Published:Updated:

பாலகோட்டில் `ஆபரேஷன் குரங்கு' நடந்த தினம் இன்று... தீவிரவாதச் செயல்கள் குறைந்துவிட்டனவா?

பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அபிநந்தன்
பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அபிநந்தன்

பாகிஸ்தானில், கைபர் பக்துன்வா என்ற மாகாணத்தில், பாலகோட் என்ற பெயரில் நகரம் ஒன்றும், லைன் ஆஃப் கன்ட்ரோலைத் தாண்டியதும் 5 கிலோ மீட்டர் தொலைவில் பாலகோட் என்ற பெயரில் சிறிய கிராமம் ஒன்றும் உள்ளன.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்க இந்தியா எடுத்த முடிவு, பாகிஸ்தானுக்கு அரசியல்ரீதியாக உலக நாடுகளில் பின்னடைவை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி, இந்திய விமானப்படையைச் சேர்ந்த மிராஜ் -2000 ரக விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பாலகோட் சுற்றுவட்டாரப் பகுதியில் இயங்கிவந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாத முகாம்கள்மீது குண்டுகளை வீசின. இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பான ஸ்பைஸ் 2000 ரக வெடிகுண்டுகள் ஐந்து, தீவிரவாதிகள் தங்கியிருந்த கட்டடத்தின் மீது விழுந்தன. இந்த ரக குண்டுகள் கட்டடத்தின் மேற்பகுதியைக் குடைந்து உள்ளே புகுந்து தாக்கும் தன்மையுடையவை. அதிகாலை 3.30 மணிக்கு, தீவிரவாதிகள் முகாம்மீது குண்டுகள் வீசப்பட்டதால், உறங்கிக்கொண்டிருந்த தீவிரவாதிகள் அத்தனை பேரும் இறந்துபோனதாக இந்திய விமானப்படை தெரிவித்தது.

பாலகோட் ஜெய்ஷ் இ முகமது முகாம்
பாலகோட் ஜெய்ஷ் இ முகமது முகாம்

எல்லைக்குள் புகுந்து இந்தியா தாக்கியதால், பாகிஸ்தான் அதிர்ந்துபோனது. உலகிலேயே அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரு நாட்டின்மீது, அணுஆயுத பலம் கொண்ட மற்றோரு நாடு வான் வெளித் தாக்குதலை நடத்தியது இதுதான் முதல் முறை. 'ஆபரேஷன் குரங்கு' (Operation Bandar) என்று இந்தியா இந்தத் தாக்குதலுக்கு ரகசியப் பெயரைச் சூட்டியிருந்தது. பாலகோட் தாக்குதலுக்கு இந்தப் பெயரைச் சூட்ட ஏதும் முக்கியக் காரணம் இருக்கிறதா என்று விமானப்படை அதிகாரிகளிடத்தில் கேட்ட போது, 'ராமாயண காலத்தில் இருந்தே இந்தியாவில் நடைபெறும் போர்களில் குரங்குகளின் பங்களிப்பு இருந்துவந்துள்ளது. அனுமன், இலங்கையையே அழித்தவர். அதனால், பாலகோட் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் குரங்கு' என்ற பெயரைச் சூட்டினோம்'' என்றனர்.

இந்தியா நடத்திய தாக்குதலால் நிலைகுலைந்துபோன பாகிஸ்தான், ''இந்திய விமானப்படை விமானங்கள் வீசிய குண்டுகள், காடுகள் மீதுதான் விழுந்தன. இந்தியக் குண்டு வீச்சில் தீவிரவாதிகள் யாரும் கொல்லப்படவில்லை'' என்றது. ஆனால் இந்தியாவோ, 80-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறியது. எனினும், இந்தியா குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பாலகோட் பகுதிக்கு இதுவரை சர்வதேச பத்திரிகையாளர்களை பாகிஸ்தான் அழைத்துச் செல்லவில்லை. பிறகு, இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்க காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டிச் சென்ற இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், அந்த ராணுவத்திடம் பிடிபட்டதும், சர்வதேச நாடுகள் தந்த நெருக்கடியால் பிறகு அவரை பாகிஸ்தான் விடுவித்ததும் வேறு கதை!

புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியம்
புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியம்

பாகிஸ்தானில், கைபர் பக்துன்வா என்ற மாகாணத்தில், இந்திய எல்லையிலிருந்து 50 கி.மீ தொலைவில் பாலகோட் என்ற பெயரில் நகரம் ஒன்றும், லைன் ஆஃப் கன்ட்ரோலைத் தாண்டியதும் இந்திய எல்லையையொட்டி, 5 கிலோ மீட்டர் தொலைவில் பாலகோட் என்ற பெயரில் சிறிய கிராமம் ஒன்றும் உள்ளன. இந்தக் கிராமத்தில் வசித்த மக்களை ஏற்கெனவே, அந்த நாட்டு ராணுவம் அப்புறப்படுத்திவிட்டது. பாலகோட்டில் இந்தியா குண்டு வீசியபோது, ஆள் நடமாட்டம் இல்லாத இந்த கிராமத்தில்தான் இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசியதாக உலக நாடுகளிடத்தில் பாகிஸ்தான் கூறியது.

ஆனால், பாலகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியாவில் பாகிஸ்தான் மேற்கொண்டிருந்த தீவிரவாதச் செயல்கள் முற்றிலும் குறைந்துபோய்விட்டன என்று சொல்லலாம். இந்தத் தகவலை இந்திய விமானப்படை முன்னாள் தளபதி பி.எஸ். தனோவா உறுதிப்படுத்தியுள்ளார்.

அபிநந்தன், பி.எஸ். தனோவா
அபிநந்தன், பி.எஸ். தனோவா
VPN பயன்படுத்துவது சட்டவிரோதமா... காஷ்மீரில் என்னதான் நடக்கிறது?

இதுகுறித்து தனோவா கூறுகையில், ''பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தியதன் காரணமாக, இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இனிமேலும் இந்தியாவில் தீவிரவாதச் செயல்களை செய்து கொண்டிருந்தால், இந்தியா இதேபோன்ற தாக்குதலையோ அல்லது பாலகோட்டைவிட மிகப் பெரிய தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது என பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளதே இதற்குக் காரணம்'' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு