Published:Updated:

கடன் ‘ரைட் ஆஃப்’ - “தேசத்தின் ஒரு ரூபாய்கூட பறிபோகாது!”

கே.டி.ராகவன்
பிரீமியம் ஸ்டோரி
கே.டி.ராகவன்

கே.டி.ராகவன் திட்டவட்டம்

கடன் ‘ரைட் ஆஃப்’ - “தேசத்தின் ஒரு ரூபாய்கூட பறிபோகாது!”

கே.டி.ராகவன் திட்டவட்டம்

Published:Updated:
கே.டி.ராகவன்
பிரீமியம் ஸ்டோரி
கே.டி.ராகவன்
‘விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் பெற்ற 68,000 கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது’ என்ற செய்தி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கடந்த 6.5.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘தெரிந்தது 68,000 கோடி... தெரியாதது 15 லட்சம் கோடி! ரைட் ஆஃப் ரகசியத்தின் பின்னணி’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் இந்த ‘ரைட் ஆஃப்’ குறித்து மேலும் விரிவான விளக்கம் அளித்துள்ளார் பா.ஜ.க மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“வாராக்கடன்களை ‘ரைட் ஆப்’ செய்வது, வங்கிகளில் நடக்கும் இயல்பான நடவடிக்கை. ஆனால், இதைவைத்து அரசியல் செய்கிறார்கள் என்பதுதான் வேதனை. வாராக்கடன்களை வசூலிப்பதில் தற்போதைய மத்திய அரசும் சரி, முந்தைய வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசும் சரி... ஆக்கபூர்வமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

கடன் ‘ரைட் ஆஃப்’ - “தேசத்தின் ஒரு ரூபாய்கூட பறிபோகாது!”

2002-ம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் வாராக்கடன் வசூல் நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும் வகையில் SARFAESI ACT (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act) கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் வரும் முன்பு, வங்கி சார்ந்த வழக்குகள் சிட்டி சிவில் நீதிமன்றங்களில்தான் நடக்கும். 10 லட்சம் ரூபாய் வசூல் செய்ய வேண்டுமென்றால், 7.5 சதவிகிதம் நீதிமன்றக் கட்டணம் கட்டி வழக்கு நடத்த வேண்டும். இந்தச் சட்டம் வந்த பிறகுதான் தனியாக, கடன் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அதனால் காலதாமதம் குறைந்து வாராக்கடன் வசூல் நடவடிக்கைகள் துரிதமடைந்தன.

மோடி தலைமையிலான மத்திய அரசு, இதற்கென 2016-ம் ஆண்டில் புதிய திவால் சட்டத்தைக் (Bankruptcy and Insolvency Act) கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மார்ச் 2019 வரை, 1 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் வசூல் செய்யப்பட்டுள்ளன. இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். வாராக்கடன்களை ‘ரைட் ஆஃப்’ செய்யும் விஷயத்தில் மூன்று வகையான நடைமுறைகள் உண்டு.

ஒன்று, புருடென்ஷியல் ரைட் ஆஃப் (Prudential write off). ஒருவர், கடனுக்கு இணையான சொத்தை அடமானம் வைத்து கடன் பெற்றிருக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். கடனைக் கட்டாத நிலையில் ரைட் ஆஃப் செய்து, தீர்ப்பாயத்தில் ஆணை பெற்று சொத்தை விற்பனைக்குக் கொண்டுவந்துவிடுவார்கள். இதில் வங்கிக்கு பெரிய இழப்புகள் இருக்காது.

இரண்டாவது, ஆக்சுவல் ரைட் ஆஃப் (actual right off). எந்தச் சொத்தும் அடமானம் வைக்காமல் ஒருவர் கடன் பெற்றிருக்கிறார். கொஞ்சம் அசலைச் செலுத்தியிருப்பார். வட்டியும் கொஞ்சம் கட்டியிருப்பார். முழுக்கடனையும் திருப்பிச் செலுத்தும் முன்னர் இறந்துவிட்டார் என வைத்துக்கொள்ளுங்கள். அதை விசாரணையில் உறுதிசெய்து, கடனை வசூலிக்க வழி இல்லாத நிலையில் அதைத் தள்ளுபடி செய்துவிடுவார்கள்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

மூன்றாவது, ஒன் டைம் செட்டில்மென்ட் (One Time Settlement). ஒருவர் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அவரால் கடனைக் கட்ட முடிய வில்லை. ‘என்னால் முழுமையாகக் கட்ட முடியாது. வட்டியைக் குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று அவர் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் வங்கி, தொகையைக் குறைத்து அவரிடம் ஒரே தவணையில் கடனை வசூலிக்கலாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ரிசர்வ் வங்கி கொடுத்த தகவலில் மிகத் தெளிவாக, ‘இது புருடென்ஷியல் ரைட் ஆஃப்’ எனத் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் நடந்துள்ளது. அவர்களும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரைட் ஆஃப் செய்துள்ளார்கள். அதை தவறு என்று சொல்ல மாட்டேன். கணக்கை கிளியர் செய்து, ரைட் ஆஃப் நடவடிக்கை எடுத்து தனிக்கவனம் செலுத்தி அந்தக் கடன்களை வசூல் செய்வதற்கான நடவடிக்கை அது.

தள்ளுபடி வேறு... ‘ரைட் ஆஃப்’ வேறு. ‘விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி’ என அரசு அறிவித்தால், விவசாயி கட்ட வேண்டிய கடனை அரசு ஈடுசெய்யும். அந்த விவசாயி அடுத்து வங்கிகளில் கடன் பெற முடியும். ஆனால், ‘ரைட் ஆஃப்’ செய்யப்பட்டவர்கள் வங்கிகளில் கடன் பெற முடியாது. தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் மூலம் அவர்கள்மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விஜய் மல்லையா, நிரவ் மோடி, சோக்ஸி ஆகிய மூவரின் 18,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளன. விரைவில் அவை விற்பனைக்கு வரும். வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் இவர்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக நடந்துவருகின்றன. தேசத்தின் பணம் ஒரு ரூபாயைக்கூட எங்கள் அரசு பறிபோக விடாது. ஆனால், இதையெல்லாம் யாரும் பேசுவதில்லை. எங்களை திட்டமிட்டு குறை சொல்லி அரசியல் செய்கிறார்கள்” என்றார் ராகவன்.