Published:Updated:

திருமாவளவன் மீது வழக்கறிஞர் ரத்தினத்தின் குற்றச்சாட்டு: விசிக, முருகேசனின் பெற்றோர் சொல்வதென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முருகேசன் தந்தை சாமிக்கண்ணு
முருகேசன் தந்தை சாமிக்கண்ணு

கண்ணகி -முருகேசன் ஆணவக்கொலை வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து தொடரும் விவாதம்..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமீதூம், அதன் தலைவர் தொல் திருமாவளவன் மீதும் வழக்கறிஞர் பொ.ரத்தினம் வைத்திருக்கும் விமர்சனம், சமூகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

கண்ணகி - முருகேசன்
கண்ணகி - முருகேசன்

கண்ணகி-முருகேசன் ஆணவக்கொலை வழக்கை 17 வருடங்களாக நடத்தி, குற்றவாளிகள் தண்டனை பெற சட்டப்போராட்டம் நடத்தியவர்கள் மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் தலைமையிலான குழுவினர். அந்த வழக்கு கடந்துவந்த சோதனைகள் குறித்து சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட நீண்ட பதிவில் ``பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு உணர்வுரீதியாக உதவ எந்த தலித் அமைப்பும் முன்வருவதில்லை. இந்தப் பின்னணியில்தான் மனித உரிமைகளில் அக்கறையுள்ள, சாதியொழிப்பில், சமூக மாற்றத்தில் ஈடுபாடு உடைய வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் சிறு குழுக்களாக இந்த வழக்கைத் தொடக்கத்திலிருந்து நடத்தி, அப்பாவிகள் இருவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு மரண தண்டனையும், இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலித் மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் இந்தத் தீர்ப்பு பற்றிய அறிக்கைகளை வெளியிட்டு, தங்களை உயர்த்திப் பிடித்து விளம்பரம் தேடுவதாக நண்பர்கள் சிலர் வருந்துகிறார்கள். அந்த வகையில் சிலரது துரோகச் செயல்களைச் சுட்டிக்காட்ட வேண்டிய சமூகத் தேவையிருக்கிறது. வழக்கை நடத்த வேண்டாம் என்று கொல்லப்பட்ட முருகேசன் தந்தையிடம் திருமாவளவன் பேசினார்" என்றும் ரத்தினம் குறிப்பிட்டிருப்பதுதான் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருமாவளவன் மீதான குற்றச்சாட்டை விசிக நிர்வாகிகள் மறுத்துவருவதோடு, வழக்கறிஞர் பொ.ரத்தினத்தைக் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.

கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை: 13 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு; 2003-ல் நடந்தது என்ன?
வழக்கறிஞர் பொ.ரத்தினம்
வழக்கறிஞர் பொ.ரத்தினம்

இந்தச் சூழலில் இது குறித்து வழக்கறிஞர் பொ.ரத்தினத்திடம் பேசினோம்.

``கண்ணகி -முருகேசன் வழக்கில் நீங்கள் விசிக மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியாக இருக்கிறதே? "

``இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. தலித் மக்களுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும் சில இயக்கங்கள், அந்த மக்களுக்கு துரோகம் செய்வது தொடர்கிறது. வழக்கு தொடங்கிய காலத்தில் விசிக நிர்வாகிகள், முருகேசன் தந்தை சாமிக்கண்ணுவிடம் வழக்கை நடத்த வேண்டாம் என்று திருமாவளவன் அழைப்பதாக சென்னைக்கு அழைத்தது உண்மை. பின்பு சாமிக்கண்ணு திருமாவளவனிடம் போனில் பேசியபோது வழக்கை முடித்துக்கொள்ளவும், பணம் வாங்கித்தருவதாகாவும் பேசியதற்கு சாமிக்கண்ணு மறுத்துவிட்டார். அது மட்டுமல்லாமல், திருமாவளவனுக்கு நெருக்கமாக இருந்த வழக்கறிஞர் கிட்டு, `சாமிக்கண்ணுவிடம் திருமாவளவனை சந்திக்கச் சொல்லுங்கள்' என்று என்னிடமே கேட்டார். அதற்கு நான், `இந்த வழக்கின் முழு விவரங்கள் வழக்கறிஞர்களுக்கு மட்டும்தான் தெரியும். முருகேசனின் அப்பாவுக்கு தெரியாது. இது சரியல்ல' என்றேன். அதோடு அவர், `இனி இதில் தலையிடவில்லை' என்றார். இதைப் பற்றி நான் அப்போதே துண்டுப்பிரசுரம் மூலம் அம்பலப்படுத்தினேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` விசிக-வினர் கண்ணகி-முருகேசன் வழக்கில் எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை என்கிறீர்களா?"

``ஆம். அவர்களுடைய வழக்கறிஞர் அணியில் எனக்குத் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்கள் வழக்கு விவரங்களை என்னிடம் அக்கறையாகக் கேட்பார்கள். தலைமை உத்தரவிடாததால், அவர்கள் சட்டரீதியாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை."

``திருமாவளவன் மீது நீங்கள் உள்நோக்கத்தோடு தொடர்ந்து குற்றச்சாட்டுவைப்பதாகச் சொல்லப்படுகிறதே?"'

``நான் சொல்வது உண்மையா, பொய்யா என்று பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரியும். இதேபோல்தான் மதுரை மாவட்டம், சென்னகரம்பட்டி, மேலவளவு படுகொலை வழக்கிலும் நடந்தது. அதில் சாட்சியாகச் சேர்க்கப்பட்ட விசிக-வின் முக்கிய நிர்வாகி வழக்கு விசாரணையில் மாற்றிச் சொன்னார். இதனால் அந்தப் பகுதி தலித் மக்கள் விசிக மீது அதிருப்தி அடைந்தனர். கடைசிவரை எங்களுடன்தான் நின்றனர். நாங்கள்தான் வழக்கை நடத்தினோம். மேலவளவு கொலைக் கைதிகளை விடுதலை செய்ய அதிமுக அரசு உத்தரவிட்டபோது, திருமாவளவன் எதிர்க்கவில்லை. முருகேசனின் தந்தையிடம் திருமாவளவன் பேசியது பற்றி விசாரிக்க மக்கள் உரிமைக் கூட்டமைப்பு புதுவை கோ.சுகுமாரன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, பேராசிரியர் இளங்கோவன், வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட குழுவினர் சென்றோம். முருகேசன் குடும்பத்தினர் சொன்னதை வீடியோவில் பதிவு செய்தோம். இதைப் பற்றி ஆதவன் தீட்சண்யா அப்போது கட்டுரை எழுதினார். எல்லோருக்கும் இந்த விஷயம் தெரியும். திருமாவளவன் மீது அவதூறு பரப்பவேண்டிய தேவை எனக்கில்லை. நடந்த உண்மைகளை மக்களுக்குச் சொல்லவேண்டியது அவசியம். ஆரம்பத்திலிருந்தே இதைத் தெரிவித்துவருகிறேன். தற்போது தீர்ப்பு வந்த பிறகு என் கருத்துக்கு பதில் சொல்ல முடியாமல், முருகேசன் குடும்பத்தினரை விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் சந்தித்து, கன்வின்ஸ் செய்திருக்கிறார். அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இதுபோல் இன்னும் பல விஷயங்கள் இருக்கு" என்றார்.

கண்ணகி - முருகேசன்
கண்ணகி - முருகேசன்

இந்தநிலையில் கண்ணகி-முருகேசன் வழக்கு தீர்ப்பு சம்பந்தமாக கடந்த 29-ம் தேதி விசிக ஏற்பாடு செய்த ஜூம் மீட்டிங்கில் பொ.ரத்தினத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன. பொ.ரத்தினம், த.மு.எ.க.ச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யாவை விசிக-வினர் சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.

த.மு.எ.க.ச செயலாளர் ஆதவன் தீட்சன்யாவிடம் பேசினோம். ``கண்ணகி-முருகேசன் கொலை விசாரணை நடந்துகொண்டிருந்தபோதுதான் இப்படி ஒரு தகவல் வந்தது. புதுவை சுகுமாறன், பேராசிரியர் இளங்கோவன் போன்ற தோழர்களுடன் சென்று முருகேசன் குடும்பத்தினரிடம் விசாரித்தோம். விசிக நிர்வாகிகள் சிலர் நேரில் வந்து, போனில் திருமாவளவன் பேசுவதாகச் சொல்லி முருகேசனின் அப்பாவிடம் பேசச் சொல்லியதாகவும், வழக்கில் சமாதானமாகச் செல்ல அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் பேசிய விவரங்களை எங்களிடம் கூறினார். அதையெல்லாம் அப்போது வீடியோவில் பதிவு செய்தோம். இதைப் பற்றி அப்போது வழக்கறிஞர் ரத்தினம் பிரசுரமாக அடித்து விநியோகம் செய்தார். அந்த அடிப்படையில்தான் நான் `புதிய விசை’யில் கட்டுரையும் எழுதினேன். அப்போது விசிக-வினர் இதற்கு விளக்கம் கூறவில்லை. இது அவதூறாக இருந்தால் வழக்கு போட்டிருக்கலாம்.

ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா

அப்போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது தீர்ப்பு வந்தவுடன், அதில் தங்களுக்கு கிரெடிட் கிடைக்க வேண்டும் என்பதற்காக வழக்கறிஞர் ரத்தினத்தின் பங்களிப்பை மறைத்ப்பதும், உள் நோக்கம் கற்பிப்பதும் ஏனென்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காக இவர்தான் பாடுபட வேண்டும், இவர்தான் வழக்கை நடத்த வேண்டும் என்பது இல்லை. அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடினால்தான் வெற்றிபெற முடியும். நமக்குள் சின்னச் சின்ன முரண்பாடுகள் இருந்தாலும் அதைக் கடந்துதான் ஒற்றுமையாகப் போராட வேண்டும். திருமாவளவன் பேசுவதாக முருகேசனின் தந்தையிடம் கட்சி நிர்வாகிகள் பொய் சொல்லியிருந்தால், அவர்கள்மீது கட்சி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாததால், தலைமைக்குத் தெரிந்துதான் நடந்ததோ என்ற சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தும். தற்போது இந்தத் தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்களை கவனிப்பதை விட்டுவிட்டு வழக்கறிஞர் ரத்தினத்தின் பங்களிப்பு ஒரு விஷயமே இல்லை என்பதுபோல் கருத்துகளை வெளிப்படுத்துவது ஏற்புடையதல்ல. அதேநேரம் இதையே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்காமல் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென்பதே என் விருப்பம்" என்றார்.

இதுகு றித்து விசிக-வின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம் ``தொடர்ந்து விசிக-மீதும், திருமாவளவன் மீதும் வழக்கறிஞர் ரத்தினம் அவதூறு பரப்பிவருகிறார். தன்னை ஒரு கவுண்டர் சாதிக்காரர் என்றும், தலித் மக்களுக்காகத் தான் மட்டும்தான் பாடுபடுவதாகவும் கூறிக்கொள்கிறார். இந்த வழக்கில் பாடுபட்ட வழக்கறிஞர் ப.பா.மோகன் உட்பட பலரும் அமைதியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் தலித் மக்கள் பாதிக்கப்பட்ட வழக்குகளை விசிக-தான் எடுத்து நடத்திவருகிறது. சில வழக்குகளை ரத்தினத்திடம் கொடுத்ததும் நாங்கள்தான். இதை மறைத்து அவர் பேசிவருகிறார்.

வன்னி அரசு
வன்னி அரசு

பணத்துக்காக விசிக பேரம் பேசியதாக அவதூறு பரப்புகிறார். அப்படியொரு தேவையே இல்லை. இன்றைக்கு விசிக-வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள பல கட்சிகளும் போட்டி போடுகின்றன. பாஜக-கூட முயன்றது. அந்த அளவுக்கு செல்வாக்குள்ள கட்சியைச் சிறுமைப்படுத்த முயல்கிறார். முருகேசனின் அப்பாவிடம் திருமாவளவன் பேசியதாகவும், அதை இவரும் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டவர்களும் விசாரித்ததாகவும் சொல்கிறார். உண்மை அறியும் குழு என்றால் இரண்டு பக்கமும் விசாரிக்க வேண்டுமல்லவா... அதை ஏன் செய்யவில்லை... அப்புறம் எப்படி அவர்கள் சொல்வதை நம்புவது? நாங்கள் நடத்திய ஜூம் மீட்டிங்கில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று முருகேசனின் தந்தை கூறியிருக்கிறார். வழக்கறிஞர் ரத்தினம் என்றாவது ஆதிக்கச் சாதியினருக்கு எதிராகப் பேசியிருக்கிறாரா? சமீபத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை ரத்தினம் சந்தித்திருக்கிறார். திருமாவளவன், விசிக மீது அவதூறு பரப்ப வேண்டுமென்ற அவருடைய அஜெண்டாவை இவர் செயல்படுத்துகிறார். இதுதான் உண்மை" என்றார்.

முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவிடம் பேசினோம். `` என் மகனைக் கொன்ன பிறகு, என் மேல பொய் கேஸ் போட்டு, என் பொண்டாட்டியைக் கடுமையாகத் தாக்கி பல கொடுமைகளை போலீஸ் செஞ்சாங்க. அந்த நேரம் எங்களை வெளியே எடுத்து பாதுகாத்து, வழக்கை நடத்தி நல்ல தீர்ப்பு கிடைக்கக் காரணம் ரத்தினம் அய்யாதான். வேறு யாரும் எந்த உதவியும் செய்யலை. வழக்கு நடந்துக்கிட்டிருந்த நேரத்துலதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கருப்பசாமி, பார்த்திபன் உட்பட சிலபேரு எங்கிட்ட வந்தாங்க. இனி பிரச்னை வேணாம், திருமாவளவனும் அன்புமணி ராமதாஸும் பேசி முடிவெடுத்துட்டாங்க. அதனால நீ ஒரு காருலயும், உன் தம்பி ஒரு காருலயும் மெட்ராஸுக்கு வந்து அவங்களைச் சந்திக்கணும்னு சொன்னாங்க.

முருகேசனின் பெற்றோர்
முருகேசனின் பெற்றோர்

உடனே ரத்தினம் அய்யாகிட்ட கேட்டு சொல்றேன்னு அவர்கிட்டே போன் போட்டு பேசினப்போ, `எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசச் சொல்லுங்க’ன்னு ரத்தினம் அய்யா அவங்ககிட்டே சொல்லிட்டாரு. அப்புறம் `திருமாவளவனுடன் பேசுங்க’ன்னு பார்த்திபன் போன் போட்டுத் தந்தாரு, என்னை யாருன்னு விசாரிச்சுட்டு, `திருமாவளவன் அண்ணன் பேசுறேன்’னு சொன்னவரு, `நான்தான் உன்னை அழைச்சுட்டு வரச்சொன்னேன். கேஸை நடத்த வேணாம், தேவையில்லாமல் ஊருக்குள்ள சண்டை வேணாம், சமாதானமா போயிட எழுதிக் கொடுத்துடு, நானும் அன்புமணி ராமதாஸும் பேசி முடிச்சுக்கிட்டோம். உனக்கு ஒரு நல்ல அமவுண்ட் வாங்கித் தர்றோம்’னாரு. `என்னைக் காப்பாத்தின ரத்தினம் அய்யா சொன்னா வரேன்’னு சொன்னேன். இதுதான் அப்ப நடந்தது. இப்பக்கூட அவங்க நடத்துன மீட்டிங்குல திருமாவளவன்கிட்டே அதைச் சொன்னேன். ஆனால், நான் பேசலைங்கிறார். சமீபத்துல என்னை வந்து பார்த்த எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வனும் `ரத்தினம் அய்யா சிறப்பா வழக்கை நடத்துனதை உலகமே பாராட்டுது. அவர் மாதிரி வராது. அதேநேரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அவரும் சேர்ந்துதான் பாடுபட்டாங்கன்னு சொல்லு’ன்னாரு, `அப்படில்லாம் சொல்ல முடியாது. எல்லாம் ரத்தினம் அய்யாதான். இதுதான் உண்மை. இப்ப அவங்க நடத்துன மீட்டிங்குலயும் அதைத்தான் சொன்னேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு