Published:Updated:

அம்பேத்கருக்கு மரியாதை... ஆனந்த் டெல்டும்டேவுக்கு சிறை!

ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டபோது...
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டபோது...

அம்பேத்கரின் பேத்தியான ரமாவின் கணவர்தான் ஆனந்த் டெல்டும்டே. அதுமட்டுமே அவரது அடையாளமல்ல.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கரின் 129-வது பிறந்த நாளையொட்டி, தேசம் முழுவதும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்திக்கொண்டிருந்தனர். ஆனால், அம்பேத்கர் வாழ்ந்த வீட்டில் கறுப்புக்கொடி பறந்து கொண்டிருந்தது. அவரின் குடும்பத்தினர் வேதனையில் வெம்பிக்கொண்டிருந்தார்கள். அன்றைய தினம்தான் அம்பேத்கர் குடும்பத்தைச் சேர்ந்த பேராசிரியரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே ‘உபா’ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அம்பேத்கரின் பேத்தியான ரமாவின் கணவர்தான் ஆனந்த் டெல்டும்டே. அதுமட்டுமே அவரது அடையாளமல்ல. மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் ரஜூர் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஆனந்த் டெல்டும்டே, கல்வியாலும் அறிவுத்திறமையாலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் எம்.பி.ஏ படித்து பிஹெச்.டி முடித்தார். மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம், பெட்ரோலியம் இந்தியா லிமிடெட் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகித்தார். பிறகு, கரக்பூர் ஐ.ஐ.டி-யிலும் கோவா மேலாண்மை கல்வி நிறுவனத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

அம்பேத்கருக்கு மரியாதை... ஆனந்த் டெல்டும்டேவுக்கு சிறை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்துத்துவ அரசியல், தலித்கள் மீதான தாக்குதல், உலகமயமாக்கலின் தாக்கம் எனப் பல விஷயங்கள்குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’, ‘அவுட்லுக்’, ‘தெஹல்கா’, ‘செமினார்’ உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்தார். மோடி அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக அவர் விமர்சித்தார். மிகப்பெரிய சிந்தனையாளராக அறிவுஜீவிகள் மத்தியில் மதிக்கப்படும் ஆனந்த் டெல்டும்டேதான், தற்போது ‘நகர்ப்புற நக்சலைட்டுகள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏன் இந்த நடவடிக்கை?

2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் பீமா கோரேகான் என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில்தான் இவர் கைதுசெய்யப் பட்டுள்ளார். இங்கே ஒரு வரலாற்றுச் சம்பவத்தை நினைவுகூர்வோம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

புனேயை அடுத்த பீமா கோரேகான் என்ற இடத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக பேஷ்வா படைக்கும் பிரிட்டிஷ் படைக்கும் இடையே போர் நடைபெற்றது. உயர் சாதியினர் எனக் கருதப்பட்ட பேஷ்வாவின் ஆட்சி, மராட்டியத்தில் நடைபெற்றது. தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்ட மஹர் சாதியினர் பிரிட்டிஷ் படையில் இடம்பெற்றிருந்தனர். மஹர் சாதியினர் பல்வேறு தீண்டாமை வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதால், அவர்கள் பேஷ்வாக் களுக்கு எதிராக பிரிட்டிஷ் படையில் சேர்ந்தனர். பிரிட்டிஷ் படையினரால் பேஷ்வா படை தோற்கடிக்கப்பட்டது.

1818-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அந்தப் போர் நிறைவடைந்தது. பேஷ்வாக்களை வெற்றிகொண்டதைக் குறிக்கும் வகையில், பீமா கோரேகானில் நினைவுத்தூண் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. அங்கு ஒவ்வோர் ஆண்டும் பட்டியல் சமூகத்தினர் லட்சக்கணக்கில் கூடுவது வழக்கம். அப்படி, 2018-ம் ஆண்டு லட்சக்கணக்கில் மக்கள் கூடியபோது, அவர்கள்மீது வகுப்புவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அது வன்முறையாக வெடித்து, ஒருவர் கொல்லப்பட்டார். அந்த வன்முறையைக் கண்டித்து மகாராஷ்டிராவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி புனேயில் ஷானிவர் வாடா என்ற பகுதியில் பட்டியல் இனத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஆனந்த் டெல்டும்டேவும் பேசினார். அவரது பேச்சுதான் பீமா கோரேகானில் வன்முறையைத் தூண்டிவிட்டது என்று ஆனந்த் டெல்டும்டே மீது குற்றம்சாட்டப் பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்றைய முதல்வரின் நற்சான்றிதழ்!

‘பீமா கோரேகானில் கூடிய பட்டியலின மக்கள்மீது தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்ய வேண்டும்’ என அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மும்பையில் போராட்டம் நடத்தினர். ஷிவ்பிரதிஷ்தான இந்துஸ்தான் என்ற அமைப்பின் தலைவரான சம்பாஜி பிண்டே என்பவர்தான் அந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று பிரகாஷ் அம்பேத்கர் குற்றம்சாட்டினார். ஆனால், சம்பாஜி பிண்டேவுக்கு எதிராக சாட்சியங்கள் எதுவுமில்லை என்று நற்சான்றிதழ் அளித்தார், அன்றைய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்.

நகர்ப்புற நக்சல்கள்!

அப்போதுதான் ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்கிற பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் சுதீர் தாவ்லே, ரோனா வில்சன், ஷோமா சென், மகேஷ் ரவுட், சுரேந்திரா காட்லிங் ஆகிய ஐந்து சமூகச் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் தவிர, கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வெர்னான் கோன்சல்வ்ஸ், வழக்கறிஞர் அருண் ஃபெரெய்ரா ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.

‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எப்படி படுகொலை செய்யப்பட்டாரோ, அதே பாணியில் பிரதமர் மோடியையும் கொலைசெய்வதற்கு இவர்கள் சதித்திட்டம் தீட்டினார்கள்’ என்று அவர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட கடிதங்களின்மூலம் தெரியவந்ததாக போலீஸார் கூறினர். மேலும், ‘இவர்கள் தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) தீவிர உறுப்பினர்கள். தேசத்துக்கு எதிராக போரைத் தொடங்கி ஜனநாயக அரசைக் கவிழ்க்க சதிசெய்தனர்’ என்றும் போலீஸார் குற்றம்சாட்டினர். இவர்கள் இரண்டாண்டு காலமாக சிறையில் இருந்துவருகிறார்கள். அதே வழக்கில்தான் ஆனந்த் டெல்டும்டே மீதும் எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டது.

தன் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்துசெய்ய வேண்டும் என ஆனந்த் டெல்டும்டே தாக்கல் செய்த மனுக்கள், நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. அவருக்கு முன்ஜாமீனும் மறுக்கப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அலுவலகத்தில் ஏப்ரல் 14-ம் தேதி சரணடைந்தார். முன்னதாக ஏப்ரல் 13-ம் தேதி, ‘இந்திய மக்களுக்கு திறந்த மடல்’ ஒன்றை எழுதினார் ஆனந்த்.

ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டபோது...
ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டபோது...

அதில், 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் ஆசிரியர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தன் வீட்டில் போலீஸார் திடீரென நடத்திய சோதனை பற்றியும், அந்த நாளிலிருந்து தன் வாழ்க்கை எப்படி திசைமாறியது என்பது பற்றியும் வேதனையுடன் விவரித்துள்ளார். ‘இங்கு தேசத்தை அழிப்பவர்கள் தேசபக்தர்களாகவும், தன்னலமற்ற சேவகர்கள் தேசவிரோதி களாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். நான் என்.ஐ.ஏ காவலுக்குச் செல்லவிருக்கிறேன். இனி உங்களுடன் எப்போது பேச முடியும் எனத் தெரியவில்லை. இருப்பினும், உங்கள் முறை வருவதற்கு முன்பு நீங்கள் பேசுவீர்கள் என நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒரு கொடூர யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது!

‘தி வயர்’ ஆசிரியர் மீது வழக்கு!

கொரோனா வைரஸ் பரவுவதால் தேசிய அளவில் பிரதமரால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அதை விமர்சித்து ‘தி வயர்’ இணைய இதழில் ஒரு கட்டுரை வெளியானது.

அம்பேத்கருக்கு மரியாதை... ஆனந்த் டெல்டும்டேவுக்கு சிறை!

அதற்காக, அதன் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது வழக்கு பதிவுசெய்த உ.பி போலீஸார், ஏப்ரல் 14-ம் தேதி அயோத்தி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், ஊரடங்கு அமலில் இருக்கும்போது தம்மால் அங்கு வர முடியாது என இமெயிலில் அவர் பதிலளித்துள்ளார்.

கௌதம் நவ்லகா கைது

அம்பேத்கருக்கு மரியாதை... ஆனந்த் டெல்டும்டேவுக்கு சிறை!

ஆனந்த் டெல்டும்டே சரணடைந்த அதே நாளில், பத்திரிகையாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கௌதம் நவ்லகாவும் என்.ஐ.ஏ-விடம் சரணடைந்தார். இவர், ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகத்தைச் சேர்ந்தவர். எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி இதழின் கன்சல்டன்ட் எடிட்டராகவும் இருந்தவர். பிரதமர் மோடியைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக இவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சத்தீஸ்கரில் பழங்குடி மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அத்துமீறல்களை இவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.