிலையில், பொருளாதார மந்தநிலையைச் சமாளிப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதேநேரம், நாட்டில் பொருளாதார மந்தநிலை இருப்பதாக விமர்சிக்கப்படுவதை மத்திய ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

இந்த நிலையில், மத்திய பா.ஜ.க அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிப்பவராக இருக்கிறார், அபிஜித் பானர்ஜி. குறிப்பாக, நோபல் பரிசு பெற்றபிறகு அவர் அளித்துள்ள பல பேட்டிகளில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்துள்ளார். `தற்போது, இந்தியாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இந்தியாவில் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இது ஒரு மோசமான அறிகுறி. இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்பதை அரசு ஏற்க வேண்டும்’ என்று அபிஜித் பானர்ஜி சொல்லிவருகிறார்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்
`மோடியுடன் சண்டை; ராகுல் நட்பு!' - நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியின் அரசியல்! 

இவரின் விமர்சனம் மத்திய ஆட்சியாளர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "அபிஜித் பானர்ஜி ஓர் இடதுசாரி சிந்தனையாளர். அவரின் சிந்தனைகளை நாங்கள் ஏற்கமாட்டோம். காங்கிரஸ் கட்சியின் ’நியாய்’ திட்டத்தை ஆதரித்தவர் அவர். ஆனால், அவரது கொள்கையை இந்திய மக்கள் நிராகரித்துவிட்டனர்" என்று சாடினார்.

ஆனால், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர்களுள் ஒருவரான ராகுல் சின்ஹாவின் விமர்சனமோ நான்காம் தரம். அவர், "நோபல் பரிசு என்பது இந்தியாவுக்கு எதிரான கலாசாரத்தைக் கொண்ட இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நோபல் பரிசு வென்றவர் இந்தியர் என்றாலும், அவர் வேறு நாட்டைச் சேர்ந்தவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டிருக்கிறார். பெரும்பாலும், வெளிநாட்டுப் பெண்ணை இரண்டாம் தாரமாகக் கொண்டவர்களுக்கே நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வெளிநாட்டுப் பெண்ணை இரண்டாம் தாரமாகக் கொண்டவர்கள் என்பதுதான் நோபல் பரிசு பெறுவதற்கான தகுதியா?" என்று கூறியிருக்கிறார்.

"நோபல் பரிசு வென்றது இருக்கட்டும். நோபல் பரிசுக்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கலாமா?"
பா.ஜ.க தேசியச் செயலாளர் எஸ்.எல்.சந்தோஷ்

பா.ஜ.க-வின் மற்றொரு தேசியச் செயலாளரான எஸ்.எல்.சந்தோஷும், அபிஜித் பானர்ஜியைத் தரம்தாழ்ந்து விமர்சித்துள்ளார். ‘நோபல் பரிசு வென்றது இருக்கட்டும். நோபல் பரிசுக்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கலாமா?’ என்று அவர் தாக்கியிருக்கிறார்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து தன் கருத்துகளை முன்வைத்ததற்காக, நோபல் பரிசுபெற்ற ஒரு பொருளாதார அறிஞரைத் தனிப்பட்ட முறையில் தரம்தாழ்ந்து தாக்குகிறார்கள், மத்திய ஆளும் கட்சியினர். இந்தத் தாக்குதலை பா.ஜ.க தலைமை கண்டிக்கவோ, தடுத்து நிறுத்தவோ முன்வரவில்லை.

அபிஜித் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ், சி.பி.ஐ(எம்), திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அபிஜித் பானர்ஜிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள ராகுல் காந்தி, ‘டியர் மிஸ்டர் பானர்ஜி, வெறுப்புணர்வு காரணமாக இந்தப் பெரியவர்கள் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். தொழில்முறை என்னவென்றே தெரியாதவர்கள் அவர்கள். எத்தனை ஆண்டுகளானாலும் அவர்களுக்கு உங்களால் விளக்க முடியாது. உங்களின் பணியால் லட்சக்கணக்கான மக்கள் பெருமைகொள்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார்.

நோபல் பரிசு பெற்ற தம்பதி
நோபல் பரிசு பெற்ற தம்பதி

தம்மீதான விமர்சனங்களுக்கு விரிவாக பதில் அளித்துள்ளார், அபிஜித் பானர்ஜி. "மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், என்னை முற்றிலும் இடதுசாரி ஆதரவாளர் என்று குறிப்பிட்டு, என் தொழில் தர்மத்தைக் குறைகூறியுள்ளார். ஆனால், என் பணியில் நான் எப்போதும் தர்மத்தை மீறியது இல்லை. என் பொருளாதாரக் கருத்துகள் ஒருதலைபட்சமாக இருந்ததில்லை. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலத்துக்கும் பணியாற்றியுள்ளேன். என் அனுபவத்தின் மூலம் பல கொள்கை முடிவுகளை அந்த அரசும் எடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் அறிக்கையில் இடம்பெற்ற குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்துக்கு (நியாய்) எவ்வளவு நிதி தேவைப்படும் என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்டனர். இதே கேள்வியை பா.ஜ.க கேட்டிருந்தால், அவர்களுக்கும் அந்தத் திட்டத்தை நான் அளித்திருப்பேன். நல்ல கொள்கையை அரசியல் காரணங்களுக்காகச் சுருக்கிக்கொள்வதை நான் கண்டிப்பாக ஏற்கவில்லை. எங்களுக்கு நோபல்பரிசு வழங்கப்பட்டதற்கான காரணம் ஓரளவுக்கு நாங்கள் துறை வல்லுநர்கள் என்பதால் மட்டுமே. தற்போது பொருளாதாரம் கடும் சிக்கலில் உள்ளது. இதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார், அபிஜித்.

மோடியுடன் அபிஜித் பானர்ஜி
மோடியுடன் அபிஜித் பானர்ஜி

தன் மகன் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அபிஜித் பானர்ஜியின் தாயான பேராசிரியர் நிர்மலா பானர்ஜி, "என் மகனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துகள் குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. அது அவர்களின் சுதந்திரம். ஆனால், மற்றவர்களுக்கும் அதே உரிமை இருக்கிறது என்பதை விமர்சிப்பவர்கள் உணர வேண்டும். விமர்சனத்துக்கான பதிலையும் மதிக்க வேண்டும். அபிஜித்தின் சொந்த வாழ்க்கை பற்றியும், இரண்டாவது திருமணம் பற்றியும் அவர்கள் பேசுகிறார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டால் நோபல் பரிசு கிடைக்கும் என்றால், அவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? நோபல் பரிசு பெறுவதற்கு அதுதான் வழியென்றால், இங்கே நோபல் பரிசு பெற்றவர் பல பேர் இருப்பார்கள்" என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி மற்றும் அபிஜித் பானர்ஜி சந்திப்பு திடீரென இன்று காலை நடைபெற்றது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித், ‘உன்னதமான சந்திப்பு’ என்று குறிப்பிட்டார்.

`தனித்துவமான அனுபவம்!' - மோடியுடனான சந்திப்பு குறித்து அபிஜித் பானர்ஜி

பிரதமர் மோடி, “நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி உடனான சந்திப்பு சிறப்பான ஒன்று. மனிதர்கள் மேம்பாடு அடைவதில் அவருக்கான பார்வை தெளிவானது. நாங்கள் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகவும் ஆரோக்கியமாகவும் விவாதித்தோம். அவருடைய சாதனைகளுக்காக இந்தியா பெருமையடைகிறது. வருங்காலத்தில் அவர் மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு, அபிஜித் பானர்ஜியின் கொள்கைபூர்வமான விமர்சனங்களை ஆட்சியாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பக்குவத்துடன் அணுகுவார்கள் என்று எதிர்பார்க்கலாமா?