Published:Updated:

`திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழலை சந்திசிரிக்கவைப்பேன்!’ - துணைவேந்தர்மீது பாயும் துரைமுருகன் 

``திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஊழல் ஊற்றெடுக்கிறது. துணை வேந்தரும் பதிவாளரும் வானத்திலிருந்து குதித்தவர்களைப் போல் மமதையில் இருக்கிறார்கள். பொதுமக்களைத் திரட்டி, ஊழலை சந்தி சிரிக்கவைப்பேன்’’ என்று துரைமுருகன் ஆவேசமாகக் கூறினார்.

துரைமுருகன்
துரைமுருகன்

காட்பாடியில் உள்ள வேலூர் சட்டக்கல்லூரியில், புதிதாகக் கட்டப்பட்ட மாணவியர் விடுதியைப் பயன்பாட்டுக்கு திறக்கக்கோரி, இரண்டு நாள்களுக்கு முன்பு மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் காட்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான துரைமுருகன், இன்று திடீரென சட்டக்கல்லூரிக்குச் சென்று மாணவியர் விடுதியை ஆய்வுசெய்தார்.

வேலூர் சட்டக்கல்லூரி
வேலூர் சட்டக்கல்லூரி

அப்போது, அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், `விடுதியை இன்னும் ஏன் திறக்கவில்லை?’ எனக் கேள்வி கேட்டார். எலெக்ட்ரிக்கல் வேலை மீதம் இருப்பதாக அதிகாரிகள் பதில் கூறினர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ``2017-ல் அனுமதிக்கப்பட்ட இந்த விடுதியை இன்னும் திறக்கவில்லை என்றால், இதைவிட கேவலம் ஒன்றுமில்லை. ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப பொதுப்பணித்துறை அதிகாரியைக் கண்டிப்புடன் கேட்டுள்ளேன்.

அரசு நிர்வாகத்தில் நான் தலையிடுவதில்லை. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை நான்தான் கொண்டுவந்தேன். ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவது சாதாரணமல்ல. இப்போது, புதிய துணைவேந்தர் மற்றும் பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் எந்தத் தகவலையும் எனக்கு அளிப்பதில்லை. பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியவில்லை. ஊழல் ஊற்றெடுப்பதாக எனக்குத் தகவல்கள் வருகின்றன. 

துரைமுருகன்
துரைமுருகன்

எந்தப் பணியைச் செய்தாலும் பொதுப்பணித் துறையினர்தான் செய்ய வேண்டும். ஆனால், தனிப்பட்ட நபர்களைக்கொண்டு கமிஷன் நோக்கில் வேலைகளைச் செய்கிறார்கள். இந்தப் பிரச்னையை விரைவில் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வேன். துணைவேந்தரும் பதிவாளரும் `எங்களை ஆளுநர்தான் நியமித்தார், நாங்கள் யாருக்கும் தலை வணங்கத் தேவையில்லை’’ என்ற மதமதப்புடனும் மமதையுடனும் இருக்கிறார்கள். 

பொதுமக்களைத் திரட்டி, பல்கலைக்கழக ஊழலை சந்திசிரிக்க வைப்பேன். இதுவரை, பல்கலைக்கழக முன்னேற்றம்குறித்த எந்தத் தகவலும் எனக்குத் தெரிவிக்கவில்லை. பட்டமளிப்பு விழா நாளைக்கு என்றால், இன்று மாலை வந்து ஒருவர் அழைப்பு விடுக்கிறார். இதுதான் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு காட்டுகின்ற மரியாதையா? நான், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக இருந்திருக்கிறேன். பல துணை வேந்தர்களை உருவாக்கியிருக்கிறேன்.

திருவள்ளுவர் பல்கலைக் கழகம்
திருவள்ளுவர் பல்கலைக் கழகம்

அவர்கள் இல்லாத நேரத்தில், நான்தான் அந்தப் பொறுப்புகளைக் கவனித்தேன். எனக்கு பல்கலைக்கழக விதிகள் அனைத்தும் தெரியும். ஆண்டவனால் நியமிக்கப்பட்டால்கூட கேள்விகேட்க மக்களுக்கு உரிமை உண்டு’’ என்றார் ஆவேசமாக. தொடர்ந்து, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, `நான் என்ன செய்வது’ என்று துரைமுருகன் வழக்கமான தொனியில் நிருபர்களைக் கிறுகிறுக்கவைத்தார்.