Published:Updated:

`ரூ.5,000 கொடுக்கச் சொன்னோம்; ரூ.2,500 தருகிறார்கள்!’ - தமிழக அரசை விமர்சித்த அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

மத்திய அரசு சத்தமே இல்லாமல் 15 நாள் இடைவெளிக்குள் இருமுறை கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் அளவுக்கு விலையேற்றம் செய்திருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிகிறார்கள்.

``மக்களைப் பற்றி யோசிக்காமல் கார்ப்பரேட்களான அம்பானி, அதானியைப் பற்றிக் கவலைப்படுவதற்கே மத்திய அரசுக்கு நேரம் சரியாக இருக்கிறது. எதற்காக அவர்கள் ஜனங்களைப் பற்றி யோசிக்க வேண்டும்’’ என்று மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்ததோடு, ``பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்குவது தி.மு.க-வுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எங்களைக் காப்பியடித்துத்தான் அ.தி.மு.க-வினர் பெயர் வாங்குகிறார்கள்’’ என்கிறார் அன்பில் மகேஷ்.

சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்துப் போராட்டம்.
சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்துப் போராட்டம்.

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தி.மு.க-வின் திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க மகளிரணி மாநில துணைச் செயலாளர் சல்மா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் எம்.எல்.ஏ-வுமான அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது சமையல் எரிவாயு விலை உயர்வுக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ் பொய்யாமொழி, ``கொரோனா பிரச்னையால் பல குடும்பத் தலைவர்கள் வேலை வாய்ப்பைப் பறிகொடுத்து, பொருளாதாரரீதியாக பலவீனப்பட்டு நிற்கும் நிலை உருவாகியிருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மகளிரணி போராட்டம்
மகளிரணி போராட்டம்

இந்தநிலையில், மத்திய அரசு சத்தமே இல்லாமல் 15 நாள் இடைவெளிக்குள் இருமுறை கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் அளவுக்கு விலையேற்றம் செய்திருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார்கள். மத்திய அரசுக்கு அடித்தட்டு மக்களின் நிலையைக் கவனிப்பதற்கு நேரமில்லை. கார்ப்பரேட்களான அம்பானி, அதானியை பற்றிக் கவலைப்படுவதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. பிறகு எப்படி மக்களைப் பற்றி யோசிப்பார்கள்" என்றார்.

பொங்கல் பரிசுத்தொகை தி.மு.க-வுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்று பத்திரிகையாளர்கள் கேட்க, ``தி.மு.க தலைவர் ஒவ்வொரு முறையும் என்ன சொல்கிறாரோ, அதைத்தான் தமிழக முதலமைச்சரும் செய்துவருகிறார். கொரோனா காரணமாக குடும்பத்துக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார். அதைத்தான் பொங்கல் பரிசாக 2,500 ரூபாயாகத் தமிழக அரசு வழங்குகிறது. இந்தப் பரிசுத்தொகை தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் இதையும் தேர்தலையும் பிரித்துப் பார்ப்பார்கள். 2019-ம் ஆண்டு பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் தமிழக அரசு வழங்கியது. அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோலத்தான் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு