Published:Updated:

சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய ஆசிரியை- தூத்துக்குடி அரசுப் பள்ளி அதிர்ச்சி

சாதியரீதியில் அரசுப் பள்ளி ஆசிரியை பேசிய விவகாரம்

தூத்துக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடம் சாதியரீதியில் பேசிய விவகாரம் தொடர்பாகப் பள்ளி ஆசிரியைகள் இருவர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய ஆசிரியை- தூத்துக்குடி அரசுப் பள்ளி அதிர்ச்சி

தூத்துக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடம் சாதியரீதியில் பேசிய விவகாரம் தொடர்பாகப் பள்ளி ஆசிரியைகள் இருவர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
சாதியரீதியில் அரசுப் பள்ளி ஆசிரியை பேசிய விவகாரம்

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது அரசு பொதுத் தேர்வு தொடங்கும் நேரமாக இருந்ததால், தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 7-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே பெற்றோர் ஆசிரியர் சங்கத் தேர்தல் தொடர்பாக இப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் கலைச்செல்வி, கணினி ஆசிரியை மீனா உதவியுடன் மாணவர் ஒருவரிடம் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

ஆசிரியர் கலைச்செல்வி,  மீனா
ஆசிரியர் கலைச்செல்வி, மீனா

மாணவருக்கு போன் செய்த கணினி ஆசிரியை மீனா, ``கலைச்செல்வி மிஸ் உங்கிட்ட பேசுவாங்க. அவங்க சொல்றதைக் கேட்டுக்கோ. முடிஞ்சா செய். இல்லேன்னா அதை மறந்துடணும்” எனச் சொல்லி அவர், உதவித் தலைமை ஆசிரியை கலைச்செல்வியிடம் போனைக் கொடுக்கிறார். “உன் பெயர் என்ன?’’ எனக் கேட்டபடியே பேச்சைத் தொடங்குகிறார் ஆசிரியை. “எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா? உனக்கு நம்ம ****** சாரையும், நம்ம ஸ்கூல் பி.இ.டி மாஸ்டரையும் உனக்குப் பிடிக்குமா... நீ நான் சொல்றதைச் செய்வியான்னு தெரியலை. நீ எல்லாரையும் பிடிக்கும்னு சொல்லுறியே... அப்போ எப்படி உன்கிட்ட சொல்ல... எல்லா டீச்சரையும் உனக்குப் பிடிச்சுதுன்னா. எல்லாருக்கும் பிடிச்ச பிள்ளையாவே இரு. நான் உன்கிட்டப் பேசுனேன்னு யார்கிட்டயும் சொல்லாதே. நான் ஒண்ணு சொன்னேன்னா அதைச் செய்யணும்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து பேசியவர், ``நான் சொன்ன அந்த ரெண்டு வாத்தியாரையும் உங்க கிளாஸ்ல எல்லாருக்கும் பிடிக்குமா... நம்ம ஸ்கூல்ல அட்மிஷன் போடும்போது அந்த ரெண்டு சாரும் புளியங்குளம் பசங்களுக்கு சீட் கொடுக்காதீங்கன்னு சொல்லுவாங்க. அது என்ன காரணம்னு தெரிஞ்சாத்தான் சீட் கொடுக்க முடியும். நம்ம ஹெச்.எம் மூணு வருஷத்துல ரிட்டையர்டு ஆகிடுவாங்க. அப்புறம் நான்தானே ஹெச். எம்? நம்ம ஸ்கூல்ல பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் வைக்கப் போறாங்கன்னு உனக்குத் தெரியுமா... தலைவர், நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கப்போறாங்களாம். அதுலயெல்லாம் உங்க ஊர்ல வேற யாருக்கும் ஈடுபாடு உண்டா... உங்க ஊருக்காரங்களையும் கலந்துகிடச் சொல்லணும். அப்படி விருப்பம் உள்ளவங்களை எங்கிட்ட பேசச் சொல்லு. ஒரு சார்பா உள்ளவங்ககிட்ட நம்ம ஸ்கூலை தூக்கிக் கொடுத்த மாதிரி கொடுக்கக் கூடாது. நான் சொல்லுறது புரியுதா... யாரு மெஜாரிட்டியா இருக்கா... அந்த ஆளுங்கதான் (பட்டியலினத்தவர்கள்), அவங்களை நிர்வாகத்துக்குள்ள விடலாமா?" என்று கேட்கிறார்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

மேலும், ``நீயே சொல்லு’’ எனக் கேட்க, “எல்லாருமே சமம்தானே டீச்சர்” என அந்த மாணவர் கேட்க, “அவங்க வந்தாங்கண்ணா, புளியங்குளத்துக்கே சீட் கொடுக்க மாட்டாங்க. இனிமேல் எங்க போய் படிப்பீங்க... நான் பேசுனா ஒரு அர்த்தம் இருக்கும்னு தெரியுமா தெரியாதா... அவங்க வந்தா அவங்களுக்கான ஸ்கூலா மாறிடும். அதுக்கு விடக் கூடாது.

பசங்க நோட்டீஸ் கொண்டு வருவாங்க. அதை உங்க ஊருக்காரங்களைப் பார்த்துட்டு பேசச் சொல்லு. நான் சொல்லுறதைப் புரிஞ்சுக்கணும். நம்ம ஸ்கூலுக்குள்ள இப்படி ஒரு சூழ்நிலை இருக்கு. இது அரசுப்பள்ளி. எல்லாருக்கும் வாய்ப்பு தரணும். நான் சொல்லுறதைப் புரிஞ்சுக்கிட்டு அதுபடி செய். அந்த வாத்தியாரையெல்லாம் நம்பாதே. அவங்க எல்லாம் வெளி வேஷம் போடுறாங்க. இவங்க மட்டும் நிர்வாகத்துல இருக்கக் கூடாது. தலைவர் பதவிக்கு உங்க ஊருல உள்ளவங்க வரணும். புரியுதா... ஊருல பேசிட்டு கம்யூட்டர் டீச்சர்ட்ட சொல்லு. இல்லேன்னா, எங்கிட்டப் பேசு” எனச் சொல்லி தனது அலைபேசி நம்பரையும் கொடுத்திருக்கிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சாதிகள் இல்லையடி பாப்பா’ என முழங்கிய முண்டாசுக் கவிஞன் பாரதியார் பிறந்த மண்ணான தூத்துக்குடி மாவட்டத்தில், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் தொடர்பாக மாணவரிடம் பள்ளி உதவித் தலைமை ஆசிரியை ஒருவர் சாதிரீதியாகப் பேசியிருப்பது தொழில்நுட்பரீதியாக வளர்ந்த சமூகம் மீண்டும் பின்னோக்கி செல்வதையே குறிப்பிடுகிறது எனச் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் கூறும்போது, ``சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது பள்ளி வளாகம். அங்குதான் நல் விதையை விதைக்க முடியும். அங்கு ஓர் ஆசிரியை தப்பான கண்ணோட்டத்தில் சாதிரீதியாகப் பேசியது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. மாணவர் சமுதாயத்திடம் ஒரு துவேஷத்தை விதைத்ததுபோல் உள்ளது.

பாலமுருகன்
பாலமுருகன்

தேசப்பற்று, மற்றவர்களுக்கு உதவி செய்வது, சமுதாயத்துக்கு நல்லது செய்வது தொடர்பாக நீதி போதனைகள் மூலமாக ஆசிரியர்கள் சொல்லித்தருவார்கள். ஆனால், தற்போது சாதி குறித்தும், அந்த மாணவரின் சாதிக் கண்ணோட்டத்தை ஏற்படுத்திய ஆசிரியை மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கண்காணிப்புக்குழு இருப்பதுபோல், ஆசிரியர்களைக் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவினர் பள்ளி வளாகத்தில் சாதிரீதியாகப் பேசுபவர்களையும், குழு சேர்ப்பவர்களையும் கண்டறிந்து அறிக்கை அளிக்க வேண்டும். அதன்மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே இதற்கு நிரந்தரத் தீர்வு” என்றார் அவர்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து ஆடியோ தொடர்பான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியைகள் கலைச்செல்வி, மீனா ஆகியோரிடம் இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தினார். விசாரணையில் இந்தச் சம்பவம் தொடர்பாக ஆசிரியர் கலைச்செல்வி, மீனா இருவரையும் தற்காலிகப் பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டார். மாணவர்களிடம் கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியையே சாதிரீதியாகப் பேசிய விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism