Published:Updated:

`அரசு எங்களைப் பழிவாங்குகிறது!' - இந்தியாவில் சேவையை நிறுத்திக்கொண்ட அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

அம்னெஸ்டி இன்டர்நேஷனல்
அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் மனித உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் எனும் முனைப்புடன் செயல்படும் இந்த அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தற்போது இந்தியாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளது.

உலகளவில் மனித உரிமைக்காக களப்பணியாற்றி அறிக்கைகள் வெளியிடும் முக்கிய அமைப்பு 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்.' உண்மையை வெளியிடுதல், சட்டப்போராட்டம், ஆராய்ச்சி போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் தங்கள் தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது.

உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் மனித உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் எனும் முனைப்புடன் செயல்படும் இந்த அமைப்பு தற்போது இந்தியாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளது. 'அரசின் பழிவாங்கும்போக்கு மற்றும் வற்புறுத்தலின் பேரில் எங்கள் பணியை நிறுத்துகிறோம்' என்று அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல்
அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

ஏமனில் சவூதி அரேபியா மேற்கொள்ளும் போர், மெக்சிகன் குடியேறிகள் மீது கடுமை காட்டும் அமெரிக்கா எனச் சமீப காலங்களில் நடக்கும் உலகளாவிய மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தியதில் அம்னெஸ்டியின் பங்கு குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்தில் காவல்துறையின் மனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்டியது. அம்னெஸ்டி ஒருசார்பாகச் செயல்படுவதாக டெல்லி காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் தன்னாட்சி உரிமை நீக்கப்பட்டு ஒரு வருடம் ஆன நிலையில், சிறை வைக்கப்பட்ட அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களை விடுவிக்கக் கோரி குரல் கொடுத்தது. காஷ்மீரில் நடக்கும் அடக்குமுறைகளைச் சர்வதேச அளவில் கவனத்துக்குக் கொண்டுவந்தது.
காஷ்மீர்
காஷ்மீர்

இந்திய அரசுடன் தொடர்ந்து முரண்பட்ட அம்னெஸ்டி, அரசின் பல தலையீடுகளைச் சந்தித்தது. அரசுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புதல், வருமான வரி மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக இம்மாத தொடர்ச்சியில் அம்னெஸ்டியின் இந்திய வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது. இதுகுறித்து அம்னெஸ்டி இந்தியாவின் தலைமை இயக்குநர் ராஜட் கோஷ்லா கூறும்போது, "நாங்கள் இந்தியாவில் எதிர்பாராத சூழலைச் சந்திக்கிறோம். மனித உரிமை அமைப்புகள் மீது அரசின் தாக்குதலாக நாங்கள் நிர்வாக ரீதியில் வேட்டையாடப்பட்டோம். இந்த அனைத்து பின்னடைவுகளையும் நாங்கள் சந்திருந்தாலும், மனித உரிமை அமைப்புகள் கேள்வியே கேட்கக் கூடாது என்ற சூழலைத்தான் இந்த அரசு விரும்புகிறது" என்றார்.

அம்னெஸ்டியின் குற்றச்சாட்டிற்கு அரசிடமிருந்து எந்தப் பதிலும் தரப்படவில்லை. கடந்த 2009ம் ஆண்டு ஒருமுறை இந்த அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரைக்கு