Published:Updated:

சீறும் ஷீரடி... பதிலடி கொடுக்கும் பத்ரி!

சாய்பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
சாய்பாபா

திரியைக் கொளுத்திய தாக்கரே...

‘எங்கும் நிறைந்து இருப்பவன், தொடக்கமும் முடிவும் அற்றவன்’ என்றுதான் எல்லா மதங்களும் கடவுளைப் பற்றி போதிக்கின்றன. ஆனால் ஒரு சாரார், கடவுளர்கள் எங்கே பிறந்தார்கள் என்று மூலத்தைத் தோண்டியெடுத்து நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார்கள். என்னதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டாலும்கூட, ராம ஜென்ம பூமி சர்ச்சையே அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், மனிதராகப் பிறந்து கடவுளாக வணங்கப்படும் ஷீரடி சாய்பாபா பிறந்த இடம் குறித்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

ஷீரடி சாய்பாபா, உலகம் முழுவதும் பல கோடி மக்களின் இதயங்களில் விருப்ப தெய்வமாக வீற்றிருக்கிறார். மனிதராக அவதரித்து கடவுளாக உருவெடுத்தவர் என்று அவரைக் கொண்டாடு கின்றனர் பக்தர்கள். இந்தியா முழுவதும் சாய்பாபாவுக்கு கோயில்கள் இருந்தாலும், மகாராஷ்டிரத்தில் அகமது நகர் மாவட்டம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயில் முதன்மை யானது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே வந்து வழிபடுகின்றனர். குறிப்பாக, சாய்பாபாவுக்கு உகந்த நாளாக கருதப்படும் வியாழக்கிழமைதோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு குவிகிறார்கள்.

சீறும் ஷீரடி... பதிலடி கொடுக்கும் பத்ரி!

ஆரம்பத்தில் சிறு கிராமமாக இருந்த ஷீரடி, இந்தக் கோயிலை முன்வைத்தே மிகப்பெரிய நகரமாக வளர்ந்துள்ளது. இங்கு இருக்கும் கணிசமான மக்களின் வாழ்வாதாரமும் கோயிலை நம்பியே இருக்கிறது. நட்சத்திர விடுதிகள் தொடங்கி ஏர்போர்ட் வரை இங்கு வரக் காரணம், ஷீரடி சாய்பாபா ஆலயம்தான். இந்த நிலையில்தான் ஷீரடிக்குப் போட்டியாக அதே மாநிலத்தில் இன்னொரு கோயிலை உருவாக்க முயற்சிகள் தொடங்கியிருப்பது பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சமீபத்தில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ‘சாய்பாபா பிறந்த பத்ரி கிராமத்தில் உள்ள சாய்பாபா கோயிலின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது’ என அறிவித்தார். பரபரப்பு உடனே பற்றிக்கொண்டது. உத்தவ் தாக்கரேவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷீரடி மற்றும் அதைச் சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்பட்டன. இதனால், பக்தர்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். ஹோட்டல்கள் அடைக்கப்பட்டதால், சாய் போஜன சாலையில் வழக்கத்தைவிட கூடுதலாக உணவு சமைத்து பக்தர்களின் பசியாற்றியது கோயில் நிர்வாகம்.

சதாஷிவ் லோகாண்டே - சஞ்சய் ஜாதவ் - தங்கராஜ்
சதாஷிவ் லோகாண்டே - சஞ்சய் ஜாதவ் - தங்கராஜ்

‘‘ஷீரடி என்றால் சாய். சாய் என்றால் ஷீரடி. இதுவே பொதுவான நம்பிக்கை. இடையில், திடீரென எங்கிருந்து வந்தது பத்ரி?” என்று சீறுகிறார்கள் ஷீரடி மக்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் பத்ரி கிராம மக்களோ, ‘‘சாய்பாபா பிறந்த எங்கள் கிராமத்தில் உள்ள கோயில் மேம்படுத்தப்பட்டால், ஷீரடியின் முக்கியத்துவம் குறையும். அங்கு வருமானம் அடிபடும். இதனாலேயே அங்கு உள்ள மக்கள் அதை திட்டமிட்டுத் தடுக்கின்றனர்’’ என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா கட்சிக்குள்ளும் புகைச்சல் எழுந்துள்ளது. உத்தவ் தாக்கரேவின் அறிவிப்புக்கு அதே கட்சியைச் சேர்ந்த ஷீரடி தொகுதியின் எம்.பி-யான சதாஷிவ் லோகாண்டே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘‘சாய்பாபா, தன் 16-வது வயதில் ஷீரடிக்கு வந்தார். மக்களுக்கு சேவை செய்து கடவுள் அவதாரமெடுத்தார். அவர் ஒருபோதும் தன் சாதி, சமயம், பிறந்த ஊர் ஆகியவற்றை அடையாளப் படுத்தியதில்லை. அப்படியிருக்கையில், பத்ரியில் சாய்பாபா பிறந்தார் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

2017-ம் ஆண்டு, இந்தப் புண்ணியபூமிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்தார். அப்போது அவர் ‘ஷீரடி, சாய்பாபாவின் கர்ம பூமி; பத்ரி, ஜென்ம பூமி’ எனக் குறிப்பிட்டார். உடனடியாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து உண்மையை எடுத்துரைத்தேன். அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே அவ்வாறு பேசிவிட்டதாக என்னிடம் குடியரசுத் தலைவர் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தவறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்’’ என்று கொந்தளித்துள்ளார்.

ஷீரடியிலிருந்து பத்ரி 273 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. உத்தவ் தாக்கரேவின் அறிவிப்பால் பத்ரி கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பத்ரி கிராமம் அமைந்துள்ள பார்பானி தொகுதி சிவசேனா கட்சி எம்.பி-யான சஞ்சய் ஜாதவ் கூறுகையில், ‘‘சாய்பாபாவின் பிறப்பிடம் பத்ரி என்று, ‘சாய் சரித்திரா’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. பத்ரியில் சாய் பிறந்ததற்கான 29 ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவற்றை முதலமைச்சரிடம் கொடுத்துள்ளோம். ‘பத்ரியில்தான் சாய்பாபா அவதரித்தார்’ என்று அறிவிக்கப் பட்டால், ஷீரடியின் மகிமை குறைந்துவிடும். இதனாலேயே ஷீரடி மக்கள் எங்கள் ஊரின் கோயில் மேம்பாட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்கின்றனர். எங்களுக்கு ஒதுக்கப் படும் நிதியைத் தடுக்கவும் முயல்கின்றனர்’’ என்று குற்றம்சாட்டி யுள்ளார்.

சாய்பாபா
சாய்பாபா

சாய்பாபாவுக்கு தமிழகத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். சாய்பாபா பிறப்பிடம் பற்றி அகில இந்திய சாய்பாபா சமாஜ் தலைவர் தங்கராஜிடம் பேசினோம்.

‘‘இப்போதைக்கு இந்த விவகாரத்தை உத்தவ் தாக்கரே கிடப்பில் போடுவதுதான் நல்லது. இரண்டு ஊர் மக்களையும் ஒருங்கிணைத்து குழு ஒன்றை அமைத்து, இந்த விவகாரத்தில் சுமுகமாக முடிவு எடுக்க வேண்டும். அதேசமயம், சாய்பாபா பிறந்த இடமாகச் சொல்லப்படும் பத்ரியை மேம்படுத்துவது ஒன்றும் தவறல்ல. சென்னையைச் சேர்ந்த நரசிம்ம சாமிஜி என்பவர் எழுதிய ‘சாய் சரித்திரா’ புத்தகத்தில், சாய்பாபா பத்ரியில் பிறந்தார் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் சென்று சாய்பாபாவின் மகிமையை விளக்கியவர் நரசிம்ம சாமிஜி. மகாராஷ்டிரத்திலேயே சாய்பாபாவைப் பற்றி தெரியாத பகுதிகளுக்குச் சென்று, அவரைப் பற்றி விளக்கிக் கூறியவர் அவர். `மதராஸி சாமி’ என்றுதான் நரசிம்ம சாமிஜியை வடநாட்டில் அழைப்பர். மயிலாப்பூரில் 1941-ம் ஆண்டில் அவர்தான் `அகில இந்திய சாய் சமாஜ்’ என்ற பெயரில் கோயிலைக் கட்டினார். இந்தப் பெயரைச் சூட்டக்கூட ஷீரடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு, ‘இந்தியாவை தென்னிந்தியா, வடஇந்தியா எனப் பிரிக்க விரும்பவில்லை’ என்று நரசிம்ம சாமிஜி பதிலளித்தார். எந்த ஒரு விஷயத்தைத் தொடங்கும் போதும் சில எதிர்ப்புகள் வருவது இயல்புதான்.

சாய்பாபா தன்னை கடவுள் என்று சொன்னதே கிடையாது. தனக்குமேல் ஒருவர் இருக்கிறார் என்றுதான் சொல்வார். தன்னை ஒரு குருவாகவே சாய்பாபா அடையாளப்படுத்தினார். ஷீரடியில் உள்ள உள்ள ஹோட்டல்கள், லாட்ஜுகள், டிராவல்ஸ் ஆகியவற்றை வைத்து தொழில் செய்பவர்கள்தான், இந்த விஷயத்தைப் பூதாகாரப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

பத்ரியில் உள்ள சாய் கோயில் மேம்படுத்தப் பட்டால், தங்களுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று பயந்து, அவர்கள் இதை அரசியலாக்கு கின்றனர். ஆனால், சாய்பாபாவுக்கு எல்லாம் தெரியும். இந்த விவகாரத்தையும் சாய் நல்லபடியாக முடித்துவைப்பார். நம் நாட்டில் ஆன்மிகத்தையும் அரசிய லாக்குவது தான் வேதனையளிக்கிறது’’ என்றார்.

கடவுளர்களின் கதைகளை ஆள்வோர் எழுதும் காலம் இது!