Published:Updated:

`குழந்தைகளைக் குற்றவாளிகளாக்கும் ஆன்லைன் கேம்கள்?!' - இந்த சமூகம் செய்ய வேண்டியது என்ன?

ஆன்லைன் கேம் விபரீதங்களால் குழந்தைகள் தற்கொலை செய்வதையும், குற்றவாளிகளாக மாறுவதையும் தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்?

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை பெரம்பூரில், +1 படிக்கும் மாணவர் ஒருவர், தான் ஆன்லைன் கேம் விளையாடுவதை பெற்றோர் தடுத்ததால், வீட்டிலிருந்த 213 பவுன் நகை, ரூ. 33 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். காவல்துறையினர் மடக்கிபிடித்து விசாரித்ததில், மாணவன் நேபாளத்துக்கு தப்பித்துசெல்ல முயன்றது தெரியவந்திருக்கிறது. இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொடுங்கையூரில் +1 மாணவன் ஒருவர் ஆன்லைன் லாட்டரி கேம் விளையாடுவதற்காக அம்மாவின் நகையை அடமானம் வைத்தும், தெருவில் நடந்து சென்ற பெண்ணின் நகையை பறித்த நிகழ்வும் நடந்திருக்கிறது. தூத்துக்குடி ஓட்டப்பிடாரத்தில், மாணவர்கள் சாதி ரீதியில் இரு அணியாகப்பிரிந்து, ஆன்லைன் கேமில் மோதிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகம் தவிர்த்து, மத்தியப்பிரதேசத்திலும் ஆன்லைன் கேமில் தன்னை தோற்கடித்த 10 வயது சிறுமியை, 11 வயது சிறுவன் கல்லாலே அடித்து கொலை செய்த சம்பவமும் கடந்த ஆண்டு நிகழ்ந்திருக்கிறது.

மொபைல் அடிக்‌ஷன்
மொபைல் அடிக்‌ஷன்
Pixabay

கடந்த சில ஆண்டுகளாகவே, குழந்தைகள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என ஸ்மார்ட்போன், ஆன்லைன் கேம்ஸ்களில் மூழ்கி அடிமையாகிவருவது அதிகரித்துவருகிறது. குறிப்பாக, இந்த கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட்போன்கள் கொடுத்த பின்னர், பள்ளிக்குழந்தைகளிடமும் அந்த பழக்கம் மேலும் அதிகரிக்க தொடங்கியது. ஆன்லைன் வகுப்புகள் முடிந்தபின்னரும் குழந்தைகள் பெற்றோர்களுக்கு தெரிந்தும், தெரியாமலும் ஆன்லைன் கேம் செயலிகளைத் தரவிறக்கம் செய்து விளையாடும் பழக்கம் வேகமாக தொற்றிக்கொண்டது. கொரோனா ஊரடங்கு முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னரும்கூட அந்தப் பழக்கம் அப்படியே பின்தொடர்கிறது. இதனால் பல்வேறு பிரச்னைகளை குழந்தைகளும், குழந்தைகள் மூலம் அவர்களின் குடும்பங்களும் எதிர்கொண்டுவருகிறது.

பள்ளிப்படிக்கும் குழந்தைகளை, ஆன்லைன் கேம்கள் எப்படி குற்றவாளிகளாக மாற்றுகின்றன? இதற்கு என்ன காரணம்? பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்? ஆன்லைன் கேம் விபரீதங்களால் குழந்தைகள் தற்கொலை செய்வதையும், குற்றவாளிகளாக மாறுவதையும் தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்து குழந்தைகள் உரிமை செயற்பாட்டளார் அ.தேவநேயன், குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா ஆகியோருடன் பேசினோம்.

 ஆன்லைன் கேம்
ஆன்லைன் கேம்

குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் அ. தேவநேயன்:-

``தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) அறிக்கையானது, குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் செய்யும் குற்றங்களும் அதிகரித்திருக்கிறது எனச்சொல்கிறது. இதை மறுப்பதற்கில்லை. இன்றைய சமூக அமைப்பில், கூட்டுக்குடும்பம் என்ற முறையே இல்லாமல் போய்விட்டது. தாத்தா, பாட்டி, உறவினர்கள் என மனிதர்களோடு பழகக்கூடிய, வாழக்கூடிய குடும்பமுறை இப்போதைய குழந்தைகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது. பெற்றோர்களும் அலுவலகம், வேலை, தொலைக்காட்சி நாடகம் என்றுபோக, குழந்தைகளுடன் செலவிடும் நேரமும் வெகுவாக குறைந்துவிட்டது. இதுபோன்ற காரணங்களால் குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர். அவர்களுக்கு எல்லாமே ஸ்மார்ட்போன், ஆன்லைன், ஆன்லைன் கேம்ஸ் என்றாகிவிட்டது.

திருச்சி:`கடன் வாங்கி ஆன்லைன் கேம்; பறிபோன பணம்!' - மன உளைச்சலால் காவலர் தற்கொலை
அ.தேவநேயன்
அ.தேவநேயன்

வீட்டிலிருப்பவர்கள் தினசரி செய்தித்தாள் படிப்பது, கார்டனிங் வேலை செய்வது, தீயவார்த்தைகளை தவிர்ப்பது, உண்மை பேசுவது என்றிருந்தால் குழந்தைகளும் அந்த பழக்கத்தை அவர்களிடம் கற்றுக்கொள்வார்கள். ஆனால், குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருக்கவேண்டிய பெற்றோர்களே தொலைக்காட்சித் தொடர்களுக்குள் மூழ்கியிருப்பதால், குழந்தைகளும் அந்த சூழலுக்குத் தகுந்தாற்போல் நடக்கப் பழகிவிட்டார்கள்.

குழந்தை-பெற்றோர்
குழந்தை-பெற்றோர்

முதலில் மாற்றம் பெற்றோர்களிடமிருந்து வரவேண்டும். குழந்தைகளிடம் தரமான நேரத்தை அவர்கள் செலவிடவேண்டும். நண்பர்களைப்போல பேசவேண்டும். குழந்தைப்பருவத்தை சிதைக்கின்ற வகையில் 3 வயதிலேயே படிப்பு, மனப்பாடம், பெற்றோர்கள் நீங்கள் விரும்பக்கூடிய ஏதாவது ஒன்றை சொல்லிக்கொடுப்பதாகக்கூறி எதையும் திணிக்க கூடாது. குழந்தைகளை குழந்தைகளாகவே வளரவிடவேண்டும். வீட்டுக்குள்ளேயே குழந்தைகளை அடைத்துவைக்காமல் அவர்களை விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், கலைநிகழ்ச்சிகள், உறவினர்கள் வீடுகள் என மனிதர்களோடு, சமூகத்தோடு பழகக்கூடிய சூழலை ஏற்படுத்திதரவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவதாக, பள்ளிகளில் ஆசிரியர்கள் வாழ்க்கை திறன் கல்வி (Life Skills), நீதிநெறி வகுப்புகளை (Moral classes) நடத்தவேண்டும். உடற்பயிற்சி, மைதான விளையாட்டுகளை ஊக்குவிக்கவேண்டும்.

மூன்றாவதாக, மிக முக்கியமாக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உடல்சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்கும்வண்ணம் மைதானங்களை ஏற்படுத்தித்தர வேண்டும். விளையாட்டுதான் குழந்தைகளை இதுபோன்ற ஸ்மார்ட் போன், ஆன்லைன் கேம்களில் அடிமையாவதிலிருந்து, குற்றச்செயல்களில் ஈடுபடுவதிலிருந்தும் விடுவிக்கும். குறிப்பாக வட சென்னையில் கால்பந்து போட்டிகளை ஊக்குவித்ததன் காரணமாக, இன்று அங்கிருக்கும் இளைஞர்கள் தீயபழக்கவழக்கங்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவது பெருமளவு குறைந்திருக்கிறது. அவர்கள் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி வெற்றியாளர்களாக உருவாகிறார்கள்.

பப்ஜி ஆன்லைன் கேம்கள்
பப்ஜி ஆன்லைன் கேம்கள்

அதேபோல், ப்ரீ ஃபயர், பப்ஜி, ஆன்லைன் ரம்மி முதலிய ஆன்லைன் கேம் செயலிகளை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும். குற்றங்கள், விபரீதங்கள் நடக்கும்வரை காத்திருந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவற்றையெல்லாம் செய்யவேண்டும்.

அ.தேவநேயன்
அ.தேவநேயன்

மேலும், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக, பிரத்யேகமான வல்லுநர்கள் குழு ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். அதில் குழந்தைகள் நலத்துறை (CWC), சமூக நலத்துறை அதிகாரிகள், உளவியல் மருத்துவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என அரசு மற்றும் அரசுசாராத துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, தகுதிவாய்ந்த வல்லுநர்களை இணைத்து ஒரு ஆணையத்தை ஏற்படுத்தவேண்டும். பள்ளிக்குழந்தைகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வு, ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தவேண்டும். இளம் தலைமுறையினரை பாதிக்கும் வகையிலான மென்பொருள் விளையாட்டு செயலிகளை பட்டியலிட்டு, அவற்றை தடைசெய்வதற்கான ஆலோசனைகளையும் அரசுக்கு வழங்க வேண்டும். இணையக்குற்றங்கள் தடுத்து, இணைய பாதுகாப்பை (Cyber safety) உறுதிப்படுத்தும் வகையில் செயல்படவேண்டும். இவற்றை முறையாக செய்தோமானால் இப்போதிருக்கும் இளம்தலைமுறையினருக்கு, பாதுகாப்பான ஒரு நல்ல எதிர்காலத்தை நம்மால் உருவாக்கித்தரமுடியும்."

குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா:-

``குழந்தைகள் குறைந்த அளவு நேரத்தை செலவிட்டு, ஆன்லைன் கேம்கள் விளையாடினால், அவை பெரிதாக எந்த பாதிப்புகளையும் அவர்களுக்கு ஏற்படுத்துவதில்லை. ஆனால், கொரோனா காலத்தில், குழந்தைகளுக்கான ஒரே பொழுதுபோக்கு அம்சமாக ஆன்லைன் கேம்களே மாறியிருந்தன. மனிதர்களின் தொடர்பே இல்லாமல், நாளொன்றுக்கு 6, 7 மணிநேரங்களைத் தாண்டி தொடர்ச்சியாக ஆன்லைன் கேம்கள் விளையாடும் நிலைக்கு அவர்கள் சென்றனர். இப்படி சமூக தொடர்பே இல்லாமல், தனியே அமர்ந்து விளையாடிய குழந்தைகள் பெரும்பாலானோர் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பூங்கொடி பாலா
பூங்கொடி பாலா

விளையாட்டைப் பொறுத்தவரை வெற்றி-தோல்வி ஆகிய இரண்டு விஷயங்கள் தான். நீ வெற்றிபெற வேண்டுமானால், நீ மற்றவர்களை கொலைசெய்ய வேண்டும் என்பதுதான் அவர்கள் விளையாடும் பப்ஜி, ப்ரீ ஃபயர் போன்ற அனைத்து விளையாட்டுகளின் அடிப்படையாகவே இருக்கிறது. நான் வெற்றி பெறுவதற்காக என்னவேண்டுமானாலும் செய்வேன், யாரைவேண்டுமானாலும் கொல்வேன் என்ற வன்முறை (Violence) மனநிலைக்கு தங்களை அறியாமலேயே மாறுகிறார்கள். அவர்களை அதிக சுயநலம் (Selfish) கொண்டவர்களாகவும், இரக்ககுணம் (Empathy) அற்றவர்களாகவும் அந்த விளையாட்டுகள் மாற்றுகின்றன.

பப்ஜி கேம்
பப்ஜி கேம்

அதனால்தான், விளையாட்டில் தன்னை தோற்கடிப்பவர்களை உண்மையாகவே தாக்கவும் குழந்தைகள் துணிகிறார்கள். விளையாடுவதற்காக சொந்த வீட்டிலிருக்கும் பணம் நகைகளை எடுப்பது, வீட்டைவிட்டு வெளியேறுவது, தடுப்பவர்களை எதிரிகளாக பாவிப்பது, பெற்றோர்களிடம் கை ஓங்குவது போன்ற நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்று வன்முறையை திணிக்கும், இறப்பைக் கொண்டாடச்செய்யும் ஆன்லைன் கேம்களை தொடர்ச்சியாக விளையாடும் குழந்தைகள் தங்களின் முழு குணநலனையே (personality) இழக்கிறார்கள்.

பப்ஜி கேம்; வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சம் மாயம்! - பெற்றோரை அதிரவைத்த சிறுவன்

இவற்றை தடுப்பதற்கு சில வழிகள் இருக்கின்றன. ஒன்று குழந்தைகளிடம் பெற்றோர்கள் போதுமான அளவு நேரத்தை செலவிடவேண்டும். இதுபோன்ற ஆன்லைன் கேம்ஸ்களில் குழந்தைகள் அடிமையாவதற்கு முன்பாகவே அவர்களை கட்டுப்படுத்தவேண்டும். அதாவது, ஆரம்பத்திலேயே நேரக்கட்டுப்பாடு விதிப்பது, Screen Time செட் செய்வது, Password-களை தராமல் இருப்பது, YouTube ஆப்களில் Under 18 கொடுப்பது போன்ற கட்டாய வழிமுறைகளை பெற்றோர்கள் பின்பற்றியாகவேண்டும். முக்கியமாக, குழந்தைகள் அடம்பிடித்துக் கேட்டாலும் அவற்றை கொடுக்காமல் இருக்கவேண்டும். அவர்கள் கேட்கும் எல்லாவற்றுக்கும் Yes சொல்லாமல், No என்பதையும் அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும். இல்லையென்றால், ஆறுமாதங்கள் கழித்து, அவர்கள் முழுமையாக ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகிவிட்டால் அவர்களை கட்டுப்படுத்தமுடியாத சூழல் உருவாகிவிடும். வீட்டிலிருக்கும் பொருள்களை உடைப்பது, போனை உடைப்பது, சொல்பேச்சு கேளாமல் அடம்பிடிப்பது, பெற்றோர்களையே அடிப்பது போன்ற செயல்பாடுகளில் இறங்கிவிடக்கூடும்.

மனநல பாதிப்பு
மனநல பாதிப்பு

அதுபோன்ற சூழ்நிலை உருவானால், குழந்தைகளை தயக்கமில்லாமல் குழந்தைகள் மனநல மருத்துவர்களிடம் (Child Psychiatrist Doctors) ஆலோசனைக்கு (Counseling) அழைத்துவரவேண்டும். அப்போதுதான், ஆன்லைன் தவிர வேறு விளையாட்டுகள் விளையாட இருக்கின்றன. நாம் தனித்திருக்கமுடியாது, சக மனிதர்களிடம் பேசிப்பழக வேண்டும். சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழவேண்டும் போன்ற புரிதல்கள் அவர்களுக்கு ஏற்படும்.

குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் பூங்கொடி பாலா
குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

அதேபோல அரசாங்கமும் இதுதொடர்பான விழிப்புணர்வுகளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தவேண்டும். குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு `life Skills' வகுப்புகள் நடத்துவது, மாதத்துக்கு ஒருமுறை பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களை நடத்துவது, Mobile Addiction, Sexual Harassment போன்று மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தகுதிவாய்ந்த மனநல மருத்துவர்களால் ஆலோசனை முகாம்கள் நடத்துவது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு