மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாராளுமன்றக் கூட்டத்தில் மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் சமர்பித்தார்.

2009ல் ஆறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் மூலம், இஸ்லாம், கிறிஸ்தவம், புத்தம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஆறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்கல்வி மாணவர்கள், பிஎச்டி படித்து முடிக்க மவுலானா ஆசாத் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது.
ஐந்து ஆண்டுகள் ஸ்காலர்ஷிப்பில், முதல் இரண்டு ஆண்டுகளில் அவர்களுடைய ஆராய்ச்சி திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில், அது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் தொடரப்படும். ஒரு உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் வேறு நலத்திடங்கள் மூலம் பயன்பெற முடியாது என்பது ஏற்கனவே மத்திய அரசு வகுத்திருக்கும் விதி.
ஆனால், மவுலானா ஆசாத் திட்டம் ரத்து செய்வதற்கான காரணமாய், அமைச்சர் ஸ்மிருதி இரானி, அது போலவே பல நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதாக தெரிவித்து இருக்கிறார். மேலும், 2022-23 கல்வி ஆண்டு முதல் மவுலானா ஆசாத் உதவித்தொகை திட்டத்தை மத்திய அமைச்சகம் முழுமையாக நிறுத்தப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
ஆனால், இஸ்லாம், சீக்கியம் மற்றும் கிரிஸ்தவ சமூகம், சில மாநிலங்களில் ஓபிசி பிரிவில் வராததால், மற்ற நலதிட்டங்கள் அவர்களுக்கு கிடைக்காது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவை எதிர்த்து தலைநகர் தில்லியில் மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர். ஜவஹர்லால் கல்லூரி ஆசிரியர்கள் அமைப்பு மத்திய அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, இது ஜனநாயகத்துக்கும், ஒற்றுமைக்கும் எதிரானது என்றனர்.
இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) தகுதியான மாணவர்களை மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுத்து அவர்களுக்கான ஊக்கத்தொகையை வழங்கி வருகிறது. இந்த ஊக்கத்தொகைக்கு தகுதியான மாணவர்களின் தேர்வு வருடத்தில் இரு முறை நடைப்பெறும். இரண்டு முறையும் 500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியா முழுக்க மொத்தம் 1000 மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுகிறார்கள்.
இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைகழகங்களிலும் பயிலும் சிறுபான்மை மாணவர்கள் இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதில் 30% உதவித்தொகை பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் 3% உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகம் தொடர்ந்து சிறுபான்மையினருக்காக கல்வி உதவித்தொகைகளை நிறுத்தி வருவது குறித்து, பேராசிரியர் ஆ கருணானந்தனிடம் பேசினோம்.

“மவுலானா அபுல் கலாம் ஆசாத், இந்திய விடுதலை போராட்ட வீரர். தீவிரமாக காந்தியைப் பின்பற்றியவர், நேருவின் நெருங்கிய நண்பர். இவர் இந்தியாவின் முதல் கல்வி துறை அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய பெயரை வரலாற்றில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக இயங்கி வருகிறது. பெயர்களை மாற்றுவது. வரலாறை திரிப்பது. ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்தவர்களை தியாகிகள் போலவும், உண்மையிலேயே தேசபக்தியுடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய விடுதலை வீரர்களை எதிரிகள் போலவும் சித்தரிக்கிறது பாஜக. இவர்களுடைய இந்துத்துவ கொள்கைகளை ஏற்கும் முஸ்லிம்களை இவர்கள் கொண்டாடுவார்கள், ஆனால் அதற்கு எதிராக செயல்படும் அனைவருமே இவர்களுக்கு எதிரிகள் தான்.

கல்வி எல்லோரிடமும் போய் சேர வேண்டும் என்பது இவர்களுடைய நோக்கம் இல்லை. ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்கப்பட்டவர்களாகவே வைத்திருக்க வேண்டும். அவர்களை முன்னேற விடக்கூடாது. அதற்கு முக்கிய ஆயுதம் கல்வி தானே. அதனால் தான் அனைவருக்கும் கல்வி என்பதை இந்த மத்திய அரசு மாற்ற முயல்கிறது“ என்கிறார் பேராசிரியர் ஆ கருணானந்தன்
திமுக மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளர் சல்மா, ”இது பல வருடங்களாக இருந்து வந்த நிதி ஒதுக்கீடு. மவுலானா ஆசாத் எல்லோருக்குமான தலைவர். அதே சமயம், யாருக்கு கூடுதலான உதவியும் ஆதரவும் தேவைப்பட்டதோ அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று தான் அவர்களுக்கான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
பாஜக ஆட்சி நலத்திட்டங்களை ஏன் ரத்து செய்கிறது என்ற காரணத்தைத் தேடி நாம் அலையவே வேண்டியது இல்லை. அவர்கள் சிறுபான்மை மாணவர்கள் எந்த விதத்திலும் முன்னேறி விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் அந்த மாணவர்களை ஒடுக்கி வருகிறார்கள்.

நாட்டை வல்லரசாக்க, அதை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்வதே ஒரு அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால், தன் நாட்டில் வசிக்கும் வேற்று சமூகத்தைச் சேர்ந்த மக்கள் படிக்கவே கூடாது, தங்களுக்கு நிகராக முன்னேறிவிடக் கூடாது என்ற பதற்றம் தான் இந்த அரசிடம் அதிகமாக இருக்கிறது.
2020ல், ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்ற முஸ்லிம் மாணவர்களை ”யுபிஎஸ்சி ஜிஹாத்” என்றது ஒரு வட இந்திய செய்தி சேனல். திடீரென முஸ்லிம் மாணவர்கள் அதிகமானோர் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதகவும், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதாகவும் இதற்கு காரணம், அவர்களுக்கு அரசாங்கம் பல கூடுதல் தளர்வுகள் வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக வன்முறை தூண்டும் விதத்தில் அமைந்த அந்த நிகழ்ச்சி பின்னர் தடை செய்யப்பட்டது. அதில் வெளியிட்ட விவரங்கள் அனைத்துமே உண்மை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒடுக்கப்பட்ட மாணவர்கள், பல கஷ்டங்களைத் தாண்டி படித்து ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றால் கூட, அவர்களை கேலி செய்து ஒடுக்கும் முயற்சியில் தான் பல அமைப்புகள் இங்கே செயல்பட்டு வருகிறது.
ஐஏஎஸ் படிப்பில் முறையாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதற்கான பணி நியமனத்தை வழங்காமல் தவிர்ப்பதும் வட இந்தியாவில் அதிகம் நடப்பதாக குற்றம் எழுப்பப்பட்டுள்ளது. தனக்கு இருக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது, அவர்கள் நினைப்பதை யார் எதிர்த்தாலும், அதனால் நாட்டு மக்களுக்கு எவ்வளவு பிரச்சனை ஏற்பட்டாலும் அதை பற்றி பாஜக கவலைப்படுவதில்லை” என்கிறார் சல்மா.

ப்ரீ மெட்ரிக் கல்வி ஊக்கத்தொகை திட்டம் 2008ல் அறிமுகப்படுத்தப்பட்ட போது, குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தார். இந்த திட்டம் ஒருதலைபட்சமாக மக்களுக்கிடையே பாகுபாட்டை விளைவிக்கிறது என்று கூறி குஜராத் அரசு ப்ரீ மெட்ரிக் ஊக்கத்தொகை திட்டத்தை நிராகரித்தது. பின்னர் சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2013ல் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ப்ரீ மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தை குஜராத் அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து 3.5 லட்சம் மாணவர்கள் பயன்படும் வகையில் ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.