Published:Updated:

'பிளீச்சிங் பவுடர் முதல் டாய்லெட் வரை துறையூர் பஞ்சாயத்து ஊழல்?!' - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கலெக்டர், லஞ்ச ஒழிப்புத்துறை உதவி இயக்குநர் ஆகியோர் விரிவான விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா தடுப்புப் பணிக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி
திருச்சி

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த 2020-ம் ஆண்டு லைசால், சொல்யூஷன், பிளீச்சிங் பவுடர், ஸ்ப்ரேயர் பவர் மிஷின் உள்ளிட்ட பொருள்கள் வாங்கப்பட்டன. அவற்றில் மூன்று பில்களில் மொத்தம் 18,44,636 ரூபாய்க்கு பொருள்கள் வாங்கப்பட்டதாகவும், சில பொருள்களை வாங்காமலேயே வாங்கியதாகவும் கணக்கு காட்டி முறைகேடு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 இடங்களில் தரமற்ற முறையில் மின்விளக்குகள் அமைத்து, பெரிய அளவில் ஏமாற்று வேலை நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செங்காட்டுப் பட்டியைச் சேர்ந்த சுயேச்சை கவுன்சிலர் அசோகன் என்பவர் அதிகாரிகள் முதல் ஆட்சியர் வரை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் கழிப்பிடம் கட்டுவதிலும் ஊழல் நடப்பதாகவும், இந்த விவகாரத்தை வெளியில் கொண்டுவருவதால் தங்களைப் பாரபட்சமாக நடத்துவதாகவும் புகார் கொடுத்திருக்கிறார் அசோகன்.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கலெக்டர், லஞ்ச ஒழிப்புத்துறை உதவி இயக்குநர் ஆகியோர் விரிவான விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அந்த உத்தரவின்பேரில் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஒன்றிய கவுன்சிலர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு