Published:Updated:

கொரோனா இல்லாத கொங்கு... பச்சை மர்மம்!

கொரோனா பாதிப்புப் பட்டியலில் முதல் 10 இடங்களில் கொங்கு மண்டலத்திலிருந்து ஒரு மாவட்டம்கூட இல்லை.

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருக்கிறது. ஆனால், கொங்கு மண்டலத்தில் கொரோனா இல்லை என்று முரசு கொட்டுகிறது ஆளுங்கட்சி. இது உண்மையா என்று விசாரித்தால், ‘கொரோனா ஒழிப்பில் சாதனை’ என்று காட்டிக் கொள்வதற்காக, கொரோனா பரிசோதனைகளைக் குறைத்து ஆளுங்கட்சி நடத்தும் அரசியல் வேதனை என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

கொரோனா தமிழகத்தில் காலூன்றியபோது, இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்களில் ஒன்றாக இடம்பிடித்தது ஈரோடு. அடுத்த சில நாள்களில் கொரோனாத் தொற்றில் சென்னைக்கு அடுத்த இடத்தை எட்டிப்பிடித்தது கோவை. இப்போது? மே 24-ம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பில் மொத்தமுள்ள 16,000-ல் சென்னையின் பங்கு மட்டும் 10,000-க்கும் அதிகம். ஆனால் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் கொரோனா பாதிப்பே இல்லாத பச்சை மண்டலத்துக்கு மாறிவிட்டது.

கொரோனா பாதிப்புப் பட்டியலில் முதல் 10 இடங்களில் கொங்கு மண்டலத்திலிருந்து ஒரு மாவட்டம்கூட இல்லை. அதிலும் கோவையில் திரும்பிய பக்கமெல்லாம், ‘கொரோனாவை கொங்குமண்டலத்தைவிட்டு விரட்டியடித்த கோமானே!’ என்கிற ரேஞ்சுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைப் பாராட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதன் பிறகுதான் கொங்கு மண்டலத்தில் கொரோனா அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியது.

“கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டை. அதனால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இங்கு புரமோஷன் இமேஜுக்காக நடத்தப்படுவதுதான் இந்த ‘பச்சை மண்டல’ அரசியல். உண்மையில், பரிசோதனைகள் குறைந்துபோனதுதான், பச்சை மண்டல மர்மத்துக்கான விடை” என்று வாள் வீசுகின்றன எதிர்க்கட்சிகள்.

கொரோனாவைக் கொங்கு மண்டலத்தில் விதைத்த தாய்லாந்து மதப்பிரசங்கிகளில் ஒருவர், கோவையில் இறந்தார். அப்போது அவர் வேறு காரணத்தால் இறந்தார் என்று சொல்லப்பட்டபோதே, சுகாதாரத்துறைமீது முதல் சந்தேகப்பார்வை விழுந்தது. அடுத்து தன்னார்வலர் ஒருவருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மறுநாளே அவரைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அங்கு பரிசோதனை செய்து நெகட்டிவ் என்று ரிசல்ட் காட்டினார்கள். இதுவும் சர்ச்சையைக் கிளப்பியது. எனவே கொரோனா விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது முன்பே தொடங்கிவிட்டது என்கிறார்கள் விவரமறிந்தோர்.

குறிப்பாக, கொரோனா சிகிச்சையில் பணியாற்றும் மருத்துவர்கள் வெளியே பேசவே அஞ்சுகிறார்கள். இப்போதும் பாசிட்டிவ் கேஸ் இருப்பதாகக் கூறும் இவர்கள், வெளியே சொல்ல முடியாத நிலையில் இருப்பதாக முணுமுணுக்கின்றனர். இதற்கேற்ப கொரோனா பாதித்தவர்கள் குறித்த எண்ணிக்கையிலும் குளறுபடி தெரிகிறது.

‘கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 146 பேர்களில் 144 பேர் குணமடைந்துவிட்டனர்; ஒருவர் இறந்துவிட்டார்’ என்று தகவல் சொன்னது சென்னை மீடியா புல்லட்டின். மற்றொருவர் எங்கே என்பதற்கு பதில் தெரியும் முன்பாவே கோவை பச்சை மண்டலத்துக்கு மாறிவிட்டது. கோவை அதிகாரிகளிடம் கேட்டால், ‘145 பேர் குணமடைந்துவிட்டனர், ஒருவர் இறந்துவிட்டார்’ என்று கணக்கு சொல்கின்றனர். தொடர்ந்து, ‘கோவையில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எதுவும் இல்லை’ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துவிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது, அங்கிருந்த ஒன்றரை லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த 70 பேரில் ஒருவர் இறந்துவிட மற்றவர்கள் குணமடைந்தனர். ஆனால், ஒன்றரை லட்சம் பேரில் வெறும் மூவாயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது. ஈரோட்டு அதிகாரிகள் சிறப்பாகப் பணியாற்றியதாக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் பரிசுகளைக்கொடுத்து கொரோனாவுக்கு நிறைவு விழாவே நடத்தி விட்டார்கள்.

கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலம்

திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்துவிட்டதாகக் கூறி, பச்சை மண்டலம் ஆக்கிவிட்டார்கள். ஆனால், அங்கும் கொரனோ தகவல்களை அறிவிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதிகாரிகளுக்குள் உரசல், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் ஆட்சியர், தனி மனித இடைவெளியைப் பின் பற்றாத தொழில் நிறுவனங்கள் என்று அங்குள்ள சூழல் மோசமாக இருப்பதாகவே சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீலகிரியில் ஆரம்பத்தில் இருந்தே பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்படுவ தில்லை. அங்கு 15 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருவர் மட்டும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து நீலகிரி வந்திருந்த ஒன்பது பேருக்குக் கொரோனா பாசிட்டிவ் என்று தகவல் வெளியானது. ஆனால், இரண்டே நாள்களில் அவர்களுக்கு நெகட்டிவ் என்று சொல்லிவிட்டார்கள்.

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் பச்சை மண்டலமான பின்புதான் மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து சேலத்துக்கு வந்த 19 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனாலும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர்கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றே அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த ஒருவரும், லாரி டிரைவர் ஒருவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இறந்து விட்டனர். இருவரின் மரணத்துக்கும் கொரோனா காரணமில்லை என்று அரசு தரப்பில் கூறிவிட்டனர்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ‘‘சென்னையைத் தவிர வேறு எந்த இடத்திலும் கொரோனாப் பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. கொரோனாப் பரிசோதனை ஒன்றுக்கு 4,500 ரூபாய் என்று மத்திய அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. எனவே, நிதி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் சோதனை செய்யாமல் இருக்கிறார்களோ என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆரம்பத்தில் பாதிப்பு அதிகம் இருந்த கோவை, ஈரோடு போன்ற பகுதிகளை, ‘முற்றிலும் பாதிப்பு இல்லை’ என்பது அறிவியல்பூர்வமான அறிவிப்பு ஆகாது. உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவில், அரசியல் செய்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயல். அ.தி.மு.க அரசாங்கம் இதில் அரசியல் செய்யாமல் பரிசோதனைகளைத் துரிதப்படுத்த வேண்டும்” என்றார் அழுத்தமாக.

சிங்காநல்லூர்த் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான நா.கார்த்திக், “கொரோனா தொடர்பான அறிவிப்புகளில் கொங்கு மண்டலத்தில் ஆரம்பத்திலிருந்தே மர்மங்கள் உள்ளன. அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தால் அந்தத் தகவல் வெளியில் பரவிவிடும் என்று இப்போது கொரோனா பாதித்தவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் ரகசிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா அதிகம் பரவவில்லை என்று தகவல் பரப்பி வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்பது ஆட்சியாளர்களின் தவறான கணிப்பு” என்று கொதித்தார்.

கொரோனா இல்லாத கொங்கு... பச்சை மர்மம்!

ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், “நுரையீரல் உள்ளிட்ட பிரச்னைகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிப்பவர்களுக்கு சோதனை செய்ய வேண்டும். தற்போது வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களில் சிலர் பதிவு செய்தெல்லாம் வருவதில்லை. அவர்களை ட்ரேஸ் செய்வதும் கடினம். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டால், அது பெரிய சிக்கலாகிவிடும்” என்று எச்சரித்தார்.

கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ், “ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்படி கோவையில் மட்டும் 14,000 பேருக்குக் கொரோனாப் பரிசோதனை செய்துள்ளோம். கோவையில் ஒன்பது பரிசோதனை மையங்கள் இருக்கின்றன. இவை தவிர ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் பரிசோதனை மையங்களிலும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்வதால் எண்ணிக்கை குறைந்ததுபோல ஒரு தோற்றம் தெரியும். முன்பு, 30 பாசிட்டிவ் கேஸ் வந்தது என்றால், அவர்களின் கான்டக்டில் ஒரே நாளில் 450 பேருக்கு சோதனை செய்ய வேண்டும். இப்போது பாசிட்டிவ் கேஸ் ஏதுமில்லாததால் அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள அவசியமில்லை. இப்போதும் கோவையில் சராசரியாக ஒரு நாளைக்கு 800 பேருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது” என்றார்.

கோவை மண்டல கொரோனாத் தடுப்புக் கண்காணிப்பு அதிகாரியான ஞானசேகரன் ஐ.ஏ.எஸ், “கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் குழுவை அமைத்துத் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினோம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் 100 சதவிகிதம் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படு கின்றனர். வீடுகளில் வசதி இல்லாதவர்களை அரசுப் பொறுப்பில் தனி இடத்தில் வைத்துக் கண்காணிக்கிறோம். நீலகிரியில் ஊரடங்குக்கு முன்பே சுற்றுலாப் பயணி களுக்குத் தடை விதித்ததால் அங்கு கொரோனா முழுக்கட்டுப் பாட்டில் இருக்கிறது’’ என்றார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பேசினோம். ‘‘சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரங்களில்தான் பாதிப்புகள் அதிகம். கோவையில் அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு மக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி னார்கள். மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள்மூலம் சிறப்புக் குழுக்கள் அமைத்துப் பணிகளைச் செய்தோம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் மூலம் பாதிப்பு இங்கு அதிகம் இருந்தது. உடனடியாக அவர்களை ட்ராக் செய்து சிகிச்சையளித்தோம்.

பி.ஆர்.நடராஜன் - நா.கார்த்திக் - ஈஸ்வரன்
பி.ஆர்.நடராஜன் - நா.கார்த்திக் - ஈஸ்வரன்

அவர்களும் நாங்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு, நன்கு ஒத்துழைப்பு வழங்கினர். இப்போது, நிலைமை சீராக இருந்தாலும் இன்னும் கட்டுப்பாடு தேவை என்பதையும் நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். தற்போது, விமான சேவைகள் தொடங்கிவிட்டன. எனவே, இன்னும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்துகிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் தளர்வு செய்யும்போது, நாங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறோம். இப்போதும், தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அதே நடவடிக்கைகள்தான், கொங்கு மண்டலத்துக்கும் செய்யப்படுகின்றன. அதில், அரசியல் எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரும் என்ற நிலையில்தான் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறோம். இப்போதும், எத்தனை கேஸ்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.

சோதனை நடக்கிறதா, நடக்கவில்லையா... தமிழக மக்களுக்கு இது ‘சோதனை’ காலம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு