Published:Updated:

`தேவைக்கேற்ற விநியோகம் இல்லை’: பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பின்னணியும் விளைவுகளும்!

கொரோனாவுக்குப் பிறகு கச்சா எண்ணெயின் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்யப்படாததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அக்டோபர் 9-ம் தேதி சென்னையில் பெட்ரோல் விலை ரூ.101.01. டீசல் விலை ரூ.96.60 ஆக இருக்கிறது. தமிழக அரசு தனக்குக் கிடைக்கும் வரியிலிருந்து 3 ரூபாய் குறைத்ததால்தான் 101 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இல்லையெனில் 104 ரூபாயாக இருந்திருக்கும். மத்திய அரசு கைகளில் விலை நிர்ணயம் இருந்தவரையில் கூட ஓரளவு விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், பெட்ரோல், டீசலை விநியோகிக்கும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் கைகளில் விலை நிர்ணய உரிமை சென்றதோ, அன்று முதலே சிக்கல்தான். தொடர்ச்சியாக விலை உயர்வுக்கு என்ன காரணம்? இதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும்?

'ஒபெக்’ கூட்டமைப்பின் நாடுகள்
'ஒபெக்’ கூட்டமைப்பின் நாடுகள்

இதுகுறித்து விரிவாக நம்மிடம் பேசினார் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் ஒன்றின் முக்கிய அதிகாரி. “தற்போதைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 77 அமெரிக்க டாலராக உள்ளது. பொதுவாக உலகம் முழுவதுமே கச்சா எண்ணெயின் விலையைக் கணக்கிட்டுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கணக்கிடுவார்கள். இந்தமுறை, அதையும் தாண்டி வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

உலகளவில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர். ’ஒபெக்’ (OPEC) பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு என்ற இந்த அமைப்பில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், லிபியா, வெனிசுலா, ஈக்குவடார், அல்ஜீரியா, அங்கோலா, காங்கோ உள்ளிட்ட 15 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகள்தான் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்பவை. ‘ஒபெக்’ அமைப்பில் இல்லாத மேலும் சில நாடுகளும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறன.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இந்தியாவில் இப்போதைய பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்துக்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன. ‘ஒபெக்’ நாடுகள் மட்டுமின்றி அதில் அங்கம் வகிக்காத ஈரான் போன்ற நாடுகளில் இருந்தும் இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. ‘ஒபெக்’ மற்றும் அதில் இடம்பெறாத நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டு பிரச்னைகள், குழப்பங்கள் போன்றவற்றால் ஏற்றுமதியை முழுமையாக அவர்களால் கையாள முடியவில்லை. உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளுக்குக் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வது என்றால் லேசுபட்ட காரியமா? உள்நாட்டுப் பிரச்னையால் அங்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பது முதலாவது காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல், கொரோனாவுக்குப் பிறகு இந்த தொழிலே கொஞ்சம் பாதிக்கப்பட்டுவிட்டது. தேவை பல நாடுகளில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கேற்ற சப்ளை அதாவது விநியோகம் இல்லை. விநியோகம் செய்வதாகக் கூறும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளால் முழுமையாக விநியோகிக்க முடியவில்லை. இது இரண்டாவது காரணம். எப்படியும் இந்த மாத இறுதிக்குள்ளாக நிலைமை சீரடைந்துவிடும் என்று நினைக்கிறோம்” என்று முடித்தார்.

Vikatan
பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்
vikatan

தொடர் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொருளாதார ஆலோசகர்கள் மத்தியில் பேசினோம். “இந்தியாவில் தங்கம் எந்தளவுக்கு முக்கியமாக கருதுகிறார்களோ, அதே நிலையை பெட்ரோல், டீசலும் எட்டிவிட்டது. தங்க விலை எவ்வளவுதான் ஏறினாலும் மக்கள் வாங்கத்தான் செய்கிறார்கள், அதில் முதலீடுகளும் செய்கிறார்கள். அதேபோல் பெட்ரோல், டீசல் விலையை எவ்வளவுதான் உயர்த்தினாலும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை எண்ணெய் நிறுவனங்கள் தெரிந்துகொண்டன. ஒரு நாள் விலை ஏற்றப்பட்டால் அது அந்த ஒருநாள் செய்தியாகத்தான் பார்க்கப்படுகிறது. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பணிக்காக, தேவைக்காக செல்ல வேண்டிய தேவை இருப்பதால் மக்களும் வேறு வழியின்றி கடந்து செல்கிறார்கள். இருந்தபோதும் ஏழை, நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் விலையேற்றம் இது.

பெட்ரோல் விலையேற்றத்தால் பின் விளைவுகள் இல்லை எனில் பிரச்னை இல்லை. ஆனால், இதன் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்னைகள் அணிவகுக்கின்றன. பெட்ரோலைப் பொறுத்தவரை இரு சக்கர, மூன்று மற்று நான்கு சக்கர வாகனங்கள்தான் பயன்படுத்துகின்றன. கனரக வாகனங்கள் அனைத்தும் டீசலைக் கொண்டுதான் இயங்குகின்றன. டீசலும் தொடர்ந்து உயர்வு காண்பதால், காய்கறியில் தொடங்கி உணவுப் பொருட்கள் வரை விலை தாறுமாறாக உயர்ந்துகொண்டே செல்கிறது. எதுவானாலும் இறுதியில் பாதிக்கப்படுவது என்னவோ பொதுமக்கள்தான்!” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு