Published:Updated:

கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

டெல்லி
பிரீமியம் ஸ்டோரி
News
டெல்லி

இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் நம்பிக்கைகளே ஆட்சியாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படும்.

டெல்லி நகரத்துக்குச் செல்பவர்களெல்லாம் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். இந்து, இஸ்லாமிய மன்னர்கள், தேச பக்தர்கள், உலக மனித விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்களின் பெயர்களே பல தெருக்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும். ஆனால், திடீரென்று `ஔரங்கசீப் மார்க்’ (தெரு) பெயர் மாற்றப்பட்டு, `அப்துல் கலாம் மார்க்’ என்று போடப்பட்டிருக்கிறது. இன்னும் பல முகலாய மன்னர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் பலகைகளை மாற்றுவதற்கு, சில அடிப்படைவாதிகள் குரல் கொடுத்துவருகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஔரங்கசீப் பெயர் எடுத்துவிடப்படுவதும், அதே சாலைக்கு அப்துல் கலாம் பெயர் வைக்கப்படுவதும் எதை வெளிப்படுத்துகிறது? வரலாற்றைக் கட்டமைப்பது பலம் பொருந்திய அரசுகளே. அவற்றில் பெரும்பாலும் பெரும்பான்மையினரின் விருப்பங்களே உள்ளடங்கியிருக்கும். இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் நம்பிக்கைகளே ஆட்சியாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படும்.

 கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

லக்னோ சி.பி.ஐ நீதிமன்ற விசாரணை நீதிபதி எஸ்.கே.யாதவ், தனது 2,300 பக்க தீர்ப்பில், பாபர் மசூதியை இடித்ததற்கான சாட்சிகள் போதாமையையும், இடிப்பதற்கான ரகசிய சதியை சி.பி.ஐ நிரூபிக்கத் தவறிவிட்டது என்பதையும் கூறியதோடு, தீர்ப்பு கூறிய அன்றே பதவியிலிருந்து ஓய்வும் பெற்றுவிட்டார். அவர் கொடுத்த தீர்ப்பு இறுதியானது அல்ல; எனினும், அதன்மீது அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு, பிறகு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு இப்படிக் காட்சிகள் மாறலாம். ஆனால், தீர்ப்புகள் என்னவோ நமது பேரக்குழந்தைகள் காலத்தில்தான் வரக்கூடும்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ‘சத்யமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்று கருத்து தெரிவித்தார். அரசு மற்றும் நீதிமன்றங்களின் லச்சினைகளிலும் இந்த கோஷமே பொறிக்கப்பட்டிருக்கும். `நீதி வென்றதா?’ என்ற கேள்விக்கு தீர்ப்பு வெளியான மறுநாள், டெலிகிராப் நாளிதழில் முதல் பக்கத்தில் கழுதையின் படம் ஒன்றைப் போட்டிருக்கிறார்கள்.

கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

இந்தியாவின் சிறப்பு புலனாய்வுக்குழுவான சி.பி.ஐ எடுத்த ஒரு வழக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிற தென்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உள்ளாகின்றன. விசாரணைக் குற்றவாளிகளாக கூண்டில் நிறுத்தப்பட்டவர்களின் பெயர்களைப் பார்த்தாலே நமக்கு ஒரு விஷயம் புரியும். எல்.கே.அத்வானி முன்னாள் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர். அவரது துறையின் கீழ்தான் சி.பி.ஐ செயல்பட்டுக் கொண்டிருந்தது. முரளி மனோகர் ஜோஷி கல்வி அமைச்சராகவும், உமாபாரதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர்கள். உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங்கும் ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர்.

1992, டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டபோது உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ஏனென்றால், ‘மசூதிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது’ என்ற உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு அந்த அரசுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி மசூதி இடிக்கப்பட்டதால், நீதிமன்ற கண்டனத்துக்குள்ளானதோடு, மாநில முதல்வருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. காலையில் தனது பரிவாரங்களுடன் நீதிமன்றம் வந்த முதல்வர், மாலையில் வீடு திரும்பியது அந்த தண்டனையையே கேலிக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பெருமையுடன், ‘நான் பாபர் மசூதியை இடிக்கும்போது துப்பாக்கிச்சூடு நடத்தக் கூடாது என்று காவல்துறைக்கு எழுத்து மூலமாக உத்தரவிட்டேன். அதனால் ஒரு கரசேவகர்கூட உயரிழக்கவில்லை’ என்று குறிப்பிட்டார் கல்யாண் சிங்.

கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

மசூதி இடிப்பு இந்தியா முழுவதும் பரவலான கோபக்கணைகளை எழுப்பியதோடு, நூற்றுக்கணக்கான உயிர்ச் சேதங்களையும் விளைவித்தது. ‘கல்யாண் சிங் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையும் வலுத்தது. `ஆட்சி பறிபோய்விடுமோ...’ என்று பரிதவித்த அவர், அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவிடம் தனது அரசைக் கலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும், அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

மசூதியை இடித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டாடியவர்கள், உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஏழாண்டு ஆட்சியை இழந்தாலும், கட்சியை பலப்படுத்திக்கொண்டார்கள். 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் 73 தொகுதிகளில் வெற்றிபெற்றதுடன், மத்தியிலும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். பிறகு, 2017-ல் உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.

`உலகமே பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சிகளின் கேமராக்களில் பதிவான 500 வருடங்கள் பழைமையான பாபர் மசூதியை இடித்ததற்கு, ஒரு கிரிமினல் வழக்குகூட கிடையாதா?’ என்ற கேள்வி எழுந்துவிடும் என்பதால், கடமைக்கு ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதேசமயத்தில், கல்யாண் சிங் முதல் குற்றவாளியாக ஆக்கப்பட்டுவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை 2014-ல் ராஜஸ்தானின் ஆளுநராக நியமித்தார்கள். அரசமைப்புச் சட்டத்தின் 361-வது பிரிவில், குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநர்களுக்கும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவரும் 2019-ல் தனது பதவிக்காலத்தை முடித்துவிட்டுத் திரும்பிவிட்டார். ஆனால், வழக்கோ முடிவதாக இல்லை.

ராமர் கோயில் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், `பாபர் மசூதி இடிப்பு மிகக் கொடூரமான செயல் மட்டுமன்றி, சட்டத்தின் ஆட்சியையே கேள்விக்குள்ளாக்கியது’ என்று கோபமாகக் குறிப்பிட்டதுடன், வழக்கை 2020, ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிப்பதற்கு உத்தரவிட்டது. பின்னர், தொற்றுநோய் காரணமாக ஒரு மாத நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.

இடையே, ‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்குக் கொடுக்க வேண்டும்’ என்று பா.ஜ.க தனது முக்கிய அரசியல் கோரிக்கையாக வைத்ததோடு, அதன் தலைவர் அத்வானி குஜராத் சோமநாதர் கோயிலிலிருந்து ரதயாத்திரையாகப் புறப்பட்டது நாடு முழுவதும் கலவரத்தைத் தூண்டியது. `ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் எழுந்தது.

கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

அந்தச் சமயத்தில்தான், ‘நாட்டிலுள்ள பிரச்னைகளையெல்லாம் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட நீதிமன்றங்களில் தீர்த்துவிட முடியாது; பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை ஆட்சியாளர்கள் புறக்கணித்துவிட முடியாது’ என்றெல்லாம் புதிது புதிதாக முத்துகளை உதிர்க்க ஆரம்பித்தனர் பா.ஜ.க தலைவர்கள். பாபர் மசூதி நிலம் சம்பந்தமான சொத்து வழக்கு நீதிமன்றங்களில் நடக்கிறதே என்று அவர்கள் அமைதியாகச் செல்ல விரும்பவில்லை. மாறாக, தாங்கள் அதிகாரத்திலிருந்த காலகட்டங்களில் சூட்சுமமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். கோயில் கட்டுவதற்கான செங்கற்களை நாடு முழுவதும் தயார் செய்து அயோத்தியில் கொண்டு சேர்த்தனர். ராஜஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான சிற்பிகள் வரவழைக்கப்பட்டு, இரவு பகலாக கோயிலின் கல்தூண்கள் வடிவமைக்கப்பட்டன.

மசூதியைச் சுற்றியிருந்த நிலங்களை மத்திய பா.ஜ.க அரசு, நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் கையகப்படுத்தியது. அந்த நடவடிக்கையை ‘சட்டப்படி செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. பாபர் மசூதியில் தொழுகை நடக்கவில்லையென்றாலும், அதன் ஒரு பகுதியில் ராமர் சிலைக்கான வழிபாடுகள் தொடர்ந்து நடத்துவதற்கு நீதிமன்றங்கள் அனுமதித்தன. `வழிபாட்டுத்தலம் யாருக்குச் சொந்தம்...’ என்ற வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னரே இத்தனை ஏற்பாடுகள்... அப்படியென்றால், அவர்களுக்கு நீதிமன்றங்கள்மீது எத்தகைய ‘நம்பிக்கை’ இருந்திருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

தலைமை நீதிபதி கோகாய் தலைமையில் அமைந்த அரசியல் சாசன அமர்வு, ராமர் கோயில் விவகாரத்தில் விசித்திரமான தீர்ப்பொன்றை அளித்தது. ‘பாபர் மசூதி அமைந்திருக்கும் நிலத்தில், ஏற்கெனவே இந்து கோயில் இருந்ததற்கான தடயங்கள் நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், 500 வருடங்கள் தொடர்ச்சியாக இந்துக்கள் அங்குதான் ராமர் தோன்றினார் என்ற நம்பிக்கையுடன் வழிபட்டுவருகின்றனர். அதனால், இடிக்கப்பட்ட மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலங்களை மத்திய அரசு ஏற்படுத்தக்கூடிய ஓர் அறக்கட்டளை வசம் ஒப்படைத்து, ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம்’ என்ற அதிர்ச்சியான தீர்ப்பை நீதிபதிகள் தங்களது சிறப்பு அதிகாரத்தின் மூலம் வழங்கினர். ஆக பா.ஜ.க, ‘சட்டங்களால் தீர்க்க முடியாது; மக்களின் நம்பிக்கையைக் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று கூறிவந்தது நீதிமன்றத் தீர்ப்பிலும் எதிரொலித்தது.

இப்போது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த வழக்கில், ‘பத்திரிகைக் குறிப்புகளைக் கொடுத்த சி.பி.ஐ., அந்தச் செய்திகள் வெளியான முழுச் செய்தித்தாள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. காணொளிக் காட்சிகள் பதிவான குறுந்தகடுகளை, சீலிட்ட உறையில் நீதிமன்றத்துக்குத் தரவில்லை’ என்று நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார். ‘மசூதியை இடிப்பதற்கு ஒன்றுகூடி ரகசியச் சதி தீட்டியதற்கான சாட்சியம் இல்லை’ என்று கூறிய நீதிபதி, இந்திய தண்டனைச் சட்டத்தின் 149-வது பிரிவைப் பார்க்க மறந்துவிட்டார். அதன்படி, சட்டவிரோத கும்பலில் இருக்கும் ஒவ்வொரு நபரும், அந்த கும்பல் செய்யும் குற்றங்களுக்கான சதியிலும் ஈடுபட்டிருப்பார்கள் என நம்பலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

ரத யாத்திரையில் தொடங்கி இன்று ராமர் கோயிலுக்கான பூமி பூஜையும் முடிந்துவிட்ட சூழ்நிலையில் ஒரு மாவட்ட நீதிபதி மசூதி இடிப்பில் வேறு என்ன தீர்ப்பு கொடுத்திருக்க முடியும்? அரசு மற்றும் கட்சி இயந்திரங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியதுடன், மக்களிடமும் செய்த பிரசாரங்களின் விளைவு, ‘குற்றவாளிகள்’ என்று நிறுத்தப்பட்டவர்கள் இன்று ராம பக்தர்களாகக் காட்சியளிக்கிறார்கள். தீர்ப்பு கிடைத்தவுடன் காணொளியில் ஆஜரான அத்வானி சொன்ன வார்த்தை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பதே.

கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பது என்பதற்கு இதைவிட நல்ல விளக்கம் இருக்க முடியாது!