Published:Updated:

`பாரம்பர்ய நடைமுறை தொடர வேண்டும்!’ - சபரிமலைத் தீர்ப்பு குறித்து நடிகை ரஞ்சனி

``முந்தைய பாரம்பர்ய நடைமுறை தொடர வேண்டும். இப்போதும் என் கருத்தில் உறுதியாகவே இருக்கிறேன். அதேசமயம் வழக்கறிஞர் என்ற முறையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன்."

ranjani
ranjani

சபரிமலையில் வழிபட அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் மாறுபட்ட கருத்துகள் எழுந்தன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், `இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும். அந்தத் தீர்ப்பு வெளியாகும் வரை, சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற முந்தைய தீர்ப்பு தொடரும்' என்று கூறப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தில், பல ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலரும் நடிகையுமான ரஞ்சனியிடம், இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசினோம். 

sabarimalai temple
sabarimalai temple

``சபரிமலை விவகாரத்தில் ஆரம்பத்திருந்தே, முந்தைய பாரம்பர்ய நடைமுறை தொடர வேண்டும் என்றுதான் கூறிவருகிறேன். இப்போதும் என் கருத்தில் உறுதியாகவே இருக்கிறேன். அதேசமயம் வழக்கறிஞர் என்ற முறையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன். பலநேரங்களில் நீதிமன்ற உத்தரவுகள் மாறுபட்டதாக இருக்கின்றன.

மேற்கத்திய நாடுகளில், மத நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை. அந்த வகையில் சபரிமலையில் காலம் காலமாக பெண்கள் அனுமதிக்கப்படாத சூழலில், அதைச் சார்ந்த மத நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு உச்ச நீதிமன்றம் மதிப்பு கொடுத்திருக்க வேண்டும்.

ranjani
ranjani

கடந்த வாரம் அயோத்தி வழக்கில், `அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்று நம்பும் இந்து மக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது' என்று ஐந்து நீதிபதிகள் அமர்வு கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். வழக்கத்துக்கு மாறாகத் திருமணத்தில் பெண்கள் ஆண்களுக்குத் தாலி கட்ட வேண்டும் என்றால், எத்தனை ஆண்கள் ஏற்றுக்கொள்வார்கள்? `பாரம்பர்யத்தை மீறக்கூடாது' என்றுதான் பெரும்பாலான குரல்கள் ஒலிக்கும்.

`பழைய உத்தரவுக்குத் தடையில்லை; 7 நீதிபதிகள் அமர்வு விசாரணை!' - சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

இப்படி, பாரம்பர்யமான நடைமுறைகளை யாரும் மீறாமல் இருப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். அடுத்து ஏழு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு வெளியாக வருடக்கணக்கில் ஆகலாம். ஆனால், அந்தத் தீர்ப்பு மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன். `நாங்களும் போவோம்' என்று வீம்புக்குச் செல்ல, சபரிமலை சுற்றுலாத் தலம் கிடையாது. நாட்டில் பல இடங்களில் ஐயப்பன் கோயில்கள் இருந்தாலும், சபரிமலை தனித்துவமானது. இங்கு பிரம்மச்சாரியாக ஐயப்பன் இருக்கிறார். எனவேதான், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்று கூறுகிறார்கள். சபரிமலை விவகாரத்தில் அநீதி இழைக்கப்படுவதாகவும் புறக்கணிக்கப்படுவதாகவும் பெண்கள் கருதத் தேவையில்லை

sabarimalai temple
sabarimalai temple

இந்த விஷயத்தில், பெண்கள் மனசாட்சியின் அடிப்படையில் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால் பிரச்னைக்கே இடமில்லை. அதற்காக, அனைத்துப் பெண்களிடமும் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். 'ரெடி டு வெயிட் ஃபார் சபரிமலை' என்ற எங்கள் குழுவின் சார்பில் தொடர்ந்து, பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அதிக கவனம் செலுத்துவோம்" என்கிறார் ரஞ்சனி.