Election bannerElection banner
Published:Updated:

காஸ் சிலிண்டர் விலை ரூ.835; வங்கி கணக்குக்கு வரும் மானியம் எவ்வளவு? - அதிரவைக்கும் உண்மை!

காஸ் சிலிண்டரின் விலை உயர்வு
காஸ் சிலிண்டரின் விலை உயர்வு

கடந்த மாதம் சமையல் காஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாய் கூடியிருந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்திலேயே 25 ரூபாய் அதிகரித்திருக்கிறது.

கடந்த டிசம்பர் 1-ம் தேதி, 610 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, சென்னையில் இன்று 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 100 ரூபாய் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், இரண்டு நாள்களே கடந்திருக்கும் நிலையில், இந்த மார்ச் மாதத் தொடக்கத்திலேயே 25 ரூபாய் உயர்த்தப்பட்டு, 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்

தமிழகத்தில் சமையல் காஸ் சிலிண்டரின் விலை 800 ரூபாயைத் தாண்டுவது இது முதன்முறையல்ல. 2015-ம் ஆண்டு சமையல் காஸ் சிலிண்டரின் விலை 998 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போது 563 ரூபாயை அரசு மானியமாக வழங்கியது. அதாவது 450 ரூபாய்க்கு மேல், எவ்வளவு விலை ஏறினாலும் அந்தத் தொகையை அரசு மானியமாகக் கொடுத்துவிடும் என்ற நிலை இருந்தது.

2004-ம் ஆண்டு கணக்கின்படி, சென்னையில் ஒரு சமையல் காஸ் சிலிண்டரின் விலை 261 ரூபாய். பத்து வருடங்கள் கடந்து 2014-ம் ஆண்டில் 401 ரூபாயாக உயர்ந்திருந்தது. அப்போது, அரசு நேரடியாக எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியத்தைக் கொடுத்து, குறைந்த விலையில் மக்களுக்குச் சமையல் காஸ் சிலிண்டரை வழங்கிவந்தது.

சமையல் காஸ் சிலிண்டர்கள்
சமையல் காஸ் சிலிண்டர்கள்

2014-ம் ஆண்டில் மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுக்காமல், நேரடியாக மக்களுக்கே வழங்கும் திட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்துக்கு அப்போதைய எதிர்க்கட்சியான பா.ஜ.க உள்ளிட்ட பல கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததுமே தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி, மானியத்தை மக்களின் வங்கிக் கணக்குக்கே செலுத்தும் திட்டத்தைப் பெரிதும் ஊக்குவித்தது. மானியம் பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துவந்த நிலையில், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என்று மாற்றி அமைத்தது மத்திய பா.ஜ.க அரசு. அங்குதான் இந்தக் குளறுபடி தொடங்கியது என்கின்றனர் எரிபொருள்துறையில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகள். உண்மையைச் சொல்லப்போனால், தற்போதைய நிலையில் சமையல் காஸ் சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்வது யார் என்பது புரிந்தபாடில்லை என்கின்றனர் .

மானியம் என்னும் மர்மம்!

சமையல் காஸ் சிலிண்டரின் விலை உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னர்தான், அந்த விவரம் எண்ணெய் நிறுவனங்களுக்கே தெரியவருகிறது என்கின்றனர். அப்படியானால், அதன் விலையை நிர்ணயிப்பது யார்? இந்தக் கேள்விக்கு மத்திய அரசு தரப்பு மட்டுமே பதிலளிக்க முடியும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

குறைந்துவரும் மானியம்:

வ்ங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப்படும் என்றபோது, மக்கள் கையிலிருந்து கொடுக்கும் தொகை அதிகமாக இருந்தது. இருப்பினும் மானியம் கிடைக்கிறது என்பதால் மக்கள் அதை வேறு வழியின்றி பொறுத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை, மானியமே இல்லாத நிலையை நோக்கி, அரசு நம்மை நகர்த்திக்கொண்டிருக்கிறது என்பது.

2015-ம் ஆண்டு, 998 ரூபாய்க்கு சமையல் காஸ் சிலிண்டரின் விலை உயர்ந்திருந்தாலும், அப்போது பொதுமக்களைப் பெரிய அளவில் அது பாதிக்கவில்லை. காரணம், அப்போது மானியமாகக் கிடைத்த தொகை 563 ரூபாய். தற்போது ஒரு சமையல் காஸ் சிலிண்டரின் விலை 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது மக்களுக்குக் கிடைக்கும் மானியம் எவ்வளவு தெரியுமா, வெறும் 24.95 ரூபாய்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்ட மானியத் தொகையின் பட்டியல் இங்கே...

சமையல் எரிவாயு விலையும், மானியமும்
சமையல் எரிவாயு விலையும், மானியமும்

மேலே உள்ள பட்டியலைக் காணும்போது, 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 191.95 ரூபாயாகக் கொடுக்கப்பட்ட மானியம், மே மாதத்திலிருந்து பெருவாரியாகக் குறைக்கப்பட்டது. தற்போது வெறும் 24.95 காசுகளாக மட்டுமே இருக்கிறது.

மானியத்துக்கான முக்கியத்துவம் மத்திய பட்ஜெட்டில் குறைக்கப்பட்டிருப்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். 2020 - 2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு மானியமாக 40,915 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்ட 2021-2022-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அந்த மானியம் வெறும் 12,995 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.

முன்னொரு காலத்தில் பெட்ரோலுக்கு மானியம் வழங்கிக் கொண்டிருந்த அரசு அதைப் படிப்படியாக நிறுத்திவிட்டது. இப்போது நமக்கு பெட்ரோலுக்கு மானியம் கிடைப்பதில்லை. அதேபோல இப்போது சமையல் காஸ் சிலிண்டருக்கும் படிப்படியாக மானியம் குறைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கத்திலிருந்து எழுந்து நிற்க முடியாமல் தவிக்கும் மக்களின் வாழ்க்கை மீது, கூடுதலாக 14.2 கிலோ சிலிண்டரை பாரமாக ஏற்றியிருக்கிறது மத்திய அரசு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு